மல்லிநாடு என அக்காலத்தில் அழைக்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூரில் கலியுகத்தில் நள வருஷம் ஆடி மாதம் சுக்லபட்சம் சனிக்கிழமையுடன் கூடிய பூர நட்சத்திரத்தில், துளசியின் மடியில் ஆண்டாள் நாச்சியார் அவதரித்தாள்.
ராமாயணத்தில் பூமியை பொன் ஏர்கொண்டு உழும்போதுதான் ஜனக மகாராஜன் சீதாபிராட்டியை கண்டெடுத்தார். அதுபோல் பூமியில் இருந்துதான் பெரியாழ்வார் ஆண்டாள் நாச்சியாரைக் கண்டெடுத்தார். இதனால் இருவருமே பூமாதேவியின் அம்சமாக கருதப்படுகிறார்கள்.
‘பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே’ என்பது ஆண்டாள் நாச்சியாருக்குரிய வாழித்திருநாமம். பெரியாழ்வார் பெற்றெடுக்கவில்லை. கண்டெடுத்தார். ஆனாலும் பெரியாழ்வாரும், அவரது திருத்தேவியார் விரஜையும் தாங்கள் பெற்ற பிள்ளையாகவே ஆண்டாளை போற்றி வளர்த்தனர். ஆண்டாளும் தன்னை, பட்டர்பிரான் கோதை என்றுதான் அறிமுகம் செய்கிறாள்.
ஸ்ரீ மணவாள மாமுநிகள் ஆண்டாள் நாச்சியாரின் மேன்மையையும், அவள் அவதரித்த ஆடிப்பூரம் நாளின் மேன்மையையும், தமது உபதேச ரத்தினமாலையில் மூன்று பாசுரங்களில் பெருமைபடக் கூறுகிறார்.
“இன்றோ திருவாடிப்பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள்
குன்றாத வாழ்வான வைகுந்த போகம் தன்னை இழந்து
ஆழ்வார் திருமகளாராய்” - உபதேச ரத்தினமாலை- 22.
எளிய விளக்கம்: “பூமிப்பிராட்டி வைகுந்தத்தில் எம்பெருமானுடன் இருப்பவள். பரமபதத்தின் எல்லையில்லாத அனுபவங்களை உதறிவிட்டு, பூமியில் ஆடி மாதம் பூரம் நாளில் ஆண்டாளாக அவதரித்தாள். எதற்காக? உலக மாந்தர்களாகிய நமது விடுதலைக்காக அல்லவா, பெரியாழ்வார் திருமகளாய்ப் பிறந்தாள்?”.
“பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த
திருவாடிப் பூரத்தின் சீர்மை - ஒருநாளைக்
குண்டோ மனமே உணர்ந்துப் பார் ஆண்டாளுக்கு
உண்டாகில் ஒப்பு இதற்கும் உண்டு” - உபதேச ரத்தினமாலை - 23.
விளக்கம்: “பெரியாழ்வாரின் திருக்குமாரத்தியாக ஆண்டாள் அவதரித்த நாள் ஆடிப்பூரம். இந்நாளுக்கு சமமான ஒருநாள் இருக்க முடியுமா? ஆண்டாளின் வைபவங்களுக்கு இணையான இன்னொரு வைபவம் இருந்தால் அல்லவா ஆடிப்பூரத்துக்கு இணையான இன்னொரு நாள் இருக்க முடியும்? மனமே இதை நீ உணர்ந்து பார்”.
“அஞ்சுக் குடிக்கொரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தன் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் - பிஞ்சாய்ப்
பழுத்தாளை ஆண்டாளைப் பத்தியுடன் நாளும்
வழுத்தாய் மனமே மகிழ்ந்து” - உபதேச ரத்தினமாலை - 24.
விளக்கம்: “எம்பெருமானுக்கு உகப்பு அல்லாத விஷயங்களை செய்ய அஞ்சுபவர்களுக்கு ‘அஞ்சுக்குடி’ என்று பெயர். இத்தகைய குடியில் அவதரித்த, மற்ற ஆழ்வார்களின் வைபங்களை விட மிக உயர்ந்த தன்மை கொண்ட, குழந்தைப் பிராயத்திலேயே எம்பெருமானின் அனுபவத்தில் திளைத்தவளாகிய ஆண்டாளை, பக்தியுடனும், மகிழ்ச்சியுடனும் தினமும் போற்றுவாய் மனமே”.
ஆடிப்பூரம் நாளில் ஸ்ரீவில்லிபுத்தூரில் தேரோட்டம் நடைபெறுகிறது. தேரில் ஆண்டாள் நாச்சியாரும், ஸ்ரீரங்கமன்னாரும் பவனி வருவர். இத்தேர் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி ஸ்ரீவானமாமலை மடத்தின் கைங்கர்யமாக ஸ்ரீஆண்டாள் நாச்சியாருக்கு சமர்ப்பிக்கப்பட்டது ஆகும்.