மகா பெரியவா: அருளே ஆனந்தம் - 43


மகா பெரியவா

மவுனத்தைப் பற்றி விரிவாகச் சொல்கிற மகா பெரியவா, ‘புலன்கள் அனைத்தையும் அடக்கியவன்தான் யோகி... அவன்தான் ‘ஜிதேந்திரியன்’ எனப்படுகிறான்’ என்கிறார்.

புயலை விட தென்றல் அழகு.

அதுபோல் பேச்சை விட மவுனம் அழகு!

அழகு மட்டுமல்ல... பாதுகாப்பானது.

வாழ்வைச் சிறப்பாக்கும். வாழ்நாளைக் கூட்டும்.

அனுமன், பீஷ்மர் போன்றோர் ‘ஜிதேந்திரியன்’ என்று அழைக்கப்படுகின்றனர்.

அனுமனை ‘ஜிதேந்திரியன்’ என்று இந்திரன் உள்ளிட்ட தேவாதி தேவர்கள் அனைவருமே அழைத்தனர்.

காரணம், அனுமன் பொறுமை காத்தவர். மவுனமாக இருக்க வேண்டிய நேரத்தில் அதைக் கடைப்பிடித்தவர்.

தூதனாக வந்தவரைத் தன் அரசவையில் வைத்து ராவணன் பேசாத வார்த்தைகள் இல்லை. இத்தனைக்கும் தான் யார் என்பதை ஒரு கணம் நிரூபிக்க முற்பட்டிருக்கலாம். ஆனால், சீதையின் நிலை எண்ணி அனுமன் மவுனம் காத்தார். வாலில் தீ வைத்த பிறகுதான் இலங்கையைப் பொசுக்கினார்.

மவுனம் ஒரு பக்கம் என்றாலும், பிரம்மச்சர்ய நிலையில் விளங்கி, காமனை வென்றவர் அனுமன். தன்னை நோக்கி வருகின்ற பிரச்சினைகள் எப்பேர்ப்பட்டதாக இருந்தாலும், அவற்றை நேர்வழியில் எதிர்கொண்டு வென்றவர்.
‘‘ஐம்புலன்களையும் அடக்கி ஆண்ட பரிசுத்த வீரர். அவர் அதிசய மேதை’’ என்று அனுமனுக்குப் புகழாரம் சூட்டி, உரிமையோடு அவரைக் கொண்டாடியவர் சுவாமி விவேகானந்தர்.

பீஷ்மருக்கும் மவுனம்தான் பல நேரங்களில் அழகு சேர்த்தது!
மவுனத்தைக் கடைப்பிடித்தால் என்ன கிடைக்கும்?
அதையும் மகா பெரியவாளே சொல்கிறார்...
‘‘மவுன விரதத்துக்கு நம்மைப் பழக்கிக் கொண்டோமானால், உடம்புக்கு நல்லது. மவுனம் மேற்கொண்டிருக்கும்போது நம்முடைய வேகமான செயல்பாடுகள், பாவங்கள் எல்லாம் போய் விடும். சாந்தமும் புண்ணியமும் கூடும்.

மவுனத்தை அடிக்கடி மேற்கொண்டு வருகிறோம். இதன் பூர்த்தி என்ன?

எங்கிருந்து வந்தோமோ அங்கேயே ஐக்கியமாகி விடுவதுதான் வாழ்க்கை (மண்ணில் இருந்து மண்ணுக்கு). அதுபோல்தான் மவுனமும்.

மவுனத்தை அடிக்கடி கடைப்பிடிக்கிறபோது நம்மிடம் பற்றி எரிகிற இந்திரிய வேகங்கள் தணியும். மங்கும். ஒரு கட்டத்தில் மெள்ள மெள்ள அணைந்துகொண்டே வரும். கடைசியில் ஏக ஜோதியாக காற்றடிக்காத இடத்தில் உள்ள தீபமாக ஆத்மா மட்டுமே பிரகாசிக்கும்.

ஜீவாத்மா, பரமாத்மா என்கிற பேதம் இல்லாத ஜோதி அது. அதுவே மவுனத்தின் பூர்த்தி நிலை!

கலக்கு கலக்கு என்று தண்ணீரைக் கலக்கிக்கொண்டே இருந்தால் அதற்குள் இருக்கிற முத்து எப்படித் தெரியும்? நாம் அநேக எண்ணங்களால் மனசைக் கலக்கிக் கொண்டிருப்பதால்தான் உள்ளே இருக்கும் ஆத்மா என்ற முத்து தெரியவில்லை.
எண்ண அலைகளை எல்லாம் நிறுத்தி விடுவதுதான் நிஜ மவுனம். அதற்கு உபாயமாக இருப்பது இந்த மவுன விரதம்.
‘யோக சாம்ராஜ்யத்துக்குள் ஒருவர் பிரவேசிப்பதற்கு முதல் வாசலே மவுனம்தான்’ என்று ஆச்சார்யாள் ‘விவேக சூடாமணி’யில் சொல்லி இருக்கிறார்.’’

மவுனம் பற்றி மகா பெரியவா சொன்ன கருத்துகள் எல்லாவற்றையும் படித்தீர்களா?

மவுனத்தின் அருமை, பெருமை தெரியாமால் கன்னாபின்னா வென்று பேசி உடலையும் உள்ளத்தையும் பாழ்படுத்துகிறோம். பத்து வார்த்தை பேச வேண்டிய இடத்தில் நாற்பது வார்த்தைகள் பேசுகிறோம்.

ஆக, மவுனம் நம் எல்லோர் வாழ்விலும் அவசியம். ஆன்ம ஜோதி பிரகாசிக்க வேண்டுமென்றால், இந்த வரம் அவசியம்.
மகா பெரியவா எங்கெல்லாம் முகாமிடுகிறாரோ, அங்கெல் லாம் ‘அனுக்ரஹ பாஷணம்’ என்ற பெயரில் பல நல்ல கருத்துகளை உபதேசம் செய்வார்.

தரிசனத்துக்கு வந்திருக்கிற பக்தர்கள் அவருடைய உபதேசங்களை செவிமடுத்துக் கேட்பதற்கு ஆவலாகக் காத்திருப்பார்கள்.
ஆனால், நடமாடும் தெய்வமான மகா பெரியவாளுக்கே ஒரு தம்பதியர் உபதேசம் செய்திருக்கிறார்கள். இதை மகானே அற்புதமாகச் சொல்லி இருக்கிறார்.

இனி, மகா பெரியவாளின் அந்த அனுபவத்தைப் பார்ப்போம்.

‘‘பரோபகாரத்தைப் பற்றிப் பலருக்கும் நான் சொல்லி வருகிறேன். அப்படிச் சொல்லும்போது எனக்குத் தெரிந் தோ தெரியாமலோ என் ஜாக்கிரதைக் குறைவால், இதற்கு ஏதும் நிபந்தனைகள் போடாமலே இருந்து விட்டேன். இதற்காக என்னை வையத்தான் (திட்ட) வேண்டும்.

தம்பதியாக இரண்டு பேர் ஒருநாள் வந்தார்கள். பரோபகாரத்தைப் பற்றி நான் சொன்னதை வைத்துக் கொண்டு, வேறு தினுசான ஒரு அபிப்பிராயம் சொல்லி விட்டுப் போனார்கள்.

இருவரில் கணவன் கொஞ்சம் எடுத்துக் கொடுத்தவுடன் அவன் மனைவியும் சேர்ந்து கொண்டு விட்டாள்.

இவர்கள் பேசியதை ‘வசவு... வசவு’ என்று நான் சொன்னாலும், அவர்கள் கொஞ்சமும் மரியாதைக் குறைவாகப் பேசவில்லை. மனசுக்குள் எழுகிற கோபத்தைச் சற்றும் வெளியே காட்டாமல் உள்ளுக்குள் அடக்கிக் கொண்டு பதற்றப்படாமல் பேசினார்கள்.
கோபப்பட வேண்டிய இடத்தில் அவர்கள் துக்கப்பட்டுக் கொண்டே சொன்னார்கள். ஆனாலும், அதை ‘வசவு’ என்று வைத்துக் கொண்டால்தான் எனக்கு ரோஷம் வந்து கொஞ்சம் ஆழமாக என்னை நானே அலசிப் பார்த்துக் கொள்வேன் என்று தோன்றியதால் ‘வசவு’ என்று சொல்கிறேன்.

பாவம், யதார்த்தத்தில் அவர்களுக்கு ரொம்பவும் கஷ்டம் ஏற்பட்டுவிட்ட காரணத்தால், என்னைத் திட்டித்தான் இருக்க வேண்டும். ஆனால், வயசை ஒரு பொருட் டாக மதித்தார்களோ இல்லையோ... அதுவாக வந்து சேர்ந்துவிட்ட ‘குரு ஸ்தானம்’தான் என்னைக் காப் பாற்றியது. இதை உத்தேசித்துதான் என்னைத் திட்டாமல் மரியாதையாகவே சொல்லிவிட்டுப் போனார்கள்.

நான் பாட்டுக்கு எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டு போகிறேனே தவிர, அவர்கள் என்னிடம் எதற்காக வந்து இப்படிப் பேசினார்கள் என்பதைச் சொல்லவே இல்லையே..!

அவர்களுடைய மகன், பிரம்மச்சாரிப் பையன். ஏதோ நல்ல வேலையில் இருக்கிறான் போலிருக்கிறது.

பரோபகாரம் பற்றிப் பல இடங்களில் நான் சொல்கிற உபதேசங்களை ஏதோ புத்தகங்களில் படித்திருக்கிறான். அதன் பின் அதிலேயே ஒரு லயிப்பு ஏற்பட்டு, உற்சாகமாக செயலில் இறங்கி இருக்கிறான். நான் என்னென்ன சொல்கிறேனோ, அவற்றை எல்லாம் பின்பற்ற வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறான்.

மகா பெரியவா

பிடி அரிசி சேகரிப்பது, மாடுகளுக்காக காய்கறித் தோல்களைப் பல இடங்களில் சேகரிப்பது, பிறகு இவற்றை எல்லாம் எங்கெங்கு விநியோகம் செய்ய வேண்டுமோ, அந்தந்த இடங்களுக்குச் சென்று முறையாக வழங்குவது, ஆஸ்பத்திரியில் இருக்கிற நோயாளிகளுக்கு ஸ்ரீமடத்தினுடைய பிரசாதம் வழங்குவது என்று இந்தப் பணிகளில் மூழ்கி இருந்திருக்கிறான். ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் சதா அலைந்து கொண்டே இருப்பானாம்.

பிரம்மச்சாரிப் பையனின் ஓயாத இந்த அலைச்சலில் அவன் தன் காரியம், தன் வீட்டுக்கு உண்டான காரியம் என்று எதையும் ஒழுங்காகச் செய்வதில்லையாம்.

இதுவாவது பரவாயில்லை. அவனுடைய அப்பாவோ, அம்மாவோ ஓரளவு இவற்றைச் செய்து சரிக்கட்டி விடலாம். ஆனால், அந்தப் பெற்றோர்களுக்கு என்ன பயம் தெரியுமா? ‘கஷ்டப்பட்டு வாங்கின வேலையிலாவது ஒழுங்காக கவனம் செலுத்தி பணிபுரிகிறானா?’ என்று.

ஆபீஸ் வேலைகளை சிரத்தையாகச் செய்யாவிட்டால், வீடு மாதிரி உதவி புரிவதற்கு அப்பாவும் அம்மாவுமா வர முடியும்? இதுதான் அவர்களின் பெரிய சந்தேகம்... பயம்.

அந்தப் பிரம்மச்சாரி, தான் கட்டிண்டிருக்கிற துணி யைக் கூடத் தோய்ப்பது கிடையாதாம்... அவனுடைய அம்மாதான் துவைத்துப் போடுவாளாம். இந்த விஷயத் தை அவனுடைய அப்பா என்னிடம் சொன்னார்.

தனக்குக் கணவர் பரிந்து கொண்டு பேசியதில் அந்த அம்மாவுக்கும் அவர் மீது ஒரு பரிதாபம் ஏற்பட்டு விட்டது. உடனே, கணவனுக்குப் பரிந்துகொண்டு, ‘வீட்டுக்குன்னு பையன் ஒரு சாமான், காய்கறிகூட பார்த்து வாங்கிண்டு வர்றதில்லை. அப்படியே என்னிக்காவது ஏதாவது ஒரு வேலை சொன்னால்கூடக் காதில் போட்டுக் கொள்வதில்லை. இத்தனை வயசு ஆகியும் இவரேதான் எல்லாம் பண்ணும்படி இருக்கிறது’ என்றாள்.’’

பார்த்தீர்களா?

மகா பெரியவா சொன்ன ஒரு உபதேசத்தைச் சிரமேற்கொண்டு செய்திருக்கிறான் ஒரு பிரம்மச்சாரிப் பையன். நல்ல காரியம்தான்!
ஆனால், அந்தப் பிரம்மச்சாரிப் பையன் அப்பாவையும், அம்மாவையும் சிரமத்துக்கு உள்ளாக்கி விட்டான்.

அதனால்தான் இருவரும் நேராக பெரியவாளிடமே வந்து ஆதங்கத்துடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆதங்கத்துடன் இவர்கள் தன்னிடம் கொட்டியதைத் தான் ‘வசவு’ என்கிறார் பெரியவா.

என்ன தீர்வு சொன்னார் மகான்?

(ஆனந்தம் தொடரும்...)

சென்ற அத்தியாயத்தை வாசிக்க:

மகா பெரியவா: அருளே ஆனந்தம் - 42

x