ஆண்டாள் அவதாரத் திருநாள் - 2: பாடினாள் நற்பாமாலை


ஆண்டாள் நாச்சியார் உடன் ரெங்கமன்னார் (ஸ்ரீவில்லிபுத்தூர்)

உத்தரப் பிரதேசத்தில் யமுனை நதிக்கரையில் வாழும் மக்களிடம் பாவை நோன்பு மேற்கொள்ளும் பழக்கம் உண்டு. பாரத தேசத்தில் வடநாட்டினர் சந்திரனின் பயணத்தை மையமாகக் கொண்டு நாள், மாதம், ஜாதகம் ஆகியவற்றைக் கணக்கிடுவர். தென்னகத்தில் உள்ளவர்கள் சூரிய பயணத்தை மையமாகக் கொண்டு நாள், மாதம், ஜாதகத்தைக் கணக்கிடுவர்.

எனவே, உத்தரபிரதேச மக்களுக்கு பவுர்ணமி நாளன்றுதான் எந்தவொரு நல்ல காரியங்களையும் தொடங்குவார்கள். யமுனை நதிக்கரையோர கிராமங்களில் இளம்பெண்கள் தங்களுக்கு நல்ல வரன் அமைவதற்காக பாவை நோன்பு மேற்கொள்வது வழக்கம். பாவை என்றால் பொம்மை எனப் பொருள். கார்த்தியாயினி தேவியின் உருவத்தை மண் அல்லது மரம் அல்லது கல்லில் வடித்து மார்கழி மாதம் 30 நாட்களும் உரிய முறையில் விரதம் இருந்து, கார்த்தியாயினி அம்பாளுக்கு பூஜைகள் செய்து வழிபடுவர். இதற்கு பாவை நோன்பு என்பது பெயர்.

ஆய்க்குடிப் பெண்ணாகவே வாழ்ந்த ஆண்டாள் நாச்சியார், ஸ்ரீ வில்லிபுத்துரையே பிருந்தாவனமாகவும், ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி பெருமாளை கிருஷ்ண பரமாத்மாவாகவும், அவரது கோயிலை நந்தகோபனின் திருமாளிகையாகவும், ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்த இளம்பெண்களை கோபிகாஸ்திரீகளாகவும் மனதால் நினைத்தாள். அவர்களோடு இணைந்து, ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவே தனக்கு மணாளனாக வர வேண்டும் என்று எண்ணி மார்கழி மாதம் 30 நாட்களும் பாவை நோன்பு இருந்தாள். கோகுலவாசிகளின் வழக்கப்படியே அந்தப் பாவை நோன்பை மார்கழி மாதம் பவுர்ணமி நாளில் தொடங்கினாள். அந்த 30 நாட்களுக்கும் தலா ஒரு பாட்டு வீதம் 30 பாடல்களை ஆண்டாள் நாச்சியார் பாடினாள். அவையே ‘திருப்பாவை’ எனப்படுகிறது.

அதன் முதல் பாடலில், ‘மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாம்’ என்றுதான் ஆண்டாள் நாச்சியார் தொடங்குகிறாள். தான் மட்டும் எம்பெருமானை அடைந்து, அவனது அருளைப் பெற வேண்டும் நினையாமல், இந்த உலக மக்கள் அனைவரும் அவனது அருள்பெற வேண்டும் என்பதற்காக திருப்பாவையைத் தந்தாள். ஸ்ரீவில்லிபுத்தூரின் அனைத்து பெண்களையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டு பாவை நோன்பும் நோற்றாள். பாவை நோன்பின் இறுதியில் எம்பெருமானிடம் அவள் கேட்டது என்ன தெரியுமா? பொன்னையோ, பொருளையோ, இந்த உலக இன்பங்களையோ அவள் கேட்க வில்லை.

ஆண்டாள் நாச்சியார்

“எந்நாளும் உனக்கு கைங்கர்யம் செய்து கொண்டிருக்கும் பாக்கியத்தை மட்டும் கொடு” என்றுதான் கேட்டாள். திருப்பாவையின் 29-வது பாடலில் இதனை அறியலாம்.

நான்கு வேதங்களில் கூறப்பட்ட கருத்துக்களை விட மேலானது இந்த 30 பாடல் கொண்ட திருப்பாவை. அதுமட்டுமல்ல, அந்த வேதங்களுக்கே விதை போன்றது திருப்பாவை என்று முன்னோர்கள் அருளிக் கூறுகின்றனர். அந்தப் பாடல் வருமாறு:

"பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்

வேதமனைத்துக்கும் வித்தாகும்

கோதைத் தமிழ் ஐயைந்தும் ஐந்தும்

அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு”

விளக்கம்: “ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவை 30 பாடல்களும் நமது பாவங்களை எல்லாம் தீர்க்கும் சக்தி கொண்டது. பாவங்கள் நீங்கினாலேயே பரந்தாமனின் திருவடியை நமக்கு காட்டிவிடும். பெரிய ஆலமரம் மிகச்சிறிய விதைக்குள் இருப்பது போல், பல லட்சம் ஸ்லோகங்களைக் கொண்ட நான்கு வேதங்களுக்கும் 30 பாடல்களைக் கொண்ட திருப்பாவையே வித்தாகும். கோதை எனப்படும் ஆண்டாள் நாச்சியார் இனியதமிழில் இயற்றிய 30 பாடல்களை (ஐயைந்தும் ஐந்தும் என்றால் 5x5+5=30) யார் அறியவில்லையோ, அவர்களை இந்த வையகம் சுமப்பது வீண்” என்பதாகும்.

x