காக்கும் கார்த்திகைச் செல்வன் - 35


திருவிடைக்கழி திருக்குராத்துடையார்

முருகப்பெருமான் குடி கொண்ட தலங்களில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற தலங்களில் ஒன்றாக நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள திருவிடைக்கழி திருக்குராத்துடையார் கோயில் கருதப்படுகிறது. முருகப்பெருமான் பாப விமோசனம் பெற்ற தலமாகவும், திருப்பல்லாண்டு பாடப்பெற்ற தலமாகவும், அதைப் பாடிய சேந்தனார் முக்தி பெற்ற தலமாகவும் இத்தலம் விளங்குகிறது.

மயிலாடுதுறையில் இருந்து 21 கி.மீ தொலைவிலும், திருக்கடையூரில் இருந்து 6 கி.மீ தொலைவிலும் உள்ள இக்கோயிலில்தான் முருகப்பெருமானுக்கும் தெய்வானைக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது என்பது தனிச்சிறப்பு. இதை வெளிப்படுத்தும் விதமாக, இங்குள்ள தெய்வானையின் முகம் வெட்கத்தால் சற்று சாய்ந்தது போல் காணப்படும்.

தல வரலாறு

சூரபத்மனை வதம் செய்த முருகப்பெருமான், சற்று ஓய்வெடுக்கும் சமயம், சூரனின் இரண்டாவது மகன் ஹிரண்யாசுரன், முருகப் பெருமானை போருக்கு அழைத்தான். ஆனால் பித்ரு கடன் செய்ய நினைத்து, போரில் இருந்து பின்வாங்கி, சுறாமீன் வடிவம் கொண்டு தரங்கம்பாடி கடலுக்குள் ஒளிந்து கொண்டான். சிறந்த சிவபக்தனான ஹிரண்யாசுரனை வீழ்த்த, முருகப்பெருமான் தனது அன்னை பராசக்தியை வேண்டினார், அன்னையின் அருள்பெற்று முருகப் பெருமான் ஹிரண்யாசுரனை மாய்த்தார். இதன் விளைவாக, சிவபக்தனை மாய்த்த பாவம், முருகப்பெருமானை தொற்றிக் கொண்டது.

தனது பாவத்தைப் போக்கிக் கொள்ள, அன்னையிடம் யோசனை கேட்டார் முருகப் பெருமான். அவரது ஆலோசனையின்படி, முருகப் பெருமான், இத்தலத்தில் உள்ள குரா மரத்தடியில் அமர்ந்து சிவபெருமானை நோக்கி தவம் மேற்கொண்டார். முருகப்பெருமானின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் அவருக்கு பாப விமோசனம் அளித்தார். மேலும், தன் மகனான முருகப்பெருமானை, இத்தலத்திலேயே இருந்து அருள்புரியுமாறு கேட்டுக்கொண்ட சிவன், அவருக்கு பின்புறத்திலேயே தானும் அமர்ந்து கொண்டார்.

குரா மர நிழலில் முருகப் பெருமான் அமர்ந்து சிவபெருமானை வழிபட்டதால், ‘திருக்குராவடி’ என்று இத்தலத்துக்கு பெயர் ஏற்பட்டது. அன்று முதல் இத்தல முருகப் பெருமான் ‘திருக்குராத்துடையார்’ என்று அழைக்கப்படுகிறார்.

கோயில் அமைப்பும் சிறப்பும்

முதல் படைவீடான திருப்பரங்குன்றம் செல்ல தெய்வயானை இங்கிருந்து விடைபெற்றார். முருகப்பெருமான், ஹிரண்யாசுரனை கொன்ற பழி, சிவபெருமானின் அருளால் நீங்கப் பெற்றதால் (பாவம் கழிதல்) இத்தலம் ‘விடைகழி’ என்று அழைக்கப்படுகிறது.

திருவிடைக்கழி கோயிலில் 16 விநாயக மூர்த்தங்கள் இடம்பெற்றுள்ளன. இக்கோயிலின் நான்கு எல்லைகளிலும் ஐயனார் கோயில்கள் உள்ளன. இக்கோயிலில் முருகப்பெருமானுக்கு வாகனமாக யானை இருப்பது குறிப்பிடத்தக்கது.

தெய்வயானை

ஏழு நிலைகளுடன் கூடிய ராஜ கோபுரம் அமைக்கப்பட்டு, கோயில் பல சிறப்புகளுடன் விளங்குகிறது. ஆறடி உயரத்தில் முருகப் பெருமான் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். முருகப்பெருமானின் வலது கை அபயம் தரும் விதத்திலும், இடது கை இடுப்பில் ஊன்றியபடியும் உள்ளன.

கோயிலுக்குள் நுழைந்ததும் கொடிமரத்தையும் பலிபீடத்தையும் அடுத்து விநாயகரை தரிசிக்கலாம். முன்மண்டபத்தில் உள்ள கல்வெட்டுகளில் திருப்புகழ் பாடல்கள் மற்றும் வேல் விருத்தம் பொறிக்கப்பட்டுள்ளன. பிரகாரத்தில் விநாயகர் சந்நிதி, தல விருட்சம் (குரா மரம்), அதன் அடியில் முருகப்பெருமான் சிவபெருமானை தியானித்து வழிபட்ட பத்ர லிங்கம் உள்ளிட்டவை உள்ளன.

தனி சந்நிதியில் காமேஸ்வரர், கருவறையைச் சுற்றி முன்புறம் ஸ்படிக லிங்கம், தெற்கில் தட்சிணாமூர்த்தி, பின்புறம் பாபநாசப் பெருமான், வடக்கில் வசிஷ்ட லிங்கம் காட்சி தரும் அமைப்பை இத்தலத்தில் மட்டுமே காண முடியும். பிரகார வலம் முடித்து உள்வாசலைத் தாண்டிச் செல்லும்போது இடதுபுறத்தில் சந்திரன், அருணகிரிநாதர், சேந்தனார் மூர்த்திகளை தரிசிக்கலாம். உட்சுற்றில் நவசக்திகள், விநாயகர், சுப்பிரமணியர், நாகநாத லிங்கம், கஜலட்சுமி, வில்லேந்திய முருகப் பெருமான் உற்சவ மூர்த்தி உள்ளிட்ட மூர்த்திகளை தரிசிக்கலாம்.

இந்திரனின் மகள் தெய்வயானை முருகப் பெருமானை மணம் புரிய விரும்பினார். இதன் காரணமாக, இத்தலத்தில் முன் மண்டபத்தின் வலதுபுறம் அமர்ந்து தெய்வயானை தவம் புரிந்தார். இதைத் தொடர்ந்து இத்தலத்தில் தெய்வயானைக்கும் முருகப்பெருமானுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. புதிய மணப்பெண்ணுக்கு உண்டான நாணத்துடன் தெய்வயானை காட்சி அருள்கிறார். தெய்வயானையை வெள்ளிக்கிழமைதோறும் வழிபட்டால், திருமணத் தடை அகலும் என்பது ஆன்றோர் வாக்கு.

முருகப்பெருமான் சிவபூஜை செய்த நிலையில் பாப விமோசன சுவாமியாக அருள்பாலிக்கிறார். திருச்செந்தூர் முருகப்பெருமானுக்கு இணையாக இத்தல முருகப்பெருமான் போற்றப்படுவதால், இவரை தரிசித்து வணங்கினால் தீராத பழியும், பாவமும் தீரும் என்பது ஐதீகம்.

தினமும் அர்த்தஜாம பூஜை சமயத்தில் குரா மரத்தடியில் முருகப்பெருமான் பூஜித்த பத்ரலிங்கத்துக்கு முதலில் பூஜை நடைபெறுகிறது. தல விருட்சமான குரா மரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்தால் மனத் தெளிவும், அறிவுக் கூர்மையும் உண்டாகும் என்பது நம்பிக்கை.

திருமுறைகளில் இடம் பெற்றுள்ள முருகப் பெருமான் கோயில்களில் இத்தலமும் ஒன்று. முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் தவிர அவரது காலடி பட்ட தலங்கள் இரண்டு மட்டுமே. ஒன்று, வள்ளியை மணம் புரிந்த வள்ளிமலை. மற்றோன்று, பாப விமோசனம் பெறுவதற்காக அவர் தவம் புரிந்த திருவிடைக்கழி என்பது தனிச்சிறப்பு.

தனித்துவம் மற்றும் தன்னம்பிக்கையின் அடையாளமாக முருகப் பெருமான் கருதப்படுவதால், இத்தல முருகப்பெருமான் ஒருவருக்கு தன்னம்பிக்கை அளித்து அவரை தனித்துவம் கொண்டவராக மாற்றுவார் என்பது ஐதீகம். முசுகுந்த சக்கரவர்த்தி என்ற சோழ மன்னர் இக்கோயிலைக் கட்டியதாகக் கூறப்படுகிறது. இத்தலம் ‘மகிழ்வனம்’ என்றும், ‘குராப்பள்ளி’ என்றும் அழைக்கப்படுகிறது.

இந்தக் கோயிலில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன. அவை பல்வேறு அரிய தகவல்களைத் தெரிவிக்கின்றன. முற்காலத்தில் திருவிடைக்கழி பகுதியில் பல மடங்கள் இருந்துள்ளன என்றும், அவற்றில் பல ஆண்டுகளாக தினந்தோறும் அன்னதானம் நடைபெற்று வந்துள்ளது என்றும், வேதம் ஓதும் அந்தணர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரா மரத்தடியில் அமர்ந்து ராகு பகவான், முருகனை வழிபட்டதால், ராகு தோஷம் உள்ளவர்கள் இத்தலத்தில் பிரார்த்தனை செய்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பதும், தம்பதிக்குள் ஒற்றுமை பலப்படும் என்பதும் நம்பிக்கை. நவக்கிரங்கள் இல்லாத இந்த தலத்தில் முருகப்பெருமானே நவ நாயகர்களாக அருள்பாலிக்கிறார். நவக்கிரக தோஷம் நீக்கும் இறைவனாக இங்குள்ள முருகன் உள்ளார்.

சரவண தீர்த்தம், கங்கை கிணறு ஆகியன இத்தலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற தீர்த்தங்கள் ஆகும். குராமரம், மகிழ மரம் ஆகியன தல விருட்சங்கள் ஆகும். முசுகுந்தன், வசிஷ்டர், சேந்தனார், அருணகிரியார் ஆகியோர் இத்தலத்தில் வழிபாடு செய்துள்ளனர். இத்தல இறைவி காமேஸ்வரி. அம்பாள் தரங்கம்பாடிக்குச் சென்றதால் இத்தலத்தில் அம்பாள் சந்நிதி இல்லை.

சர்வமும் சுப்ரமணியம்

திருவிடைக்கழியில் சுப்பிரமணிய சுவாமியே பிரதானம் என்பதால் பிரதோஷ நாயகர், சந்திரசேகரர், சோமாஸ்கந்தர் ஆகிய அனைத்து மூர்த்திகளும், வலது கரத்தில் வஜ்ரவேலுடன் சுப்பிரமணிய சுவாமி சொரூபமாகவே காட்சி அருள்கின்றனர். சண்டிகேஸ்வரர் சந்நிதியில் உள்ள சிவ சண்டிகேஸ்வரரும், குக சண்டிகேஸ்வரரும் தங்கள் கரங்களில் மழு என்ற ஆயுதத்தை ஏந்தாமல், வஜ்ரவேலை ஏந்தி அருள்பாலிக்கின்றனர். கொடிமரத்தடியில் விநாயகப் பெருமானுடன் வேலவனும் காட்சி அருள்கிறார். கருவறையில் கந்தனுடன் சிவபெருமானும் சேர்ந்தே அருள்பாலிக்கிறார்.

சேந்தனார் பல்லாண்டு

தில்லையில் பொன்னம்பலக் கூத்தனுக்கு திருவாதிரை நாளில் களி நைவேத்யம் செய்தவர் சேந்தனார். சிறந்த சிவபக்தரான இவர், திருப்பல்லாண்டை அருளி, திருத்தேரை தில்லை வீதிகளில் ஓட வைத்தார். ஒரு தைப்பூச தினத்தில் இத்தலத்தில் குரா மரத்தடியில் இவர் முக்தி பெற்றதால், ஆண்டு தோறும் தைப்பூச நாளில் இவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

ஒன்பதாம் திருமுறையான திருவிசையப்பா, திருப்பல்லாண்டு பதிகங்கள் சிவபெருமானின் திருமேனிச் சிறப்பு, அடியார்க்கு அருளிய சிவபெருமானின் அருட்குணங்கள், சைவ சமய தத்துவக் கருத்துகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். ஒன்பதின்மரில் சேந்தனார் பாடிய திருவிசையப்பா முருகனின் புகழை உரைக்கும் அந்தாதி அமைப்பில் உள்ளது. இப்பதிகம் தலைவனிடம் அன்பு கொண்ட தலைவியின் துன்பத்தையும், ஆற்றாமையையும் கண்டு, நற்றாய் இரங்கிக் கூறுவதாக அமைந்துள்ளது.

பாத யாத்திரை

சிதம்பரத்தில் இருந்து திருவிடைக்கழி செல்லும் 50 கி.மீ தூர பாதயாத்திரை, ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் முதல் வெள்ளிக்கிழமையில் புறப்படுகிறது. இந்தப் பயணம் சனிக்கிழமை இரவு திருவிடைக்கழி கோயிலை அடையும். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை கோயில் எதிரில் உள்ள மண்டபத்தில் இருந்து பால் காவடி எடுத்துச் சென்று கந்தனுக்கு, குரா மரத்தடியில் வைத்து மகா அபிஷேகம் நடைபெறும். இந்த பாதயாத்திரையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று முருகனிடம் தங்கள் பிரார்த்தனைகளை முன்வைப்பது வழக்கம். வைகாசி மாதங்களிலும் சிக்கலில் இருந்து பக்தர்கள் இத்தலத்துக்கு நடைபயணம் வருவது வழக்கம்.

திருவிழாக்கள்

தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகையை பண்டிகைகளின் போது சிறப்பு உற்சவங்கள் நடைபெறும். தைப்பூசத்தின்போது சுவாமிமலையில் இருந்து பக்தர்கள் நடைபயணம் வருவது பெரிய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. உற்சவ சமயங்களில் தினமும் முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். தினமும் காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் முருகன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற பால் காவடி மற்றும் பன்னீர் காவடிகளை எடுத்தல், மொட்டை அடித்தல், பால்குடம் எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை இங்குள்ள முருகனுக்கும் செலுத்துவதுண்டு.

x