மகா பெரியவா: அருளே ஆனந்தம் - 45


மகா பெரியவா

‘மவுன விரதம்’ குறித்து மகா பெரியவா சொன்னவற்றையும், மவுனம் மேற்கொண்டால் என்னென்ன நற்பலன்கள் கிடைக்கும் என்பதைப் பற்றியும் கடந்த சில இதழ்களில் விரிவாகவே பார்த்தோம்.

மனம் மட்டும் அமைதியாக இருந்தால் போதாது. உடலும் அமைதியாக இருக்க வேண்டும்.

உடலுக்கு அமைதி... உபவாசம்.

‘உபவாசம்’ என்றால், நாம் எல்லோரும் பட்டினி என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு விதத்தில் அது உண்மைதான். ஏகாதசி அன்று விரதம். அதாவது சாப்பிடாமல் இருப்பவர்களை ‘உபவாசம் இருக்கிறார்கள்’ என்று சொல்வோம்.

இதற்கு இன்னொரு அர்த்தம் உண்டு. அது நம்மில் பலருக்கும் தெரியாதது.

‘உப’ என்றால், உடன் என்று பொருள். ‘வாசம்’ என்றால் வசிப்பது. ஆக, உபவாசத்துக்கு ‘உடன் வசிப்பது’ என்பது பொருள்.
விரத நாளன்று இறை சிந்தனையோடு பகவானுக்கு அருகே நாம் வசிக்க வேண்டும் என்பதைத்தான் உபவாசம் என்கிறோம். விரத நாளன்று பகவான்நாமாக்களைச் சொல்லிக் கொண்டு இருக்க வேண்டும். இதுதான் உண்மையான உபவாசம். சாப்பிடா
மல் விரதம் இருப்பதெல்லாம் அப்புறம்தான்.

உபவாசம் தொடர்பான ஓர் அருமையான நிகழ்வை திருக்கோவிலூர் தபோவனம் ஞானானந்தகிரி ஸ்வாமிகளின் வாழ்க்கையில் இருந்து பார்க்க முடியும்.

ஒரு ஏகாதசிக்கு முந்தைய தினம் மாலை ஞானானந்த கிரி ஸ்வாமிகளைத் தரிசிக்க இரண்டு பாகவதர்கள் திருக்கோவிலூருக்கு வந்தார்கள்.

ஸ்வாமிகளின் தரிசனம் முடிந்து கிளம்புவதற்கு ஆயத்தமானார்கள். காரணம், அடுத்த நாளான ஏகாதசி அன்று உபவாசம் (விரதம்) இருப்பது அவர்களின் வழக்கம். எதுவும் சாப்பிடமாட்டார்கள்.

ஆனால், கிளம்ப இருந்தவர்களுக்கு புறப்படு மாறு உத்தரவு வழங்கவில்லை ஸ்வாமிகள். ஏகாதசி தினத்தன்று தன்னுடன் இருக்குமாறு அவர்களுக்கு உத்தரவிட்டார்!

மகானின் உத்தரவை பாகவதர்களால் தட்ட முடியவில்லை. அடுத்த விநாடியே ஏற்றுக் கொண்டார்கள். ‘ஒரு ஏகாதசி அன்று மகானுடன் இருந்து, இறை தரிசனம் செய்து இங்கேயே விரதத்தை மேற்கொள்ளலாம்’ என்று பாகவதர்கள் சந்தோஷப்பட்டார்கள்.
அடுத்த நாள் ஏகாதசி அன்று அதிகாலையிலேயே எழுந்து நீராடி, அனுஷ்டானங்களை முடித்துவிட்டு ஸ்வாமிகளைத் தரிசிக்க வந்தார்கள். அது மார்கழி மாதம். தபோவனம் ஆசிரமத்தில் அதிகாலை பூஜையைத் தரிசித்த பக்தர்கள் ஸ்வாமிகளிடம் ஆசிர்வாதம் வாங்குவதற்காகக் கூடி இருந்தார்கள்.

பாகவதர்கள் வெளியே காத்திருப்பதைப் பார்த்த ஸ்வாமிகள், அவர்களை அருகே வரவழைத்தார். நலம் விசாரித்தார். பிறகு, அன்னதானக் கூடம் சென்று பொங்கல்சாப்பிட்டு வருமாறு பணித்தார். ‘என்னது... இன்று ஏகாதசி ஆயிற்றே...’ என்று யோசித்தவர்கள், ‘மகான் சொல்லி விட்டார்’ என்று அவரது திருவாக்குக்குக் கட்டுப்பட்டு அன்னசாலைக்குச் சென்றார்
கள். சுடச்சுட நெய் வடியும் பொங்கல் சாப்பிட்டார்கள். சற்று ஓய்வெடுத்துக் கொண்டு, மதிய வேளையில் ஸ்வாமிகளைத் தரிசிக்க வந்தார்கள் பாகவதர்கள். பாத பூஜை தரிசனம் செய்கிற பேற்றை அவர்களுக்கு வழங்கினார் ஸ்வாமிகள். அதன்பின், ‘அன்னதானக் கூடம் போய் மதிய உணவு சாப்பிட்டுவாருங்கள்’ என்று உத்தரவிட்டார். மகானின் உத்தரவுக்கு மறுபேச்சு பேசாமல் சாப்பிட்டார்கள்.
இரவு வேளையிலும் அதேபோல் நடந்தது. பிரசாதம் சாப்பிட்டார்கள்.

ஆக, ஏகாதசி தினத்தன்று மூன்று வேளையும் ஸ்வாமிகள் உத்தரவின் பேரில், பாகவதர்கள் உணவு அருந்தினார்கள். வந்த சூட்டோடு முதல் நாள் இரவே இவர்கள் ஊருக்குத் திரும்பி இருந்தார்கள் என்றால், இந்த மூன்று வேளை சாப்பாடு இருந்திருக்காது.
ஏகாதசி அன்று மூன்று வேளையும் சாப்பிட்டு முடித்த பாகவதர்களை அன்றைய தினம் இரவு தன் அறைக்கு அழைத்தார் ஸ்வாமிகள்.
குழம்பிய நிலையில் காணப்பட்ட பாகவதர்களுக்கு ஸ்வாமிகள் விளக்கம் தந்தார்!

‘‘உபவாசம் என்றால் விரதம் என்று அர்த்தம் அல்ல. பகவானுக்கு அருகே இருக்க வேண்டும். பகவான் சிந்தனையுடன் இருக்க வேண்டும். அதுதான் முக்கியம். இன்றைய ஏகாதசி முழுக்க நீங்கள் இருவரும் உபவாசம் இருந்துள்ளீர்கள். ஆசிர்வாதங்கள்!’’
அப்போதுதான் பாகவதர்களுக்குப் புரிந்தது. அன்றைய தினம் முழுக்க தாங்கள் பகவான் நினைப்புடனும், ஸ்வாமிகள் பற்றிய சிந்தனையுடனும் இருந்தது!

இதுதானே உண்மையான உபவாசம்! அதாவது அன்றைய தினம் முழுக்கக் கடவுள் அருகே வாழ்வது!

உபவாசத்தைப் பற்றி மகா பெரியவா என்ன சொல்கிறார்?

கிட்டத்தட்ட இதே கருத்தைச் சொல்கிறார் என்றாலும், பட்டினியை அதிகம் வலியுறுத்துகிறார். சாப்பிடாமல் அவ்வப்போது விரதம் இருப்பது உடல் நலனுக்கு நல்லது என்கிறார்.

மகான் சொல்வதைப் படியுங்கள்...

‘‘சுத்த உபவாசம் என்றால் முழுப் பட்டினி என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால், உபவாசம் என்றால், கூட வசிப்பது.
பகவானோடு கூட, அவனுக்குப் பக்கத்தில் ஒட்டிக் கொண்டு வசிப்பதுதான் உபவாசம். அன்றைக்கு வயிற்றில் ஒன்றையும் தள்ளாமல் இருந்தால்தான், அப்படி அவனோடு கூட அருகே வசிக்க முடியும்.

மனம் அவன் அருகே இருக்க வேண்டுமானால் அதற்கு முதலில் வயிறு வெறுமனே கிடக்கணும். சாப்பிட்டால் வயிற்றிலே ‘கடாபுடா’தான். வேலை செய்ய முடிவதில்லை. மனசை எதிலும் நிறுத்த முடிவதில்லை.

வயிறு அடைசல் இல்லாமல் ‘எம்ப்டி’யாக இருந்தால்தான் நன்றாகப் பிராணாயாமம் பண்ணி, மனசை சுத்தி செய்து கொண்டு ஒரு முகமாக நிறுத்த முடியும். வயிற்றில் கனம் இருந்தால் சுதந்திரமாக சுவாசிக்க முடியாது.

இதனால்தான் உடம்பை லகுவாக ஆக்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் சுவாசத்தை ‘ஃப்ரீ’யாகவும், மனசை ‘லைட்’டாகவும் பண்ணிக் கொண்டு நன்றாக ஈஸ்வர தியானத்தில் ஈடுபடலாம். இதற்கு எப்போதுமே ஆகாரத்தை எளிமையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

உடம்பை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை சுத்த உபவாசம் (ஏகாதசி தினத்தன்று) அனுஷ்டிக்க வேண்டும் என்று சாஸ்திரம் விதிக்கிறது.

மகா பெரியவா

‘நான்... நான்’ என்று இந்த உடம்பு நினைத்துக் கொண்டிருப்பதால்தான் எப்போதும் இதற்கு பணிவிடை செய்வதையே கார்யமாக வைத்துக்கொண்டு, ஆத்மாவைக் கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறோம்.இதற்கு தேஹாத்ம புத்தி போகணும்.’’
மகா பெரியவா இங்கே சொல்கிற தேஹாத்ம புத்தியைப் பற்றி சற்றே தெரிந்து கொள்வது அவசியம். தெரிந்து கொண்டால்தான், அடுத்து அவர் சொல்வதைப் புரிந்து கொள்ள முடியும். நம் ஒவ்வொருவருக்கும் இந்த தேஹாத்ம புத்தியானது விலக வேண்டும். இதற்கு குருவருள் அவசியம்.

சதாசிவ ப்ரம்மேந்திராளின் ‘ஆத்ம வித்யா விலாசம்’ நூல், அவருடைய சிறந்த படைப்புகளுள் ஒன்று. அதில் தேஹாத்ம புத்தி பற்றி அழகாக விளக்கி இருப்பார்.

ஆத்மா கண்களுக்குத் தெரியாதது. ‘எங்கே? எங்கே?’ என்று தேட வைக்கும். எளிதில் ஆத்மாவைப் பிடிக்க முடியாது.
ஆத்மாவின் அளவு பற்றி வேதம் விசித்திரமாகச் சொல்கிறது.

என்ன அளவு தெரியுமா?

ஒரு பசுவின் வாலில் ஒரு முடியை எடுத்து அதை நூறாகப் பிளந்து, அதில் ஒரு பிளவை எடுத்து அதை ஆயிரம் பாகங்களாகப் பிரிக்க வேண்டும். பிறகு, அந்த ஆயிரத்தில் ஒன்றை மீண்டும் ஒரு ஆயிரம் துண்டுகள் ஆக்க வேண்டும். அதேபோல் அந்த ஒரு துண்டையும் மறுபடியும் ஆயிரம் துண்டுகள் ஆக்க வேண்டும் (தலை சுற்றுகிறதா?). கடைசியாக மிஞ்சுவது ஏதாவது இருந்தால் அதுதான் ஆத்மாவின் அளவு.

இந்த அளவுக்குச் சொன்னதன் காரணம் ஆத்மா என்பது அத்தனை நுட்பமானது. கண்களுக்குத் தெரியாதது. அதே சமயம் அது எங்கும் இருக்கும் சர்வ வியாபி. இது அல்ல... இது அல்ல என்று ஒவ்வொன்றாய் விலக்கினால் கடைசியில் எஞ்சுவதுதான் ஆத்மா.
ஆனால் ஜீவன் (உடல்), மாயையால் கட்டுப்பட்டுள்ளது. ஆத்மாவைப் போல் ஜீவன் பலவற்றோடு சம்பந்தப்படாமல் இருக்க முடியாது. விழிப்பு, உறக்கம், கனவு, ஏழ்மை, பணத்தைத் தேடி எப்போதும் அலைதல், அந்தப் பணத்தால் வரும் அடுக்கடுக்கான கஷ்டங்கள், மறுபிறப்பு, பிறந்து மீண்டும் எல்லாவற்றையும் அனுபவித்தல்... இப்படித் திரும்பத் திரும்ப இதே கதை தொடர்ந்து கொண்டே இருக்கும். இருட்டையே வெளிச்சம் என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிற கதையைத்தான் இந்த உடல் செய்து கொண்டிருக்கிறது.

தேஹம்தான் ஆத்மா என்கிற தேஹாத்ம புத்தி அகல வேண்டும். விடாமுயற்சியாலும், பயிற்சியாலும்தான் மனிதன் உண்மையிலேயே தான் யார் என்பதை அறிவான். இப்படி அறிய முற்படுவதற்கு அவனுக்கு ஒரு குரு வேண்டும்.

குருவை அடைந்தால், அவர் அருளால், அவரிடம் கொண்டிருக்கிற சிரத்தையாலும் பக்தியாலும் ஒருவன் கரை ஏறிவிட முடியும், அறிவு துலங்கும். மாயை அறுபட்டுப் போகும்.

துக்கம் - சுகம், இன்பம் - துன்பம் என்று எதுவும் தன்னை நெருங்காமல் சம நிலையில் மனிதன் இருப்பதற்கு இந்த தேஹாத்ம புத்தி விலக வேண்டும்.

இனி, மகா பெரியவா சொல்வதைத் தொடர்ந்து பார்ப்போம்.

(ஆனந்தம் தொடரும்...)

சென்ற அத்தியாயத்தை வாசிக்க:

மகா பெரியவா: அருளே ஆனந்தம் - 44

x