தீபத்திருநாளன்று இப்படி விளக்கேற்றி, மனமுருகி பிரார்த்தனை செய்து பாருங்க... ஐஸ்வர்ய கடாட்சத்தை அருள்வாள் மகாலட்சுமி. தீபங்களை ஏற்றி வழிபடுவது, நம் இல்லத்தில் மங்கலங்களை நிறைக்கச் செய்யும் என்பது ஐதீகம். குறிப்பாக, பஞ்சகவ்ய தீபமேற்றி வழிபட்டால் சகல வளங்களும் வந்து சேரும்.
பசுவின் பால், நெய், கோமியம், தயிர் மற்றும் பசுஞ்சாணம் ஆகிய ஐந்து பொருட்களுடன் மூலிகைகளும் சேர்க்க நமக்குக் கிடைப்பதே பஞ்சகவ்ய தீபம். பசுவில் முப்பத்து முக்கோடி தேவர்கள் வாசம் செய்கிறார்கள் என்கிறது புராணம். அதுவும் பால், நெய், தயிர் போன்றவற்றில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்!
பஞ்சகவ்ய விளக்கிலிருந்து வரும் புகை வீடு முழுவதும் பரவச் செய்யவேண்டும். இதனால் நம் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் விலகும். கடன், தரித்திரம், மங்கல காரியங்களில் உள்ள தடை, கணவன் மனைவி இடையே ஒற்றுமை இல்லாத நிலை முதலானவற்றைப் போக்கியருளக் கூடியது, பஞ்சகவ்ய தீப வழிபாடு!
பஞ்சகவ்ய விளக்கை அரச இலை, செம்பருத்தி இலை, வாழை இலை அல்லது வெற்றிலை என இவற்றில் ஏதேனும் ஒரு இலையின் மேல் வைத்துக்கொள்ள வேண்டும். நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி தீபமேற்றலாம். சாதாரணமாகவே நெய் ஊற்றி, தாமரைத் தண்டு திரியில் விளக்கேற்றுவது செல்வத்தைப் பெருக்கும்.
பஞ்சகவ்ய விளக்கில் விளக்கின் திரி எரிந்த பின்பு, விளக்கும் சேர்ந்து எரிய ஆரம்பிக்கும். விளக்கு எரிந்த பின்பு கிடைக்கும் சாம்பல் விபூதிக்கு இணையானது. இந்த விபூதியை தினமும் நெற்றியில் இட்டுக் கொண்டு வந்தாலே, நம் வாழ்வில் இதுவரை இருந்த பிரச்சினைகள் அனைத்தும் விரைவில் நீங்கும்!
பஞ்சகவ்ய விளக்கை கிருத்திகை, அமாவாசை, பௌர்ணமி முதலான நாட்களில் ஏற்றலாம். அதேபோல், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் ஏற்றி வணங்கலாம்.
ஒரு முறை பஞ்சகவ்ய தீபமேற்றி வழிபடுவது, கோ பூஜை செய்ததற்கும் லட்சுமி நாராயண பூஜை செய்ததற்குமான பலன்களைத் தரும்! வீட்டில் கன்றுடன் கூடிய பசுவின் படம் அல்லது கோமாதா படத்தின் முன்பு இந்த விளக்கை ஏற்றி வழிபடுவது இன்னும் சிறப்பு.
பஞ்சகவ்ய தீபங்கள் நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கின்றன. இவற்றை வாங்கி வைத்துக் கொண்டு, ஏழு செவ்வாய்க்கிழமை அல்லது ஏழு வெள்ளிக்கிழமைகள் என கணக்கு வைத்துக் கொண்டு, 11 முறை பஞ்சகவ்ய விளக்கேற்றி, ஆத்மார்த்தமாக வழிபட்டு வந்தால், குடும்பத்தில் கணவன் மனைவி இடையேயான பிரச்சினைகள் நீங்கும். கடன் பிரச்சினையில் இருந்து விடுபடலாம். கண் திருஷ்டி முதலானவை கழியும். இல்லத்தில் சுபிட்சம் குடிகொள்ளும். நம் வீட்டில் மகாலட்சுமி எப்போதும் குடியிருந்து நம்மைக் காத்தருளுவாள்!
இதையும் வாசிக்கலாமே...
ஸ்கிரீன் ஷாட் எடுங்க... வாட்ஸ் அப்பில் வைரலாகும் தீபாவளி மீம்ஸ்கள்!