ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டுதோறும் நான்கு முறை கொடியேற்றம் நடைபெற்று தேர்த் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.
ஆண்டாள் நாச்சியாரின் தந்தையாகிய சுவாமி பெரியாழ்வாரின் அவதார தினமான ஆனி சுவாதியை முன்னிட்டு 10 நாள் திருவிழா நடைபெறுகிறது. இதில் 9-ம் நாளில் செப்புத் தேரில் சுவாமி பெரியாழ்வார் பவனி வருவார்.
அடுத்து ஆண்டாளின் அவதார தினமான ஆடி மாத பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு 10 நாள் திருவிழா நடைபெறுகிறது. இதில் ஆடிப்பூரத்தன்று தமிழகத்தின் இரண்டாவது பெரிய தேரில் ஆண்டாள் நாச்சியாரும், சுவாமி ரங்கமன்னாரும் வலம் வருவர்.
மூன்றாவதாக ஸ்ரீவில்லிபுத்தூரில் வடப்பெருங்கோயிலுடையான் எனப்படும் வடபத்ரசாயி பெருமாள் கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவம் 10 நாட்கள் நடைபெறும். அதில் 9-ம் நாளில் செப்புத்தேரில் வடபத்ரசாயி பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் வலம் வருவார்.
நான்காவதாக பங்குனி உத்திரம் நாளில் ஸ்ரீவில்லிபுத்தூரில் வைத்து ஆண்டாள் நாச்சியாருக்கும், சுவாமி ரங்கமன்னாருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு 12 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. இதன் 9-ம் நாளில் காலையில் செப்புத்தேரில் ஆண்டாள் நாச்சியாரும், சுவாமி ரங்கமன்னாரும் வீதிஉலா வருவர். அன்று இரவு திருக்கல்யாணம் நடைபெறும்.
ஆடித்தேர்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத்தன்று ஓடும் தேர், தமிழகத்தில் உள்ள தேர்களில் இரண்டாவது பெரியது. முற்காலத்தில் இத்தேரை வடங்களைக் கொண்டு பக்தர்கள் முன்புறம் இழுக்க, அதற்கு உதவியாக மற்றொரு குழுவினர் பின்னால் மரத்தடிகளைக் கொண்டு தேரின் சக்கரத்தை நெம்பித் தள்ளுவார்கள். இத்தேரில் மரச்சக்கரங்களே அப்போது பயன்படுத்தப்பட்டன. இதனால் தேர் புறப்பட்டு நிலையம் வந்தடைய பல நாட்கள் நீடிக்கும். அதன்பின் இரும்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்டன. அத்துடன் தேரை பின்புறம் இருந்து தள்ளுவதற்காக புல்டோசர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், சமீப காலங்களில் வெகுவிரைவாக ரதவீதிகளைக் கடந்து, ஒரே நாளில் தேர் நிலையம் சேர்கிறது.
ஆடித்தேரை பரிசளித்தவர்
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் அமைந்துள்ள ஸ்ரீ வானமாமலை மடம், பாரத நாட்டில் உள்ள வைணவ மடங்களில் மிகவும் பழமையானது ஆகும். சுவாமி மணவாளமாமுநிகளால் தோற்றுவிக்கப்பட்ட இந்த மடத்தில், இவரது சீடராகிய பொன்னடிக்கால் ஜீயர் முதல் ஜீயராக இருந்தார்.
வானமாமலை மடத்தின் 19-வது பட்டத்தை 1843-ம் ஆண்டு முதல் 1853-ம் ஆண்டு வரை ஸ்ரீபட்டர்பிரான் வானமாமலை ஸ்ரீராமானுஜ ஜீயர் அலங்கரித்தார். 10 ஆண்டுகளே இவர் பட்டத்தில் இருந்தாலும், இவர் மேற்கொண்ட திருப்பணிகள் ஏராளம்.
நாங்குநேரி வானமாமலைப் பெருமாள் கோயில் கொடிமரத்துக்கு முழுவதும் தங்கமுலாம் பூசி, தகடுகளால் கவசம் செய்வித்தார். இக்கோயில் விமானங்களை புதுப்பித்து மகா கும்பாபிஷேகம் நடத்தினார். கோயிலில் உள்ள பெரிய ஸ்ரீபலி மண்டபத்தைக் கட்டினார்.
அக்காலத்தில் வானமாமலை சந்நிதியில் எழுந்தருளியிருந்த திருவேங்கடமுடையானுக்குத் தனியே ஒரு கோயில் கட்டிவைத்து, அங்கு கும்பாபிஷேகம் நடத்தினார்.
மைசூரு அருகே திருநாராயணபுரத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீசெல்வப்பிள்ளைக்கு தங்கப்பல்லக்கு ஒன்றை சமர்ப்பித்தார். காஞ்சிபுரத்திலும், திருவல்லிக்கேணியிலும் ஸ்ரீவானமாமலை மடங்களை கட்டினார். அவை இன்று வரை இயங்கி வருகின்றன. திருநெல்வேலியில் ஸ்ரீராமபிரானுக்கு ஒரு கோயில் கட்டினார்.
ஸ்ரீ பட்டர்பிரான் சுவாமியின் கைங்கர்யங்களில் மிகவும் முக்கியமானது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரங்கமன்னாருக்கு ஆடிப்பூரத் தேரை சமர்ப்பித்தது ஆகும். ஆண்டாள் நாச்சியார் அவதரித்த ஆடிப்பூரம் நட்சத்திரத்தில்தான் ஸ்ரீ பட்டர்பிரான் சுவாமியும் அவதரித்தார். திருவிதாங்கூர் சமஸ்தான மன்னரின் உதவியுடன் அங்கிருந்து மிக உயர்ந்த மரங்களை ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கொண்டு வந்து, தமிழகத்தின் இரண்டாவது பெரிய தேராகிய ஆடிப்பூரத்தேரைச் செய்து ஆண்டாள் நாச்சியாருக்கு சமர்ப்பித்தார். அத்துடன் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வாருக்கு தங்கத்தாலான பத்மாசனம் ஒன்றையும் சமர்ப்பித்தார்.
வைணவ ஆசார்யர்கள் திக்விஜயம் செய்வது வாடிக்கை. அதுபோல் ஸ்ரீபட்டர்பிரான் ஜீயர் சுவாமியும் யாத்திரை சென்றிருந்தபோது 1853-ம் ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள சீதாராம் பாக் என்ற இடத்தில் திருநாட்டுக்கு எழுந்தருளினார் (காலமானார்). இவரது திருவரசு அங்கே இப்போதும் உள்ளது.