மேற்கே தலைவைத்து, கிழக்கே திருப்பாதம் நீட்டி, தென் திசை நோக்கி சயன கோலத்தில் அருளும் திருமெய்யர்


திருமயம் சத்தியகிரீஸ்வரர் ஆலய கோபுரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது திருமயம் என அழைக்கப்படும் ஊரின் புராண காலத்துப் பெயர் திருமெய்யம். ஆன்மிக ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஊர் இது. இங்குள்ள அழகான மலைக்கோட்டையை திருமயத்துக்கு வெகுதூரத்தில் இருந்தே காணமுடியும். திருமயத்தில் தென்பகுதியில் சிறிய குன்றும், அதன் சரிவில் மகாவிஷ்ணுவுக்கும், சிவபெருமானுக்கும் என இரண்டு குடைவரைக் கோயில்களும் உள்ளன.

திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் ஆலய கோபுரம்

கிழக்குப்புறம் உள்ள பெருமாளுக்குரிய குடைவரைக் கோயிலில் திருமெய்யர் என்ற திருப்பெயரில் பள்ளிகொண்ட நிலையிலும், சத்தியமூர்த்தி பெருமாள் என்ற திருப்பெயரில் நின்ற திருக்கோலத்திலும் பெருமாள் காட்சி தருகிறார்.

இதுபோல் மேற்குப்புறம் உள்ள சிவபெருமானுக்கான குடைவரைக் கோயிலில் சத்தியகிரீஸ்வரர் என்ற திருப்பெயரில் சிவபெருமான் வீற்றிருக்கிறார். இருகோயில்களுக்கும் நடுவே 13-ம் நூற்றாண்டு காலத்தில் மதிள் சுவர் கட்டப்பட்டுள்ளது.

108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான திருமெய்யம் சத்தியமூர்த்திப் பெருமாளைப் புகழ்ந்து திருமங்கை ஆழ்வார் 10 பாசுரங்கள் பாடியுள்ளார். சத்தியமூர்த்தி பெருமாள், சத்யகிரி விமானம், சத்திய ஷேத்திரம், சத்தியபுரம், சத்யகிரி, சத்தியதீர்த்தம், சத்தியவனம் என ஏழு சத்தியப்பெருமைகளைக் கொண்டது இவ்வூர். வடமொழியில் சத்யஷேத்ரம் என்ற சொல்லே, தமிழில் திருமெய்யம் என அழைக்கப்படுகிறது.

இக்குடைவரைக் கோயில் பாண்டியர்கள், ஹொய்சாளர்கள், விஜயநகர அரசர்கள், நாயக்கர்கள் ஆகிய அரச வம்சத்தவர்களால் விரிவுபடுத்தப்பட்டு கருவறைகளும், மண்டபங்களும் கட்டப்பட்டன. பிற்காலத்தில் முத்தரைய வம்சத்தைச் சேர்ந்த மகாராணி பெருந்தேவி மேலும் விரிவுபடுத்தினார்.

திருமயம் கோட்டை

கோயிலில் தெற்கு வாசலில் உள்ள ஐந்து நிலை ராஜகோபுரம் பாண்டியர்களால் கட்டப்பட்டது. இதற்கடுத்த மண்டபத்தில் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, ஆண்டாள் நாச்சியார், சக்கரத்தாழ்வார் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. அத்துடன் இந்த மண்டபத்தில் உள்ள அழகுவாய்ந்த சிற்பங்கள் புகழ்பெற்றவை.

இதையடுத்துள்ள திருச்சுற்றில் மேற்குபுறம் இத்தலத்து தாயாரான உய்யவந்த நாச்சியார் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இதே சுற்றில் ஆழ்வார்கள், பகவத் ராமானுஜர் சன்னதிகள் உள்ளன.

ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்கநாத பெருமாள் தெற்கு நோக்கி சயனத்திருக்கிறார். அதேபோல்தான், திருமெய்யத்திலும் ஆதேசேஷன் மீது பள்ளிகொண்ட நிலையில் மேற்கே தலைவைத்து, கிழக்கே திருப்பாதம் நீட்டி, தென் திசை நோக்கி திருமெய்யர் சயனித்திருக்கிறார். பெருமாளின் உருவம் சுமார் 30 அடி நீளத்தில் குகையை நிறைத்துள்ளது.

“குடதிசை முடியை வைத்துக்

குணதிசை பாதம் நீட்டி

வடதிசை பின்பு காட்டித்

தென்திசை யிலங்கை நோக்கி

கடல்நிறக் கடவு ளெந்தை

அரவணைத் துயிலு மாகண்டு

உடலெனக் குருகு மாலோ

எஞ்செய்கே னுலகத் தீரே”

– தொண்டரடிப்பொடி ஆழ்வார்

அதாவது ‘மேற்கே தலைவைத்து, கிழக்கே பாதம் நீட்டி, வடக்கே முதுகைக் காட்டி, தெற்கேயுள்ள இலங்கையை நோக்கி, கடல்நிற வண்ணனாகிய என் தந்தை, ஆதிசேடன் மீது துயில்வதைக் கண்டு என் உடல் உருகுகிறது. உலக மாந்தர்களே நான் என்ன செய்வேன்?’ என்று ஆழ்வார் பாடுகிறார்.

இந்தப் பாசுரம் ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாத பெருமானின் அழகைக் கண்டு தொண்டரப்பொடி ஆழ்வார் பாடியதுதான் என்றாலும், திருமெய்யம் பெருமாளுக்கும் இது பொருந்தும்.

சயனக்கோலத்தில் மூலவர் சத்யகிரிநாதப் பெருமாள். கீழே: திருமயம் கோட்டை

தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மா பெருமாளின் நாபிக்கமலத்திலிருந்து தோன்றுகிறார். மார்பினில் லட்சுமியும், காலருகே பூதேவியும் வீற்றிருக்கிறார்கள். பிரம்மாவின் அருகில் சப்தரிஷிகளும் தேவர்களும் காட்சிதருகிறார்கள். ஆதிசேஷன் பின்னால் கருடன் நிற்கிறார். இவர்கள் அருகே தர்மராஜன், சித்திரகுப்தன், சந்திரன், சூரியன், ராகு ஆகியோர் காணப்படுகின்றனர். மது, கைடபர் என்ற இரு அரக்கர்கள் பெருமாளை தாக்குவதற்காக இவரின் காலருகே நிற்கிறார்கள்.

பெருமாளின் ஐந்து ஆயுதங்களில் நான்கு ஆயுதங்களான சுதர்ஷன சக்கரமும், பாஞ்சஜன்யம் என்னும் சங்கையும், நந்தகம் என்னும் வாளினையும், கௌமோதகி என்னும் கதையையும் காட்டப்பட்டுள்ளது. படமெடுத்தாடும் ஆதிசேஷன் தன் ஐந்து தலைகளிலிருந்து மது கைடபர்களை நோக்கி நெருப்பை உமிழ்கிறார். மது கைடபர்களை நோக்கி தீ ஜுவாலைகள் பரவுகின்றன. இவை தவிர, கானப்பறை, பேரிகை, சல்லிகை, தக்கை, தண்ணுமை, தடாகம், தடாரி, உடுக்கை, கிடக்கை, கரடிக்கை முதலான பண்டைக்காலக் கருவிகளும் மூலவர் அருகே வடிக்கப்பட்டுள்ளன. பேரழகு வாய்ந்த சிற்பங்கள் நிறைந்த மூலஸ்தானம் இது.

அதுபோல் இதன் அருகிலேயே மற்றொரு குகையில் சத்தியமூர்த்தி பெருமாளின் சன்னதியை தரிசிக்கலாம். இந்தச் சன்னதி ஒருதள விமானம், முகமண்டபம், பிரகாரம் என்று அமைந்துள்ளது. அதன் நுழைவாயிலில் இரண்டு துவாரபாலகர்கள் நிற்கின்றனர். நின்றகோலத்தில் பெருமாள் காட்சிதருகிறார். வலது முன் கை அபய முத்திரையும், இடது முன் கை கடியவலம்பித முத்திரையும் காட்ட, பின் கைகள் சங்கு சக்கரம் ஏந்தி. கிரீடம், மகரகுண்டலம், அணிகலன்கள் பூண்டு அலங்கார புருஷராய் சத்தியமூர்த்திப் பெருமாள் காட்சி தருகிறார். இடப்புறம் கருடன் நின்ற நிலையில் காட்சி தருகிறார். அவருக்கு அருகே மகாலட்சுமி தாயார் அமர்ந்கோலத்தில் காட்சி தருகிறார். பெருமாளின் வலப்புறம் புரூரவஸ் சக்கரவர்த்தி நின்ற கோலத்தில் காணப்படுகிறார்.

திருமயம் திருமெய்யர் (வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பின் போது...)

திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட திவ்ய தேசம் இது. அவரது 10 பாசுரங்களில் ஒன்று:

“மையார் கடலும் மணிவரையும் மாமுகிலும்,

கொய்யார் குவளையும் காயாவும் போன்றிருண்ட

மெய்யானை, மெய்ய மலையானைச் சங்கேந்தும்

கையானை, கைதொழா கையல்ல கண்டாமே”

- பெரியதிருமொழி.

திருமெய்யம் சத்தியமூர்த்தி பெருமாளுக்கு ஆடி மாதம் 10 நாள் திருவிழா நடைபெறுவது வழக்கம். ஒவ்வொரு நாளும் மண்டகப்படி சார்பில் சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரங்களும் நடைபெறும். ஒவ்வொரு நாளும் பல்லக்கில் சுவாமி வீதியுலாவும், முக்கிய திருவிழாவான ஆண்டாள் திருக்கல்யாணமும் நடைபெற்று வீதியுலா நடைபெறும். தொடர்ந்து தேர்த் திருவிழா நடைபெறும்.

நிகழ்ச்சிகள்:

22.7.2023 - கொடியேற்றம்.

25.7.2023 - கருடசேவை.

30.7.2023 - தேரோட்டம்.

திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவில் தேரோட்டம்

x