தீபாவளியன்று ஏன் உச்சி முதல் உள்ளங்கால் வரை நல்லெண்ணெய் தேய்த்து, சியக்காய் வைத்து வெநீர் குளியல் எடுத்து, புத்தாடை அணிகிறோம் தெரியுமா? தீபாவளித் திருநாள் குறித்து புராண இதிகாசங்களில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. பண்டிகையின் தாத்பர்யத்தைத் தெரிஞ்சுக்கலாம் வாங்க.
தீர்க்கதமஸ் மகா முனிவர் சோலைவனத்தில், சிறிய ஆஸ்ரமம் அமைத்து, மூன்று வேளையும் பூஜைகள் செய்து, கடும் தவமிருந்து வந்தார். முனிவரின் பூஜைக்கு அவரது மனைவியும், மக்களும், சீடர்களும் பக்கபலமாக இருந்து எல்லா பணிவிடைகளையும் செய்து வந்தார்கள்.
சர்வ வரங்களைப் பெற்ற ஞானயோகி சனாதன முனிவர் ஓர் நாள், இவர்களது ஆஸ்ரமத்துக்கு வந்தார். அவரைப் பார்த்ததும் வாசலுக்கு ஓடி வந்து வரவேற்றார் தீர்க்கதமஸ் முனிவர். மனைவி மக்களுடன் சாஷ்டாங்கமாக விழுந்து சனாதன முனிவரை நமஸ்கரித்தார். சனாதன முனிவருக்கு பாதபூஜைகள் செய்தார். அவரை ஆசனத்தில் அமரச் செய்து, நமஸ்கரித்தார். அவருக்கு குரு மரியாதைகள் செய்து, உணவுக்கும் ஏற்பாடு செய்தார். பிறகு, சனாதன முனிவர் அனைவரையும் எதிரே அமரச் சொல்லி, உபதேசங்களை வழங்கினார்.
‘‘மனதில் உள்ள துன்ப இருளை அகற்றுவதற்குப் பிரயத்தனப்படுவதே மனிதப் பிறப்பின் மிகப்பெரிய நோக்கம்; கடமை. அதேபோல், வாழ்வில் இன்ப ஒளியேற்றும் நிகழ்வு வராதா என்கிற ஏக்கமும் எல்லோருக்கும் இருக்கிறது தானே! இருளை அகற்றவும் ஒளியை அதிகரிக்கவும் விரதம் ஒன்று உண்டு. அதைக் கடைப்பிடித்தால் நடப்பது எல்லாம் நன்மையாகவே நடந்தேறும். விரும்பியவை எல்லாம் கிடைத்தே தீரும். குருவருளும் கிடைக்கும்; இறையருளும் கிடைக்கும். சரஸ்வதியும் அருளுவாள்; லட்சுமியும் அரவணைப்பாள். சிவ விஷ்ணுவின் பேரருளைப் பெறலாம்’’ என்றார் சனாதன முனிவர்.
’’இந்த விரதம் மிக மிக எளிமையானது. அதே நேரம் மிகமிக வலிமையானது. அற்புதமான இந்த விரதத்தை சொல்லித் தருகிறேன் கேள். துலா மாதம் (ஐப்பசி) தேய்பிறை திரயோதசி அன்று மகா பிரதோஷ பூஜை செய்யுங்கள். சிவனாரையும் நந்தி தேவரையும் உரிய மலர்களால் அலங்கரித்து, மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். அப்படியே, எம தீபம் ஏற்றி எமதரும ராஜனை வழிபடுங்கள். இதனால் நம் வாழ்க்கை மலரும்.
நம்முடைய முன்னோர்கள் சொர்க்கத்துக்குச் செல்வார்கள். அப்படிச் செல்லும் நம்முடைய முன்னோரின் ஆசி, நமக்கு பரிபூரணமாகக் கிடைக்கும். ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் நிம்மதியாகவும் சகல சம்பத்துகளுடனும் வாழலாம்’’ என அருளினார் சனாதன முனிவர்.
‘‘தீபாவளித் திருநாளில், உஷத் காலத்தில் அதாவது சூரியோதயத்துக்கு முன்னதாக, விடியற்காலையில் எழுந்து, எண்ணெய் தேய்த்து வெந்நீரில் நீராட வேண்டும். உஷத் காலத்தில் பெரும்பாலும் சுவாதி நட்சத்திரத்தில் சூரியனும் சந்திரனும் சஞ்சரிப்பதாக ஐதீகம்! எனவே, இந்த நாள், மிகவும் புனிதமானது. சக்தி வாய்ந்தது. இந்த நாளில் செய்யும் விரதமும் பூஜையும் பல மடங்கு பலன்களைத் தந்தருளும்!”
”இந்தப் புனித நன்னாளில், எண்ணெயில் திருமகள் வீற்றிருக்கிறாள். உடலில் தேய்த்துக்கொள்ளும் சிகைக்காய் பொடியில் கலைமகள் அமர்ந்திருக்கிறாள். சந்தனத்தில் நிலமகள் ஐக்கியமாகி இருக்கிறாள். குங்குமத்தில் ஸ்ரீகௌரி நிறைந்திருக்கிறாள். மலர்களில் தேவதைகளும், அன்றைய நாளில் அனைத்து நீரில் கங்காதேவியும் வாசம் செய்கிறார்கள்.
புத்தாடைகளில் மகாவிஷ்ணு அருள்பாலிக்கிறார். தீபத்தில் சிவபெருமான் கலந்திருக்கிறார் என்கிறார்கள் தேவர்களும் மகா ஞானிகளும்’’ என்று விளக்கினார் சனாதன முனிவர்.
இந்த விழாவே தீபாவளித் திருநாள் எனும் பெயரில், கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று நவம்பர் 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளித் திருநாள். இந்த அற்புதமான நன்னாளில், நல்லெண்ணெய் தேய்த்து, சிகைக்காய் உபயோகித்து, வெந்நீரில் நீராடுவோம். இதனால் கங்கையில் ஸ்நானம் செய்த பலனும் புண்ணியமும் கிடைக்கும். அதனால் தான், வீட்டில் குளித்தாலும் ‘கங்கா ஸ்நானம் ஆச்சா?’ என்று தீபாவளியன்று எதிர்படுபவர்களிடம் கேட்டு, நமது வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்கிறோம்.
புத்தாடை உடுத்தி, தீபங்கள் ஏற்றி, இனிப்புகள் படைத்து இறைவனை வணங்கி, நம் வாழ்வில் சகல சம்பத்துகளும் கிடைக்கப்பெறுவோம்.