தென்காசி மாவட்டத்தில் மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நகரம் சங்கரன்கோவில். இங்கு சங்கரநாராயண சுவாமி கோயில் மிகவும் புகழ்பெற்றது.
சிவபெருமான் தனது இடப்பாகத்தை உமையவளுக்கு கொடுத்து, உமையொருபாகனாக (அர்த்தநாரீஸ்வரராக) காட்சி கொடுத்த கோலத்தில் அமைந்த தலங்கள் தமிழகத்தில் தென்காசி அருகே வாசுதேவநல்லூரிலும், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டிலும் அமைந்துள்ளன.
இதுபோல் சிவபெருமானும், ஸ்ரீமந் நாராயணனும் இணைந்த திருக்கோலத்தை சங்கரன்கோவிலில் மட்டுமே தரிசிக்க முடியும்.
இத்தலத்தில் உமையவள் கோமதி அம்மனாக அருள்பாலிக்கிறாள். சைவ, வைணவ ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக அன்னை கோமதி, இத்தலத்தில் சிவபெருமானை எண்ணி தவமிருந்தாள். அந்த தவத்தின் பலனாக, ஆடி மாதம் உத்திராடம் நட்சத்திரம் நாளில் கோமதி அம்மனுக்கு சங்கர நாராயணராக சிவபெருமான் காட்சி கொடுத்தார். இவ்விழா ஆடித்தபசு விழாவாக சங்கரன்கோவிலில் கொண்டாடப்படுகிறது.
சங்கரன்கோவில் மூலஸ்தானத்தில் மூன்று சன்னதிகள் வரிசையாக உள்ளன. நடுவே சங்கரலிங்க சுவாமி லிங்க வடிவில் வீற்றிருக்கிறார். இவருக்கு வலப்புறம் கோமதி அம்பாள் சன்னதியும், இடதுபுறம் சங்கரநாராயணர் சன்னதியும் அமைந்துள்ளன.
ஆடி மாதம் உத்திராட நட்சத்திரத்தை முன்னிட்டு 12 நாட்கள் ஆடித்தபசு விழா நடைபெறுகிறது. இவ்விழா கோமதி அம்பாளுக்கான விழாவாகும். விழா நாட்களில் தினமும் காலையிலும், இரவிலும் கோமதி அம்மன் பல்வேறு அலங்காரங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
விழாவின் 9-ம் திருநாளன்று தேரோட்டம் நடைபெறும். தேரில் கோமதி அம்மன் ரதவீதி வலம் வருவார்.
விழாவின் 11-ம் நாளன்று முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு நடைபெறும். அன்று காலை கோமதி அம்பாளுக்கு அபிஷேக அலங்கார பரிவட்டம் சாத்தும் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து மதியம் தங்கச்சப்பரத்தில் தவக்கோலத்தில் கோமதி அம்மன் தெற்கு ரத வீதியில் உள்ள தபசு மண்டகப்படிக்கு எழுந்தருள்வார். அங்கிருந்து ஒற்றைக்காலில் நின்றபடி, கைகளை தலைக்குமேல் கூப்பியபடி தபசுக்காட்சி காண மாலையில் அம்பாள் எழுந்தருள்வார். அம்பாளுடன் லட்சக்கணக்கான பக்தர்களும் திரண்டு வருவார்கள். அப்போது, ஹரியும் சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் வகையில் கோமதி அம்மனுக்கு முதலில் ரிஷப வாகனத்தில் சங்கரநாராயணராக சுவாமி காட்சியளிப்பார். அப்போது சுவாமியை மூன்று முறை கோமதி அம்மன் வலம்வந்து வணங்குவார். பின்னர் நள்ளிரவில் அடுத்த காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெறும். அப்போது யானை வாகனத்தில் சங்கரலிங்க சுவாமியாகவும் சுவாமி காட்சி கொடுப்பார்.
விழா நாட்களில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். தேரோட்ட நாளிலும், ஆடித்தபசு காட்சியைக் காணவும் லட்சக்கணக்கானோர் கூடுவர்.
ஆடித்தபசு விழாவின் முக்கிய நிகழ்ச்சிகள்:
21.7.2023 - கொடியேற்றம்
29.7.2023 - தேர்த்திருவிழா.
31.7.2023 - ஆடித்தபசுக் காட்சி.