ஆண்டாள் அவதாரத் திருநாள் -1: சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்


ஆண்டாள் நாச்சியார், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலயம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீ பூமாதேவியின் அம்சமாக அவதரித்தவர் ஆண்டாள் நாச்சியார். ஆண்டாள் நாச்சியார் அவதரித்ததாலேயே இந்த ஊருக்கு பெருமை ஏற்பட்டது.

“கோதை பிறந்தவூர், கோவிந்தன் வாழும் ஊர்

சோதி மணிமாடம் தோன்றும் ஊர்,

நீதியால் நல்ல பத்தர் வாழும் ஊர்

நான்மறைகள் ஓதும் ஊர்

வில்லிபுத்தூர் வேதக்கோனூர்”.

- என்று இதற்கு பெருமை.

ஸ்ரீவில்லிபுத்தூரில் நந்தவனம் அமைத்து, அங்குள்ள ஸ்ரீ வடபத்ர சாயி பெருமாளுக்கு பூமாலை கைங்கர்யங்களை சுவாமி பெரியாழ்வார் செய்து வந்தார். இவர் வேதங்கள் ஓதுவிக்கும் ஸ்ரீவைஷ்ணவ குலத்தில் அவதரித்தார். ஆனால் பகவானுக்கு சேவை செய்வதற்கு பூமாலை சமர்ப்பிப்பதே சிறந்தது என்று எண்ணி, அதனையே பெரியாழ்வார் தேர்ந்தெடுத்தார்.

ஒருமுறை அதிகாலை வேளையில் நந்தவனத்தில் மலர்களை கொய்து கொண்டிருக்கும் போது குழந்தையின் அழுகுரல் கேட்டது. இவர் தேடிப்பார்த்த போது, துளசிப்புதரின் அடியில் பெண் குழந்தை ஒன்று அழகே உருவாய்ப் படுத்திருந்தது. அக்குழந்தையை எடுத்து வந்தார். கோதை என்று அக்குழந்தைக்கு பெயர் சூட்டி தன் மகளாக வளர்த்து வந்தார். இன்றைக்கு ஆண்டாள் சன்னதி அமைந்துள்ள இடமே அவள் அவதரித்த இடம். பெரியாழ்வார் தமது குழந்தைக்கு சிறு வயதில் இருந்தே பகவான் ஸ்ரீ மந் நாராயணனைப் பற்றியும், அவரது அவதார மகிமைகள், லீலைகள் ஆகியவற்றையும் சொல்லி வளர்த்தார்.

ஆண்டாள் அவதரித்த நந்தவனம் (ஸ்ரீவில்லிபுத்தூர்)

பகவத் விஷயங்கள் அனைத்தையும் ஆண்டாளும் ஐயமறக் கற்றாள். அத்துடன் தமது தந்தையாரைப் போலவே சிறு வயது முதலே பூமாலை தொடுக்கப் பழகினாள். விரைவில் தந்தையுடன் சேர்ந்து நந்தவனத்தைப் பராமரிப்பது, நீர் பாய்ச்சுவது, மலர்களைக் கொய்வது, பூமாலைகள் தொடுப்பது என கோதையும் புஷ்ப கைங்கர்யம் செய்வதில் ஆர்வமுடன் ஈடுபட்டாள்.

ஸ்ரீ மந் நாராயணனின் அவதாரங்களில் ஸ்ரீ கிருஷ்ணா அவதாரத்தின் மீது கோதைக்கு அதீத ப்ரீதி ஏற்பட்டது. ஸ்ரீ கிருஷ்ண பகவான் கோகுலத்தில் செய்த லீலைகள், தொடர்ந்து மதுராவிலும், துவாரகையிலும், குருக்ஷேத்திரத்திலும் அவர் புரிந்த சாகசங்கள், அவர் உதிர்த்த பொன்பொழிகளான ஸ்ரீ மத் பகவத் கீதை ஆகியவற்றை எண்ணி எண்ணி அவள் மனம் லயித்தது. பெரியாழ்வார் ஊட்டிய பக்தியானது, ஸ்ரீ கிருஷ்ண பகவானையே மணாளனாக அடைய வேண்டும் என்ற உறுதியை கோதையிடம் உண்டாக்கியது.

ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தின் போது கோகுலத்தில் வாழ்ந்த கோபிகாஸ்திரீகள் எவ்வாறெல்லாம் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவைப் போற்றினார்கள், அவரை அடைவதற்கு அவர்கள் என்னென்ன உபாயங்களைப் பின்பற்றினார்கள் என்பதையெல்லாம் தமது தந்தையின் வாய்மொழியால் அறிந்தாள். ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அவதரித்த கோகுலத்திலும், அவர் தோன்றிய ஆய்க்குலத்திலும் தான் பிறக்கவில்லையே என்று ஏங்கினாள். உடனே ஆய்க்குலத்தைச் சேர்ந்த பெண்ணாகவே மாறினாள். நடை, உடை, செய்கை, பேச்சு அத்தனையும் இடைக்குலத்துப் பெண்களைப் போன்றதாக மாறியது. அது மட்டுமல்ல தனது திருமேனியிலும் வெண்ணெய், பால், தயிரைப் பூசிக்கொண்டு முடை நாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டாள்.

கோதை மட்டுமல்ல, பெரியாழ்வாரும் அப்படியே வாழ்ந்தார். இதனை, "ப்ராஹ்மணோத்தமரான பெரியாழ்வாரும், திருமகளாரும் கோபஜந்மத்தை ஆஸ்தாநம் பண்ணினார்கள்" என்று, ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் தமது ஸ்ரீ வசனபூஷணம் என்ற நூலில் வர்ணிக்கிறார். அதாவது “பிராமண குலத்தில் பிறந்த பெரியாழ்வாரும், அவளது திருமகளாகிய ஆண்டாள் நாச்சியாரும், யாதவ குல நடைமுறைகளை விரும்பி ஏற்றார்கள்” என்கிறார். பகவத் கைங்கர்யமும், பகவத் அனுபவமும் ஏற்படும் வழிகளாக ஆண்டாளும், பெரியாழ்வாரும் கோகுலத்தில் ஆய்ப்பிறவியை விரும்பினார்களாம். ஜாதி, வர்ணம், பிறப்பு, இவைகளை மீறிய பாகவதர்களின் பெருமையை விளக்கும் வகையில் இவர்களது வாழ்க்கை அமைந்தது. பகவானுக்கு செய்யக்கூடிய கைங்கர்யம் எவ்வடிவிலும் இருக்கலாம். எந்த இடத்திலும் இருக்கலாம். எவ்வாறு இருந்தாலும் கைங்கர்யத்தின் சிறப்பு குறையாது என்பதே இவர்கள் நமக்கு காட்டிய வழியாகும்.

ஆண்டாள் நாச்சியார்

பெருமாளை மணம் செய்துகொள்ள விரும்புமளவு பக்தி வயப்பட்ட கோதை நாச்சியார், ஒருநாள் ஆழ்வார் இல்லாதபோது பெருமாளுக்காக கட்டி வைத்திருந்த பூமாலையைத் தான் சூடிக் கொண்டு கண்ணாடியில் அழகு பார்த்தாள். அது பெருமாளுக்கு அணிவிக்க ஏற்றது தானா என்பதை பரிசோதிக்க தானே முதலில் அதனை சூடிக்கொண்டாள்.

ஆனால், லீலா விநோதனான எம்பெருமானின் திருவுள்ளத்தில், “இவள் சூடிக் களைந்து கொடுத்த மாலைகள்தான் தனக்குப் பொருத்தமாக இருக்கும்” என எண்ணி, அவற்றின் மீதே விருப்பம் கொண்டான். ஒருநாள் இவள் மாலையைத் தான் சூடிக் களைந்து கூடையில் வைத்ததை பெரியாழ்வார் கண்டு திடுக்கிட்டார்.

மகளைக் கடிந்து கொண்டார். உடனே நந்தவனத்துக்குச் சென்று புதிதாக மலர்களைக் கொய்து, அவசரமாக மாலை கட்டி, கோயிலுக்கு எடுத்துச் சென்றார். ஆனால், ஸ்ரீ வடபத்ர சாயி பெருமாளோ அந்த புதிய மாலைகளை ஏற்கவில்லை. கோதை சூடிக்கொடுத்த மாலையே எமக்கு உகப்பானது அதையே தினமும் எமக்கு சமர்ப்பிக்க வேண்டும்” என்று கூறினார். இதனை கேட்டு பெரிதும் மகிழ்ந்த பெரியாழ்வார், தம் மகள் மீது அதீத அன்பு கொண்டார். தினம் தோறும் கோதை சூடிக்கொடுத்த மாலையே தினமும் எம்பெருமானுக்குச் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனாலேயே

"அன்னவயல் புதுவை ஆண்டாள் அரங்கற்குப்

பன்னுதிருப்பாவைப் பல்பதியம்-இன்னிசையால்

பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை; பூமாலை

சூடிக் கொடுத்தாளைச் சொல்லு"

- என்று ஆண்டாள் நாச்சியார் போற்றப்படுகிறாள்.

விளக்கம்: அன்னப் பறவைகள் சூழ்ந்த வளமான வயல்களை உடைய புதுவை என்னும் ஸ்ரீவில்லிபுத்துரில் அவதரித்த ஆண்டாள், திருப்பாவை என்ற பதிகத்தை இயற்றி இன்னிசையாகப் படித்தாள். அவற்றையே நற்பாமாலையாக அரங்கனுக்கு சூட்டினாள். அத்தோடு பகவானுக்கு கட்டி வைத்த பூமாலைகளை முதலில் தான் சூட்டி அழகு பார்த்து, பின்னர் இறைவனுக்கு சமர்ப்பித்தாள். அத்தகைய ஆண்டாளின் பெருமைகளைப் பாடுவோம் - என்பது இதன் பொருள்.

x