சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் ஆவணி தேரோட்டம் கோலாகலம்


சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் ஆவணி திருவிழா நிறைவு நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது.

நாகர்கோவில்: சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் ஆவணி திருவிழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் 11 நாள் ஆவணி திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி இன்று நிறைவடைந்தது. திருவிழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு பணிவிடை, உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, வாகன பவனி, சமய சொற்பொழிவு ஆகியவை நடைபெற்று வருகிறது. 8ம் திருவிழாவான 30ம் தேதி இரவு அய்யா வைகுண்டர் வெள்ளை குதிரை வாகனத்தில் முத்திரி கிணற்றங்கரையில் கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சுவாமித்தோப்பு தலைமைப்பதி முன்பிருந்து புறப்பட்ட வாகனம் நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து முத்திரி கிணற்றங்கரையை அடைந்தது. பக்தர்கள் வெற்றிலை பாக்கு, பழங்களை அய்யாவிற்கு சுருள் வைத்து வழிபட்டனர். அதைத்தொடர்ந்து பதியின் வடக்கு வாசலில் தவக்கோலத்தில் வீற்றிருந்த அய்யா பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார். விழா நிறைவு நாளான இன்று மதியம் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பக்தர்கள் காவி உடையணிந்து நெற்றியில் திருநாமம் தரித்து தலைப்பாகை அணிந்தவாறு ”அய்யா அரகர.... சிவசிவா” என பக்தி கோஷங்களை எழுப்பினர்.

தேரோட்டத்தில் குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இரவில் காளை வாகனத்தில் அய்யா பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

x