கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியம், மருதூர் ஊராட்சியில் அமைந்துள்ளது குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோயில். பல சிறப்புகளைக் கொண்ட இக்கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21, 22, 23-ம் தேதிகளில் சூரியன் மறையும் சமயத்தில் சூரிய ஒளிக்கதிர்கள் முருகப் பெருமானின் பாதம் முதல் மார்பு வரை படர்வது தனிச்சிறப்பு.
தோற்றத்தில் பழநி முருகனைப் போலவே காட்சி அருளும் குழந்தை வேலாயுத சுவாமியை தரிசிக்க எண்ணற்ற பக்தர்கள் தினமும் இங்கு வந்து குவிவது வழக்கம். குழந்தையின் அழகையும் புகழையும் வர்ணிப்பதில் புலவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆன்மாக்களை திருத்தி நல்வழிப்படுத்தும் இறைவனாக இந்த முருகப் பெருமான் போற்றப்படுகிறார்.
உமாதேவியின் ஞானப் பாலைப் பருகி சரவணப் பொய்கையில் தாமரைப் மலர்த் தொட்டியில் ஏறி கார்த்திகைப் பெண்களின் குழந்தையாக வளர்ந்தவர் முருகப்பெருமான்.
குருந்தமலையின் சிறப்பு
முற்காலத்தில் குழந்தை வேலாயுத சுவாமி குருந்த மரத்தடியில் குறுமுனிவர் என்று அழைக்கப்படும் அகத்தியருக்கு உபதேசம் செய்தார். அவர் பூஜித்த அகத்திய லிங்கம் இக்கோயிலில் உள்ளது, குருந்த மரமே இங்கு தலவிருட்சமாக இருப்பதால் இம்மலையும் குருந்த மலை என்று அழைக்கப்படுகிறது.
திருப்பெருந்துறையில் குருவாக வந்த சிவபெருமான் குருந்த மரத்தடியில் மாணிக்கவாசகரை ஆட்கொண்டு சிவபுராணம் பாட வைத்தார். மாணிக்கவாசகர் வரலாறு குருந்த மரத்தின் பெருமைகளை உரைப்பது தனிச்சிறப்பு. இதைத் தொடர்ந்து அடியார்கள் பலரும் இம்மலையில் குருந்த மரக்கன்றுகளை நட்டு இம்மலைக்கு பெருமை சேர்க்கின்றனர்.
கொங்கு நாட்டில் இருந்த 24 பிரிவுகளில் ஒன்று ஒடுவங்க நாடு. இது தற்போது கோயம்புத்தூர், அவிநாசி, மேட்டுப்பாளையம் முதலான பகுதிகளை உள்ளடக்கிய பிரிவாகும். இதன் வட பகுதியில் அகத்தியமலை (நீலகிரி), கிழக்கில் மாதேஸ்வரன் மலை, தெற்கில் சஞ்சீவி மலை (சதுர்க்காட்டாஞ்சை), மேற்கில் தோகை மலை உள்ளன. இவற்றின் நடுநாயகமாக குருந்தமலை அமைந்துள்ளது. குருந்து என்றால் குருந்த மரம், குழந்தை, குருந்தக்கல் ஆகிய பொருள்கள் உண்டு. மேலும், காட்டு நார்த்தை, காட்டு எலுமிச்சை, வச்சிரக்கல், வெண் குருத்து ஆகியனவும் குருந்து என்ற சொல்லால் அழைக்கப்படுகின்றன.
மலைகளில் குருந்தானது (இளமையானது) குருந்த மலை. வடிவத்தில் சிறியதாகவும், அழகாகவும் காணப்பட்டது. 150 அடி உயரம் கொண்டதாக குருந்தமலை இருந்தாலும், சுற்றியுள்ள மலைகளைப் பார்க்கும்போது இது சிறிய வடிவில் காணப்படுகிறது. இளமைத் தன்மை கொண்டு, சிறு குழந்தைகளிடம் குழந்தைபோல பழகி அவர்கள் மனதில் முருகப்பெருமான் குடி கொண்டிருப்பதைப் போல, மலைகளில் குருந்தாகிய குருந்த மலையில், குழந்தை வேலாயுத சுவாமி குடிகொண்டிருக்கிறார்.
கோயில் அமைப்பும் சிறப்பும்
குருந்தமலையைச் சுற்றி பசுமையான வயல்களும், தென்னந் தோப்புகளும் அமைந்துள்ளன. மலையடிவாரத்தில் இருந்து 108 படிகள் மேலே சென்றால் மேற்கு நோக்கிய மூலஸ்தானமும், வடக்கு நோக்கிய ராஜகோபுரமும் காணப்படுகின்றன. இவை வைணவக் கோயில்களை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளன.
மலையடிவாரத்தில் கோயிலுக்கு எதிரில் மலைச்சரிவில் கஜபுஷ்கரிணி, அனுமந்தசுனை என்ற இரண்டு நீர்நிலைகள் உள்ளன. அவற்றில் ஒன்று, குடிப்பதற்கும் மற்றொன்று, குளிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. அனுமந்த சுனையின் எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் அனுமனின் பாதம் பதிந்துள்ளது. மூன்றடி உயரம் கொண்ட ஆஞ்சநேய மூர்த்தி ஓங்கிய வலது கை, இடது கயில் தாமரை மொட்டு, கையில் கடகம், விரலில் மோதிரம் கொண்டு அருள்பாலிக்கிறார். இடையில் சதங்கை, வாலில் மணியுடன் அருள்பாலிக்கும் ஆஞ்சநேயருக்கு ஹனுமத் ஜெயந்தி நாளில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும். பக்தர்கள் வெண்ணெய் சாற்றி, வெற்றிலை மாலை அணிவித்து வழிபடுவது வழக்கம்.
குருந்தமலை அடிவாரத்தில் ராஜகோபுரத்துடன் கூடிய நுழைவாயிலைத் தொடர்ந்து மலையேறிச் செல்ல வேண்டும். படிக்கட்டுகளில் இரண்டு புறமும் ராஜகம்பீர விநாயகர், சப்த மாதாக்கள், நாகர், பதினெட்டாம்படி கருப்பர், இடும்பன், கடம்பன், வீரபாகு சந்நிதிகள் அமைந்துள்ளன.
ஐந்தடி உயரம் கொண்ட கம்பீர விநாயகர், வலதுகரம் ஒன்றில் தந்தம், பின்கரங்களில் பாசம், அங்குசம் ஆகியவற்றை ஏந்தி அருள்பாலிக்கிறார். மலைப்படி ஏறும் வழியில் இருபுறமும் வேல்கள் நடப்பட்டுள்ளன. ஒருபுறம், காசி விஸ்வநாதர் மற்றும் காசி விசாலாட்சி அம்மனுக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன. மறுபுறம், தீபத்தூண் மற்றும் ஐந்து தலை ராஜ நாகலிங்க சந்நிதி உள்ளன. இவற்றைச் சுற்றி சூரியன், பஞ்சாட்சர கணபதி, பஞ்சலிங்கம், வள்ளி, தெய்வானை உடனுறை சண்முகர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், நவக்கிரகம், காலபைரவர், சந்திரன் ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன.
காசி விஸ்வநாதர் சந்நிதியைத் தாண்டி மேலே குழந்தை வேலாயுத சுவாமி சந்நிதி ராஜகோபுரத்துடனும் சுற்றுப் பிரகாரத்துடனும் அமைந்துள்ளது. கருவறையில் மூலவர் குழந்தை வேலாயுத சுவாமி நான்கரை அடி உயரத்தில் வலது கையில் தண்டம் ஏந்தி, மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். குருந்தமலை குழந்தை வேலவனுக்கு இருவகை அலங்காரம் செய்யப்படுகிறது. ஒன்று, ராஜ அலங்காரம், மற்றொன்று, வேட அலங்காரம். மூலவர் சந்நிதியில் அகத்தீஸ்வரர், ஆனந்த வல்லி அம்பாள் அருள்பாலிக்கின்றனர்.
800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் அகத்திய முனிவர், அருந்தவன், ஆதவன் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர். இத்தலத்தைச் சுற்றி 1 மைல் தூரத்துக்கு வீடுகளே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை மத்துவராயர் பாலயத்தார் கோயில் மானியமாக 100 ஏக்கர் நிலத்தை அளித்துள்ளனர்.
குருந்தமலைக்கு வடக்கே உள்ள பகாசுரன்மலை அருகே ஆரவல்லி, சூரவல்லி கோட்டைகள் உள்ளன. கிழக்கே உள்ள வள்ளிமலையில் காணாச்சுனை என்ற பெயரில் ஒரு சுனை உள்ளது. இது சிறிய பொந்து போல் இருப்பதால், குறுகிய பாத்திரத்தைப் பயன்படுத்தி மட்டுமே இதிலிருந்து நீர் எடுக்க முடியும். இந்தச் சுனையின் ஆழம் எவ்வளவு என்பதை இன்றுவரை அறிய முடியவில்லை. இங்குள்ள குகையில் வள்ளி நாச்சியாரின் உருவம் வைக்கப்பட்டுள்ளது.
குருந்தமலை முருகப் பெருமான் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். இதைத் தொடர்ந்து பலர் கோயிலில் திருப்பணிகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.
நூல்கள் போற்றும் குருந்தமலை
சிரவணபுரம் கௌமார மடாலயம் தவத்திரு கந்தசுவாமி சுவாமிகள் குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி மீது பல பாடல் தொகுப்புகளை இயற்றியுள்ளார். குருந்தமலை ஸ்ரீ கம்பீர விநாயகப் பதிகம், குருந்தமலை ஸ்ரீ குழந்தை வேலாயுத மாலை, குழந்தை வேலாயுத சுவாமி பிள்ளைத் தமிழ், குருந்தமலை திருப்புகழ், குருந்தமலை பதிற்றுப் பத்தந்தாதி, குருந்தமலை ஸ்ரீ ஆஞ்சநேயர் பதிகம் ஆகியன குருந்தமலை புகழை உரைக்கின்றன.
இக்குமரனை அணைத்து உச்சி மோந்து தாலாட்டு பாடியும், சப்பாணி கொட்டச் செய்தும், முத்தமிட்டும், அம்புலி காட்டியும், சிறுபறை முழக்கியும், சிறுதேர் உருளச் செய்தும், பிள்ளைத் தமிழ் பாடி பார்த்துக் களித்தவர் தவத்திரு கந்தசுவாமி சுவாமிகள்.
உடுமலை சரபகவி பாககவி ஜி.டி.அரங்கசாமி தாஸ், ‘குருந்தமலைத் திருப்புகழ்’ பாடல்களையும், சின்னத்தம்பாளையம் சொர்ணமணி நாராயணசாமி, ‘குழந்தை வேலாயுத சுவாமி துதிமாலை’ பாடல்களையும் இயற்றியுள்ளனர்.
திருவிழாக்கள்
தைப்பூசத் திருவிழா (11 நாள்), பங்குனி உத்திர திருவிழா, கந்த சஷ்டி சூரசம்ஹார உற்சவம் இங்கே வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தைப்பூச தேர்த் திருவிழா சமயத்தில் வள்ளி திருமணம் நடைபெறும். பங்குனித் தேர் திருவிழா சமயத்தில் எண்ணற்ற பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். மாத கிருத்திகை, அமாவாசை, சஷ்டி தினங்களில் குழந்தை வேலாயுத சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
மே மாதத்தில் முதல் செவ்வாய்க்கிழமையில் திருமுருக பக்தர்களும், ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி கங்காதர செட்டியார் வம்சாவளியினரும் இங்கு திருப்படித் திருவிழா நிகழ்த்துவது வழக்கம். பங்குனி உத்திர தினத்தில் பால்குட விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மார்ச் 21, 22, 23-ம் தேதிகளில் சூரிய வழிபாடு நடைபெறுகிறது.
குழந்தை பாக்கியம் கிடைக்க, கடன் தொல்லை நீங்க, திருமணத் தடை விலக, பாப விமோசனம் பெற, கண் திருஷ்டி குறைய இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும், பக்தர்கள் மூலவருக்கு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். எதிரிகளை வெல்ல சத்ரு சம்ஹார திருட்ஷத அர்ச்சனையும் இங்கு செய்யப்படுகிறது.
கோயில் அமைவிடம்: கோவை மாநகரில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ளது காரமடை. இங்கிருந்து மேற்கே வெள்ளியங்காடு செல்லும் வழியில் உள்ள புங்கம்பாளையத்தில் இருந்து வடக்கே சென்றால் 2 கி.மீ தொலைவில் குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோயிலை அடையலாம்.