ஆண்டாள் அவதாரத் திருநாள் -3: நாச்சியார் திருமொழி


ஆண்டாள் நாச்சியார்

உலகில் உள்ள அத்தனையையும் இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒன்று உயிருள்ளவைகள், இரண்டாவது உயிரற்றவை. உயிருள்ளவைகளும், உயிரற்றவைகளும் ஸ்ரீ மந் நாராயணனுக்கு சொந்தமானவை. ஈஸ்வரனாகிய ஸ்ரீ மந் நாராயணனே அனைத்துக்கும் எஜமானன்.

தமது ஊழ்வினைகளுக்கு ஏற்ப மண்ணில் பிறவியெடுத்த ஆத்மாக்கள் தமது எஜமானனாகிய ஸ்ரீ மந் நாராயணனைச் சரண் அடைந்து, அவனுக்கு வேண்டிய கைங்கர்யங்கள் செய்து, அவனையே அடைய வேண்டும் என்பது விதி.

என்ன செய்தால் ஸ்ரீ மந் நாராயணனை அடையலாம்?

ஸ்ரீ மந் நாராயணனைக் கொண்டுதான், ஸ்ரீ மந் நாராயணனை அடைய முடியும். வேறு எந்த முயற்சிகளும் இதற்கு உதவாது.

ஆண்டாள் நாச்சியார் மார்கழி நோன்பு மேற்கொண்டாள். மார்கழி 30 நாட்களும் தலா ஒரு பாடல் வீதம் 30 பாடல்கள் கொண்ட திருப்பாவையை இயற்றினாள். நோன்பின் நிறைவில், ‘பகவானுக்கு கைங்கர்யம் செய்யும் பாக்கியம் மட்டும் போதும்’ என்று பகவானிடமே அதை வேண்டினாள். அந்தப் பாடல் வருமாறு:

“சிற்றஞ்சிறுகாலே வந்துன்னை சேவித்து உன்

பொற்றாமரை அடிகளே போற்றும் பொருள் கேளாய்

பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தினுள் பிறந்து நீ

குற்றேவல் எங்களை கொள்ளாமற் போகாது

இற்றை பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு

உற்றோமே யாவோம் உமக்கே நாம் ஆட்செய்வோம்

மற்றைநங் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்”

இதன் எளிய விளக்கம்:

“மார்கழி 30 நாட்களும் நோன்பு இருந்து, அதிகாலையிலேயே உன்னை வணங்கி, உன் திருவடிகளை போற்றியது ஏன் தெரியுமா? ஆய்க்குடியில் அவதரித்த உனக்கு கைங்கர்யம் செய்யும் பேறானது எங்களை விட்டு என்றும் போகக்கூடாது. இந்தப் பிறவி மட்டுமல்ல, இன்னும் எத்தனை பிறவி எடுத்தாலும் உன்னையே உறவாகக் கொண்டு, உனக்கு மட்டுமே கைங்கர்யம் செய்யும் வரத்தை நீ எங்களுக்குத் தர வேண்டும். அதைத் தவிர மற்ற நாட்டங்களை நீக்க வேண்டும்”.

மார்கழி நிறைவுற்று மாசியும் பிறந்தது. ஆனாலும் ஆண்டாள் நாச்சியார் எதிர்பார்த்த எம்பெருமான் வரவில்லை. அவளை கைக்கொள்ள வில்லை. லீலா விநோதங்களைக் காட்டி எம்பெருமான் மறைந்திருந்தான். இவளுக்கோ, எம்பெருமான் வந்து அவளைக் கைக்கொண்டு அவள் ஆசையை நிறைவேற்றவில்லையே என்ற ஏக்கம் மிகுந்தது. எம்பெருமான் மீதிருந்த அளவிறந்த காதலாலும், அவன் தன்னை உடனே வந்து கைக்கொள்ளாததாலும் மிகவும் கலக்கத்தை அடைந்தாள்.

மார்கழி மாதம் நோன்பு நிறைவுற்றதும், தொடர்ந்து தை மாதம் 30 நாளும் நோன்பு மேற்கொள்ள முடிவெடுத்தாள். மாசி மாதத்திலேயே அதற்கான ஆயத்தங்களைத் தொடங்கினாள். இதற்காக ஆண்டாள் நாச்சியார் பாடியது 143 பாடல்கள் கொண்ட நாச்சியார் திருமொழி என்பதாகும்.

ஆண்டாள் நாச்சியார், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலயம்

‘நாச்சியார் திருமொழி’ பாடல்களைப் படிக்கும் போது, சாதாரண ஆண் - பெண் உறவை மனதில் கொண்டு படித்தல் கூடாது. திருப்பாவையை நிறைவு செய்யும்போது, “மற்ற காமங்களை நீக்கி விடு” என்று ஆண்டாள் நாச்சியார் எம்பெருமானிடம் பிரார்த்திக்கிறாள்.

அதே நினைவோடு நம் மனதில் உள்ள மனித இன்பங்களை அறவே ஒழித்து, ஓர் ஆன்மா, பரமாத்மா மீது கொண்ட காதலையும், பரமாத்மாவை நினைத்து ஏங்குவதையும், பரமாத்மாவை அல்லாது வேறு எதனுடனும் தனக்கு உறவு கூடாது என்பதையும், பரமாத்மாவுடன் அது திளைக்கும் இன்பத்தையும் மட்டுமே மனதில் திடமாகக் கொண்டு படிக்க வேண்டும். அப்போதுதான் நாச்சியார் திருமொழி பாடல்களின் மிக உயர்ந்த கருத்துக்கள் புலப்படும். உதாரணத்துக்கு ஒரு பாடலைப் பார்ப்போம்.

“வானிடை வாழும் அவ்வானவர்க்கு மறையவர் வேள்வியில் வகுத்த அவி

கானிடைத் திரிவதோர் நரி புகுந்து கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப

ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கென்று உன்னித்து எழுந்த என் தடமுலைகள்

மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே!”

இதன் எளிய விளக்கம்:

“மன்மதனே! தேவர்களுக்காக யாகத்தில் சமர்ப்பிக்க வைத்துள்ள பதார்த்தங்களை, காட்டிலே திரியும் ஒரு நரியானது புகுந்து அதனை எடுத்துக் கொள்வதையும், முகர்ந்து பார்ப்பதையும் ஏற்றுக் கொள்ள முடியுமா? அதுபோலே, திருச்சக்கரமும், திருச்சங்கும் கொண்ட எம்பெருமானுக்காக உள்ள எனது உடலை, மனிதர்களுக்கு கொடுப்பதா? அப்படி ஒரு பேச்சு எழுந்தாலேயே நான் உயிர் வாழமாட்டேன்”.

ஆண்டாள் நாச்சியார் பூமாதேவியின் அம்சம். தன் பிள்ளைகளாகிய நம் மீது பற்று கொண்டாள். உலக துன்பங்களில் இருந்து நாம் அனைவரும் விடுபட வேண்டும். பேரானந்த மயமான எம்பெருமானை நாம் அடைய வேண்டும் என்று ஆசைப்பட்டாள். அதற்காகவே திருப்பாவையையும், நாச்சியார் திருமொழியையும் பாடினாள். எம்பெருமானை அடைய மிகக்கடினமான தவமோ, தானமோ, யாகமோ, ஜெபமோ செய்ய வேண்டாம். கடினமான அனைத்து உபாயங்களையும் கைவிட்டு, மிக எளிதான வழியாகிய எம்பெருமானைச் சரணடைந்தால் மட்டும் போதும். அவன் நம்மைக் காப்பாற்றி கரை சேர்ப்பான் என்கிறாள்.

ஆண்டாளை முதலில் சரணடைவோம். அவள் நம்மை எம்பெருமானுடன் சேர்த்து வைப்பாள்.

x