தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் ஆவணித் திருவிழாவில் இன்று சுவாமி சண்முகர் சிவப்பு சார்த்தி தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் குமரவிடங்கபெருமானும் வள்ளி அம்மனும் தனித் தனி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து சிவன் கோயிலை சேர்ந்தனர். ஆவணி திருவிழாவின் 7ம் நாளான இன்று அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் அதனை தொடர்ந்து தீபாராதனை நடந்தது. மற்ற கால பூஜைகள் வழக்கம்போல நடந்தது.
அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் உருகு சட்ட சேவை நடந்தது. பின்னர் சுவாமி சண்முகர் சண்முக விலாச மண்டபம் வந்து சேர்ந்தார். அங்கு மகா தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி சண்முகர் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு பிள்ளையன் கட்டளை மண்டபம் சேர்ந்தார்.
அங்கு உபயதாரர்கள் சார்பில் அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர் தங்கச் சப்பரத்தில் சிவப்பு சார்த்திய கோலத்தில் சிவன் அம்சமாக எழுந்தருளி வீதி உலா வந்து சிவன் கோயிலை சேர்ந்தார். அங்கு சேர்க்கை தீபாராதனை நடந்தது. பின்னர் பந்தல் மண்டபம் வெங்குபாஷா மண்டபத்தை சேர்ந்தார்.
8ம் திருவிழாவான நாளை (31-ம் தேதி) காலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சார்த்திய கோலத்தில் பிரம்ம அம்சமாக எழுந்தருளி வீதி உலா நடக்கிறது. பின்னர் பச்சை சார்த்தி மண்டபத்தில் சுவாமி சண்முகர் சேர்ந்ததும் அங்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடக்கிறது.
பகல் 11.30 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சார்த்திய கோலத்தில் விஷ்ணு அம்சமாக எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன் மற்றும் இணை ஆணையர் ஞானசேகரன், கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.