சிவன் பெரியவரா? திருமால் பெரியவரா?


ஸ்ரீ சங்கரநாராயணர் (சங்கரன்கோவில் )

சங்கன் என்னும் நாக அரசன் சிவன் மீதும், பதுமன் என்ற நாக அரசன் திருமால் மீதும் பக்தி கொண்டிருந்தனர். சிவன் பெரியவரா? திருமால் பெரியவரா? என இவர்கள் இருவருக்குள் அடிக்கடி வாதம் எழுந்தது. இதன்பொருட்டு இவர்களுக்கிடையே உக்கிரமான சண்டையும் நடந்தது. இருவரும் தங்கள் கொள்கையில் உறுதியாக இருந்தனர்.

அன்னையின் தவம்

உலக மாதாவான பார்வதி இதைக் கண்டார். ஹரியும், ஹரனும் ஒன்றே என்பதை சங்கன், பதுமனுக்கு மட்டுமின்றி, உலக மாந்தர் அனைவருக்கும் போதிக்க எண்ணினாள் அன்னை.

உலகத்தின் உயிர்களாகிய நாம், சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று பிளவுபடுத்துவது தவறு என்பதை உணர்த்தும் பொருட்டு, திருக்கயிலை மலையில் பரமசிவனிடம், “தாங்கள் நாராயணமூர்த்தியுடன் பொருந்தி இருக்கும் திருக்கோலத்தை காட்டி அருள வேண்டும்” என்று, சிவபெருமானை விட்டுப் பிரியாத அருட்சக்தியாம் உமையம்மை வேண்டினாள்.

அதற்கு இணங்கி சிவபெருமான் அம்மையை நோக்கி, “பூலோகத்தில் புன்னை வனத்தலமாகிய சங்கரன்கோவில் பகுதியில் தவம் செய்து நீ விரும்பிய சங்கரனும், நாராயணரும் இணைந்த திருமேனியை தரிசிக்கலாம்” என்று அருளினார்.

தவமென்றால் சாதாரண தவமல்ல. ஊசி முனை மீது, ஒற்றைக்காலில் நின்றபடி கடும் தவமிருந்தாள் லோக மாதா.

சங்கரன்கோவில் கோமதியம்மன்

ஆடி உத்திராடம்

அன்னைக்கு அருள் தரும் வகையில் இடப்பக்கத்தில் சக்திக்கு இடமளித்து அர்த்தநாரீஸ்வரராக தோன்றி உலகுக்கு உணர்த்திய பெருமான், அரனும், அரியும் ஒருவரே என்பதை உணர்த்தும் வகையில், விஷ்ணுவுடன் இணைந்து சங்கரநாராயணராக காட்சி தந்தார். பின்னர், அம்பிகையின் வேண்டுதலுக்காக சங்கர லிங்கமாகவும் எழுந்தருளினார். அந்த நன்னாளே ஆடித்திங்கள் உத்திராடம் நட்சத்திர நன்னாள். அதுவே ஆடித்தபசு நன்னாள். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலே புன்னைவன தலம் ஆகும்.

சங்கரநாராயணர் திருக்கோலம்

வலப்பாகத்தில் சிவனாகவும், இடப்பாகத்தில் விஷ்ணுவாகவும் சங்கரநாராயணர் காட்சி தருகின்றார்.

சிவனுக்குரிய வலப்பாகத்தில் தலையில் கங்கை, பிறைச்சந்திரன், அக்னி, ஜடாமுடி ஆகியவை உள்ளன. காதில் தாடங்கம், கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் ஆடை இருக்கின்றன. திருவாசியில் நாக வடிவில் சங்கன் குடை பிடித்தபடி இருக்கிறான்.

திருமாலுக்குரிய இடப்பாகத்தில் நவமணி கிரீடம், காதில் மாணிக்க குண்டலம், மார்பில் துளசிமணி மற்றும் லட்சுமி மாலை, கையில் சங்கு, இடுப்பில் பீதாம்பரம் ஆகியவை இருக்கின்றன. இவர் பக்கமுள்ள திருவாசியில் நாக வடிவில் பதுமன் குடை பிடிக்கிறான்.

துளசியும், விபூதியும்

சங்கரநாராயணர் கோயிலில் மூன்று சன்னதிகள் உள்ளன. சிவன், அம்பாள் சன்னதிகளுக்கு நடுவில் சங்கரநாராயணர் சன்னதி உள்ளது. இச்சன்னதியில் காலை பூஜையில் மட்டும் துளசிதீர்த்தம் தரப்படும். மற்ற நேரங்களில் விபூதி தருகின்றனர். பூஜையின் போது சிவனுக்குரிய வில்வம், பெருமாளுக்குரிய துளசி மாலைகளை அணிவிக்கிறார்கள். மாதந்தோறும் சிவராத்திரி, ஏகாதசி நாட்களில் சங்கரநாராயணர் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக, பூஜை நடக்கும். ஆடித்தபசு விழாவன்று மட்டும் அம்பாளுக்கு காட்சி தர இவர் வெளியே புறப்பாடாகிறார். அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயிலில் சங்கரலிங்க சுவாமி, சங்கரநாராயண சுவாமி, கோமதி அம்பாள் ஆகிய மூன்று சன்னதிகள் உள்ளன. தல விருட்சமாக புன்னை மரம் விளங்குகிறது.

ஆடித்தபசு தரிசனம் - 1...

சங்கரன்கோவில் ஆலய கோபுரம்

x