படித்து முடித்துவிட்டு நல்ல உத்தியோகத்தில் இருக்கின்ற ஒரு இளைஞனின் அம்மாவும் அப்பாவும் மகா பெரியவாளிடம் வந்தார்கள்.
சாதாரணமாக மகா பெரியவா பலருக்கும் உபதேசம் செய்வார்.
ஆனால், ‘என்னிடம் வந்த இந்தத் தம்பதியர் எனக்கு உபதேசம் செய்தார்கள்’ என்று மிகவும் நாசூக்காகச் சொல்கிறார் மகான்.
இதை ‘வசவு’ என்றும் ஒரு கட்டத்தில் சொல்கிறார்.
இதைப் படிக்கின்ற நமக்கே அதிர்ச்சியாக இருக்கிறது அல்லவா? மகானுக்கே உபதேசமா?
பெரியவாளைத் தரிசிக்க வந்த இந்தத் தம்பதியர், அவருக்கு முன்னால் அமர்ந்து ஒரு பாட்டம் புலம்பித் தீர்த்தார்கள்.
என்ன புலம்பல்?
வேலைக்குச் செல்கிற தங்களின் ஒரே மகன் ஊர்க் காரியம் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்கிறான். பிறருக்கு ரொம்பவும் உபகாரமாக இருக்கிறான். ஆனால், வீட்டில் தன் சம்பந்தமான வேலைகளை அவன் செய்வதே இல்லை. இதுதான் அந்தப் பெற்றோரின் மனக் குமுறல்.
மகானிடம் அந்தத் தாயார் சொன்னாள்: ‘‘ஊர்ல அடிக்கிற வெயில், மழை எல்லாம் அவன் மேலதான் (அப்படி என்றால், வெயில், மழை பார்க்காமல் அலைந்து திரிகிறான். பலருக்கும் உபகாரமாக இருக்கிறான் என்று பொருள்). அவனோட உடம்பே வீணா போயிடுத்து. அலைஞ்சு அலைஞ்சு தேய்ஞ்சு போயிட்டான்.
எல்லாருக்கும் நல்லது பண்ணணுமேங்கறதுக்காக கையை விட்டு நிறைய காசை செலவு பண்றான். இந்த வயசுல ஏதாவது சேர்த்து வைக்கணும்னு நினைக்காம, எல்லாத்தையும் செலவு பண்ணித் தீர்க்கி றானேனு அவன் போக்கை எதிர்த்து ஏதாவது கேள்வி கேட்டுட்டா, எங்க மேல எரிச்சல், கோபம் எல்லாத்தையும் கொட்றான். எங்களால அவன்கிட்ட இதை விளக்கிப் பேச முடியலை.
அவனுக்குப் பதில் சொல்லும் விதமா நாங்களும் விடாம பேசினோம்னா ஏதோ அப்பப்ப வீட்டுல தலை காட்றதையும் நிறுத்திடப் போறானேன்னு ஒரு கவலையும் இருக்கு பெரியவா. எனவே, எங்களால முடிந்த மட்டும் அவன் பேச்சுக்கு வாயைத் திறக்காம அமைதியா இருந்துண்டு இருக்கோம்.
என்ன இருந்தாலும், நாங்களும் மனுஷாதானே... அவனைப் பெத்தவா ஆச்சே... சிலதை சொல்ல வேண்டாம்னு மனசளவுல நினைச்சாக்கூட அப்படி இருக்க முடியலை. ரெண்டுங்கெட்டான் நிலையில தவிச்சுண்டு இருக்கோம். நீங்கதான் அவனுக்கு நல்ல புத்தி வர்ற மாதிரி அனுக்ரஹம் பண்ணணும்’’ என்று மகானிடம் மன்றாடினார் தாயார்.
வேண்டுகோள் வைத்துவிட்டு தம்பதி சமேதராக பெரியவாளுக்கு மீண்டும் ஒரு நமஸ்காரம் செய்து அமர்ந்தார்கள். மகானின் திரு முகத்தையே ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
பையனுடைய அப்பாவும் அம்மாவும் தன்னிடம் இப்படி நீண்ட வேண்டு கோள் வைத்ததை மகா பெரியவா எப்படிச் சொல்கிறார் தெரியுமா?
‘‘அவா என்கிட்ட பதுவிசா சொன்னாலும் இதை நான் எப்படி எடுத்துக்கறேன் தெரியுமா? ‘எங்கள் மகன் எங்களிடம் பாராமுகமாக இருக்கின்றான். ஊருக்கெல்லாம் ஓடி ஓடி உதவுகிறான். ஆனால், வீட்டைக் கண்டுக்க மாட்டேங்கறான்’ என்று எல்லாவற்றையும் நாசூக்காக விளக்கிச் சொன்ன பின் ‘எங்களுக்கு இத்தனை கஷ்டம் உண்டாவதற்குக் காரணம் நீங்கள்தானே? எனவே, இதை நீங்கள்தான் சரி பண்ணணும்’ என்று அவர்கள் இடித்துக் காட்டியதாகவே நான் நினைத்துக் கொள்கிறேன்.
இவற்றை எல்லாம் பார்த்த பிறகு இனிமேலும் பிரஸங்கம் பண்ணணுமா, வேண்டாமா என்று தோணுகிறது.
ஆனாலும், இப்போதுதான் என்னைப் பார்க்க வருகிறவர்களும், ‘அட்வைஸ்’ கேட்க வருகிறவர்களும் அதிகமாகிக் கொண்டு வருகி றார்கள். ஏதேனும் நல்ல அறிவுரை கிடைக்கும்னு என்னைத் தேடி வருகின்றவர்களுக்கு நல்லது சொல்லாமல் அனுப்பக் கூடாது. அவர்களுக்கு ஏதேனும் ‘அட்வைஸ்’ குடுத்துதான் அனுப்பணும்.
அதனால், இனிமேல் அதிகமாக பிரஸங்கம் பண்ணா விட்டாலும், என்னிடம் வருகிறவர்களிடம் பேசுகிறபோது, நல்லதைச் சொல்கிறபோது, ஒவ்வொருவனும் பொதுத் தொண்டு ஏதேனும் அவசியமாகப் பண்ணித்தான் ஆக வேண்டும் என்று சொல்லும்போதே, ஒரு கண்டிஷன் போடப் போகிறேன். வேறு வழியில்லை.
இரண்டு ‘பார்ட்டிகள்’ தங்களுக்குள் ஏதேனும் ஒப்பந்தங்கள் போடுகிறபோது அதற்கு சில நிபந்தனை களையும் விதித்துக் கொள்வார்கள் அல்லவா? அதுபோல் நானும் ஒரு முக்கியமான நிபந்தனையை இதுபோன்ற சமயங்களில் விதிக்கப் போகிறேன்.
முதலில் பொதுத்தொண்டு உட்பட எல்லா நல்லன வற்றையும் நிறுத்தி நிதானமாக விளக்கிச் சொல்லி விடுவேன். பிறகுதான் நிபந்தனை போடப் போகிறேன். என்ன நிபந்தனை?
‘தன் காரியம், குடும்பக் கடமைகளைக் கொஞ்சங்கூட விடாமல்’ என்று வலியுறுத்திச் சொல்ல வேண்டும் என்று தீர்மானம் பண்ணிக் கொண்டிருக்கிறேன்.
ஏதேனும் பரோபகாரம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது பேச்சு சுவாரசியத்தில் சமயங்களில் அது என்னை எங்கெங்கோ இழுத்துக் கொண்டு போய்விடும். அத்தகைய சமயங்களில் இதுபோல் நிபந்தனை போடுவதற்கு ஞாபகம் வராமலே போய்விடவும் வாய்ப்பு உண்டு. இருந்தாலும், இன்றைக்கு என்னைப் பார்க்க வந்த தாயார், தகப்பனார் பிறரிடம் சொல்ல முடியாமல் படுகிற கஷ்டத்தைக் கேட்டதில் இருந்து இப்படிச் சொல்லியே ஆக வேண்டும் என்ற ஞானம் எனக்கு உண்டாகி இருக்கிறது (எத்தனை பெரிய வார்த்தையை பெரியவா இங்கே நமக்காகப் போட்டிருக்கிறார், பாருங்கள்! ஞானகுருவாக விளங்கும் அவருக்கு ஞானம் உண்டாகி இருக்கிறதாம்... எந்த ஒரு காலத்திலும் தன்னை உயர்வாக மகா பெரியவா சொன்னதே இல்லை. அதனால்தான் அவரை ‘சர்வேஸ்வரன்’ என்கிறோம்.)
‘தான் அவிழ்த்துப் போட்ட துணியைத் தாயார்க்காரி தோய்க்கணும்... வயசுக் காலத்தில் அப்பன்காரன் கடை கண்ணி ஏறி இறங்கணும்’ என்று, வீட்டில் இருக்கின் றவர்களைத் தவிக்க விட்டுவிட்டு ஒருத்தன் ‘சோஷியல் சர்வீஸ்’ செய்யக் கிளம்பணும்’ என்று நான் நினைத்ததே இல்லை. நினைக்காவிட்டாலும் இதை வாய்விட்டு விளக்கமாக நான் சொல்லாததும் தப்புதான்.
இதனால் இன்றைக்கு இங்கே வந்து போன இந்தத் தம்பதி மாதிரி இன்னும் எத்தனை பேர் வீட்டில் என்னு டைய உபதேசம், அனர்த்தத்தை (மாறான பொருளை) உண்டாக்கி இருக்கிறதோ?
இப்போது இவர்கள் வந்து என் எதிரில் அமர்ந்து சொன்னது மாதிரி எல்லாரும் என்னிடம் வந்து சொல்லிக் கொண்டிருக்க முடியுமா?
‘இப்படிப் போய்ச் சொன்னால் அது பெரியவா மேலேயே குறை சொல்வது மாதிரி ஆகி விடும்... அப்படிப் பண்ணக் கூடாது’ என்கிற எண்ணத்தில் பலரும் பாவம், வாயை மூடிக் கொண்டு வீட்டிலேயே இருந்து கொண்டிருக்கலாம். என்னால் ஏற்பட்ட கஷ்டத்தை வெளியே சொல்ல இயலாமல் பொறுத்துக் கொண்டும் இருக்கலாம்.
இன்றைக்கு என்னிடம் வந்தவர்கள் எனக்கு என்ன உபதேசம் செய்திருக்கிறார்கள், பார்த்தேளா? ‘வசவு வசவு’ என்று இத்தனை நேரம் நான் சொன்னதை ‘உபதேசம்’ என்று சொல்லி இருக்கலாம். ‘வசவு’ என்று சொன்னால்தான் சிலருக்கு உண்மை நிலை புரியும். அப்போதுதான் நிஜத்தை அலசிப் பார்த்துத் தெரிந்து கொள்ள வழி ஏற்படும்.
ஒருவேளை ‘வசவு’ என்பதை விட ‘உபதேசம்’ என்று அடக்கமாக எடுத்துக் கொண்டு விட்டால், அது இன்னும் சவுகரியம் என்று தோன்றுகிறது.
இதன் மூலம், தன் சொந்தக் கார்யம் மற்றும் கடமைகளை விட்டுவிட்டுப் பொதுக் கார்யம் என்று பறந்து கொண்டு வீட்டில் உள்ளவர்களுக்கு சிரமம் உண்டாக்கவும் கூடும் என்பதை நான் மறக்கக் கூடாது.
‘சொந்தக் கார்யம் என்பதையே கவனித்துக் கொண்டிருந்தால், அலை ஓய்ந்துதான் சமுத்திர ஸ்நானம் என்கிற மாதிரி பொதுக் கார்யங்களை எவருமே எப்போதுமே செய்ய முடியாது’ என்றுதான் பொதுவாக நான் ‘அட்வைஸ்’ பண்ணுவது வழக்கம். இதை இனிமேல் இப்படியே விட்டுவிடக் கூடாது. மேலே சொன்ன வாசகத்தைச் சொல்லி முடித்த பின், ‘அதற்காக அத்யாவசியமான சொந்த வேலைகளை, வீட்டுப் பணிகளை ஒரு நாளும் விட்டுவிடக் கூடாது’ என்றும் எடுத்துச் சொல்லிவிட வேண்டும். இதுதான் எனக்குக் கிடைத்திருக்கும் உபதேசம்.’’
இன்றைக்கு மனிதர்களிடம் தவிர்க்க முடியாத விஷயம், ‘ஈகோ’. அதாவது, ‘நான் சொன்னதுதான் சரி... இதை மறுத்து யார் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்’ என்று செயல்படுகிற நிலை. உலகமே மதிக்கின்ற மகான், மகா பெரியவா. ஒரு தம்பதியர் தனக்குச் சொன்னதைப் பிறரும் அறிந்து கொள்ள வேண்டும் என்று அழகாகச் சொல்லி, இது எனக்குக் கிடைத்திருக்கும் உபதேசம் என்கிறார்.
யாருக்கு வரும் இந்த மனம்? முற்றும் துறந்தவர்களுக்கு மட்டுமே இத்தகைய பக்குவம் கிடைக்கும்.
(ஆனந்தம் தொடரும்...)
சென்ற அத்தியாயத்தை வாசிக்க:
மகா பெரியவா: அருளே ஆனந்தம் - 43