மகா பெரியவா: அருளே ஆனந்தம் - 46


மகா பெரியவா

மனிதனுக்கு இருக்கிற தேஹாத்ம புத்தி விலக வேண்டும். அதுதான் இந்தப் பிறப்பின் நோக்கம். தேஹாத்ம புத்தி என்பது பற்றி விரிவாகவே சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம்.

இந்த தேஹாத்ம புத்தி ஒருவரிடம் இருந்து விலகுவதற்கு மகா பெரியவா சொல்கிற உபதேசங்களைக் கேட்போம்.
‘‘தேஹாத்ம புத்தி விலக வேண்டும் என்பதற்குத்தான் உடலுக்குச் சிரமங்களைத் தருகிற சில உபவாசங்களை சாஸ்திரம் நமக்கு விதித்திருக்கிறது.

உபவாசங்களால் உடலுக்கு ஏற்படுகிற சிரமங்களைச் சிரமம் என்பதே தெரியாமல் பழக்கிக் கொள்கிறோம். அப்படி என்றால், தேகத்தையே பிரதானமாக மதித்து அதன் சவுகர்யத்தையே கவனிக்கும் அபிமானத்தை விடத் தயாராகி விட்டோம் என்றுதானே அர்த்தம்?

பசி எடுத்தாலும் பட்டினி கிடந்து பழகு. வம்பும் வீணும் பேசுவதில் சுகம் இருந்தாலும் மவுனம் அனுஷ்டி. கண்ணை இழுத்துக் கொண்டு போனாலும் தூங்குவதில்லை என்று ராத்திரி பூரா விழித்திருந்து ஈஸ்வர சம்பந்தமாக ஏதாவது சொல்லிக்கொண்டே இரு.
இப்படி எல்லாம் பழகப் பழக தேஹாத்ம புத்தி போகும். சரீரம் எப்படியானலும் பரமாத்மாவிடம் நிற்கும். சின்ன வயதிலேயே இவற்றை எல்லாம் பிடித்துக் கொண்டு பழக்கிக் கொள்ள வேண்டும்.

அப்படிப் பழகாவிட்டால், வயதான காலத்தில் மரண பயம் ஏற்படுகிற போதெல்லாம் உடலுக்கு ஏற்படுகிற ஹிம்சையிலேயே மனம் நிலைத்திருக்குமே தவிர, மனசை எப்படி பரமாத்மாவிடம் செலுத்த முடியும்? இதற்காகத்தான் விரத உபவா
சங்களைப் பழக்கிக் கொள்ள வேண்டும் என்று சாஸ்திரம் நமக்கு போதிக்கிறது.

வாழ்வதற்கு சாப்பாடு அவசியம்தான். இல்லாவிட்டால் உயிர் போய்விடும். ஆனால், சாப்பாடு கொஞ்சம் ஜாஸ்தியாகி விட்டால்கூட உடம்புக்கு வியாதி வெக்கைகள்தான். ஆரோக்கியத்துக்குக் காரணமான ஆகாரமே, கொஞ்சம் அளவு தாண்டிப் போய்விட்டால், அதுவே நோய்க்குக் காரணமாகி விடும்.

‘மெஷின்’கள்கூட விடாமல் வேலை செய்தால் கெட்டுப்போய் விடுகின்றன. இதனால்தான் அவ்வப்போது ‘ரெஸ்ட்’ கொடுக்கிறார்கள். அது மாதிரி இந்த வயிற்றுக்கும் அவ்வப்போது ‘ரெஸ்ட்’ கொடுத்தால் ஆரோக்கியத்துக்கு ரொம்பவும் நல்லது. உடம்பு என்று முழுசாக எடுத்துக் கொண்டால் அதற்கு ஆறு நாள் வேலை கொடுத்தால் ஒருநாள் ‘லீவ்’ தருவது என்று ஏற்பட்டிருக்கிறது. ஆனால், இந்த உடம்புக்கு உள்ளே வயிறு முதலான உறுப்புகள் தனித் தனியாக வேலை பண்ணிக் கொண்டே இருக்கின்றனவே... அதைப் பற்றி யோசித்துப் பார்த்திருக்கிறோமா...?

இத்தனை உறுப்புக்களில் ஹ்ருதயத்தையும் ‘லங்க்ஸை’யும் கொஞ்சம்கூட ‘ரெஸ்ட்’ கொடுத்து வைக்க முடியாது. ஆனால், வயிற்றுக்குக் கொடுக்க முடியும்; கொடுக்கவும் வேண்டும்.

ஏனென்றால், வெளியில் இருந்து பல தினுசுகளில் வஸ்துகளை வாங்கிக் கொண்டு அவற்றை உள்ளே அரைத்துக் கரைத்து ரொம்பவும் உழைப்பது வயிறுதான். எப்போது பார்த்தாலும் வேலை செய்யும் கருவி அதுதான்.

எப்போது பார்த்தாலும் வேலை செய்யும் ஒரு கருவி கெட்டு விடுவது போல் வயிறும் கெட்டுப் போனால், யோசித்துப் பாருங்கள்... ஒரு வேளை ஆகாரம் முடிந்து, அடுத்த வேளை ஆகாரம் என்று ஓயாமல் வயிறு வேலை பண்ணினால் ஜீர்ணக் கருவிகள் கெட்டு விடும் அபாயம் உண்டு.

ஆகாரம்தான் ரத்தமாகி, ‘பம்ப்’ ஆகும்போது மூளைக்குப் பாய்கிறது. அந்த மூளை ரொம்ப நுட்பமான ஒரு உறுப்பு. அதனால், அதற்கு இந்த ரத்த ஓட்ட ‘வெயிட்’டை அவ்வப்போது குறைக்க வேண்டும். ஒரு கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இதற்கெல்லாம் உபவாசம் உறுதுணை செய்கிறது.

ஆகவே, ‘உபவாசம் இருந்தால் ஆரோக்கியம் போய் விடும்’ என்று தோன்றினாலும் உண்மையில் இதுதான் இருக்கிற ரோகங்கள் அனைத்தையும் போக்கும் பெரிய மருந்து. ‘லங்கனம் பரம ஒளஷதம்’ என்றே வைத்ய சாஸ்த்ர வசனம்.

லங்கனம் என்றால் பட்டினி என்று ஏன் அர்த்தம் பண்ணிக் கொள்கிறோம் தெரியுமா? அந்த வார்த்தைக்கு நேர் அர்த்தம் ‘தாண்டுவது’ என்பதாகும். ஒருவேளை சாப்பாடு இல்லாமல் அதைத் தாண்டிப் போய் விட்டால் ‘ஸ்கிப்பிங் எ மீல்’ என்று சொல்கிறோமே... இதுதான் லங்கனம்.

வைத்திய சாஸ்திரம் சொல்கிற லங்கனத்தையே மத நூல்களும் சொல்கின்றன. திருவள்ளுவரும் இதைச் சொல்லி இருக்கிறார். அதாவது, ஏற்கெனவே சாப்பிட்டது முழுவதும் செரித்துப் போனதை ஒருவன் தெரிந்த கொண்ட பிறகே மறுபடி உண்ண வேண்டும். அப்படி ஒருவன் சாப்பிட்டான் என்றால், அவனுடைய உடம்புக்கு மருந்து எதுவும் வேண்டாம் என்று திருவள்ளுவர் சொல்கிறார்.
சாப்பாட்டினால்தான் ஆரோக்கியம் என்று நாம் நினைத்தாலும், வியாதிக்கும் அதுதான் முதல் தோழன் என்பதற்கு ஒன்று சொல்கிறேன்.

மகா பெரியவா

திடீரென ஜுரம் வந்து விட்டால் டாக்டர் முதல் கார்யமாக என்ன பண்ணச் சொல்கிறார்?

‘சாப்பாட்டை நிறுத்து... கஞ்சி குடி... இல்லாவிட்டால் இன்ன பானம் சாப்பிடு’ என்றுதானே சொல்கிறார்? எந்த நோயானாலும் அதற்குப் பத்தியமாக என்னென்ன சாப்பிடக் கூடாது என்றுதான் டாக்டர் கண்டிப்புடனும் கறாராகவும் சொல்வார். இதில் இருந்தே வியாதிக்கு ஆதாரம் ஆகாரம்தான் என்று தெரிகிறது.

இப்படி சரீர ரீதியில் ஆரோக்கியத்துக்கு நன்மை செய்கிற பட்டினிதான், அதைவிட ஆத்ம சம்பந்தமாக நிறைய நல்லது செய்கிறது.
உடல் நலத்தோடு உயிர் நலத்தையும் இம்மையோடு மறுமையையும் சேர்த்து ஆன்றோர்கள் உபவாச விதிகளைத் தந்திருக்கிறார்கள்.
பட்டினி என்பதெல்லாம் முதலில் கஷ்டமாகத் தோன்றும். இருந்தாலும் தொடர்ந்து மேற்கொள்கிற நடைமுறையினால் இதைச் சுலபமாக சமாளித்து விடலாம்.

பக்தி பலத்தோடு சங்கல்ப பலத்தோடு உணவில் கட்டுப்பாட்டை ஆரம்பித்தால் அதிலே தெரிகிற நல்ல பலனைப் பார்த்தே நாளுக்கு நாள் உபவாச நியமத்தில் ஈடுபாடு வலுக்கும். பழகுவதற்கு ஆரம்பத்தில் இது சிரமமாகத்தான் இருக்கும். உடம்பை வாட்டும். அந்த வேளையில் சிரமமாக இருந்தாலும் பிற்பாடு ஏற்படுகிற பெரிய இன்பத்துக்காக இதைப் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
ஒரு சம்ஸ்க்ருத ஸ்லோகம் இருக்கிறது.

அதன் பொருளைச் சொல்கிறேன்.

கரும்பை ‘மெஷினு’க்குள் விட்டுக் கசக்கி அதற்கு எண்ணற்ற துன்பம் தந்தாலும், கருப்பஞ்சாறு என்கிற பானம் எடுத்தவுடன் ஒரு இன்பம் கிடைக்கிறது. கரும்பைக் கஷ்டப்படுத்தியது மறந்து போகிறது.

அதுபோல லங்கனத்தின் மூலம் உடலுக்குச் சிற்சில கஷ்டங்களைக் கொடுப்பதால்தான், உள்ளத்துக்கு சுகமான ஒரு ரசம் கிடைக்கிறது.

வியாபாரி முதலில் கையில் இருப்பதைச் செலவழித்துதான் பண்டங்கள் வாங்குகிறார். அப்புறம் அதை விற்று அதிகப் பொருள் சம்பாதிக்கிறார். அப்படி உடம்பை முதலில் செலவழித்து, அப்புறம் அந்த செலவுக்கு மேல் பெரிய வரவு ஆத்மாவுக்கு சம்பாதித்துக் கொள்வதற்கே உபவாசம் இருப்பது.

சாப்பிடுகிற நாட்களிலும் பகவத் தியானம் பண்ணுங்கள். உபவாச நாளில் சாப்பிடாமல் இருந்தும் தியானம் பண்ணிப் பாருங்கள். அப்போதே அவரவர்களுக்கு ஒரு வித்தியாசம் தெரியும். அந்த லாபத்துக்காக இந்த நஷ்டத்தை நாம் படலாம் என்று தெரிந்து கொள்வீர்கள்.

நான் நிறைய சொல்வதை விட பிரத்தியட்சமாக நீங்கள் பண்ணிப் பார்த்து விட்டாலே உபவாசத்தின் அவசியமும் பெருமையும் விளங்கிவிடும்.

வயிற்றை வற்றப் போடுகிற நாட்களில் மனதுக்கு தியானம் என்கிற அம்ருதமான போஜனத்தைக் கொடுத்துக்
கொண்டால் எது பெரிய இன்பம் என்று தெரிந்துவிடும்.

இதற்கெல்லாம் அடிப்படையில் பட்டினி இருந்து பழக வேண்டும். விரத நாட்களில் வயிற்றை லங்கனம் போட வேண்டும். அப்படிப் பண்ண ஆரம்பித்து விட்டால், இதன் பலன்கள் முழுமையாகக் கிடைக்கும்.’’

எத்தனை அழகாக, விளக்கமாக மகா பெரியவா சொல்லி இருக்கிறார் பார்த்தீர்களா?

இதைத்தான் ‘ஒரு வேளை சாப்பிடுபவன் யோகி. இரண்டு வேளை சாப்பிடுபவன் போகி. மூன்று வேளை சாப்பிடுபவன் ரோகி’ என்பர்.

எந்த அளவுக்கு நாம் சாப்பிடுகிற உணவைக் குறைக்கிறோமோ, அந்த அளவுக்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்து மாத்திரைகளையும் குறைக்கலாம்.

இன்றைக்கு ஒருவர் எடுத்துக் கொள்ளும் உணவை விட அவர் எடுத்துக் கொள்ளும் மருந்து மாத்திரைகள் அதிகம் ஆகிவிட்டது. காரணம்... உணவுப் பழக்கம் முறையாக இல்லாததுதான்!

மகான் சொல்வதுபோல் ஆரம்பத்தில் இதைக் கட்டுக்குள் கொண்டு வருவது கஷ்டம்தான். ஆனால், கொண்டு வராவிட்டால், அதிகக் கஷ்டம்!

மகா பெரியவா சாப்பிட்டது எல்லாமே ரொம்ப ரொம்பக் குறைவு. எல்லாமே கையளவுதான்!

பின்னாட்களில் பிஷையில் எல்லாவற்றையும் குறைத்து விட்டார்.

ஆனால், மகா பெரியவா சரியாகச் சாப்பிடவில்லையே என்று பலரும் வருந்தி இருக்கிறார்கள்.

உலகையே காக்கும் மகான் வேளா வேளைக்குச் சாப்பிட்டுத் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டாமா என்றெல்லாம் கவலைப்பட்டிருக்கிறார்கள்.

அவர்களுள் அன்னதான சிவன் என்கிற மகா பெரியவா பக்தர் முக்கியமானவர்.

இவருக்கும் மகானுக்கும் எப்படிப் பரிச்சயம்?

மகானது சாப்பாடு பற்றி இவர் ஏன் கவலைப்பட வேண்டும்?

(ஆனந்தம் தொடரும்...)

சென்ற அத்தியாயத்தை வாசிக்க:

மகா பெரியவா: அருளே ஆனந்தம் - 45

x