தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிரசித்தி பெற்ற சங்கரநாராயணர் திருக்கோவில் உள்ளது. இங்கு சிவனும், விஷ்ணுவும் ஒன்றே என்பதை குறிப்பிடும் வகையில், ஒரு பாதி சங்கரராகவும், மறுபாதி நாராயணனாகவும் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இந்த திருக்கோயிலின் முக்கிய திருவிழாவான ஆடித்தபசு விழா ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வது வாடிக்கை. இந்த ஆண்டு ஆடித்தபசு விழா வரும் ஜூலை 31ம் தேதி திங்கட்கிழமை அன்று நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு வரும் திங்கள்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
ஜூலை 31ம் தேதி தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பள்ளி, கல்லூரிகளிலும், போட்டித் தேர்வுகள் உட்பட முக்கிய தேர்வுகளுக்கும் இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களும் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது என்றும் மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.
ஆடித்தபசு விழாவினை முன்னிட்டு அளிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 19. 08.2023 சனிக்கிழமை அன்று முழு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.