சென்னை: பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் 52-ம்ஆண்டு திருவிழா கொடியேற்றத் துடன் நேற்று தொடங்கியது. இதையொட்டி, அன்னை வேளாங்கண்ணி ஆலயத்துக்கு நேற்று மாலை அன்னையின் திருவுருவம் தாங்கிய கொடி, பவனியாகக் கொண்டுவரப்பட்டது.
தொடர்ந்து, 5.45 மணி அளவில், சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமை தாங்கி கொடியை ஏற்றி வைத்தார். அப்போது, ஆலயத்தைச் சுற்றி கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் ‘மரியே வாழ்க’ என்று பக்தி கோஷமிட்டனர்.
இந்த விழாவில், அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் பங்குத்தந்தை இ.அருளப்பா, சாந்தோம் ஆலயத்தின் அருட்தந்தை வின்சென்ட் சின்னத்துரை, அன்னை வேளாங்கண்ணி ஆலய நிர்வாக அருட்தந்தை பிரான்சிஸ் சேவியர், உதவி அருட்தந்தைகள் சீமோன் செல்வா ஸ்டார், மைக்கேல் துரைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். கொடியேற்ற நிகழ்வு முடிந்த பின்னர், சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது.
செப்.8-ம் தேதி (ஞாயிறு) வரைநடக்கும் திருவிழாவில், ஒவ்வொரு நாளும் பல்வேறு தலைப்புகளில் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (ஆக.30) நலம் பெறும் விழா நடைபெறுகிறது. இதையொட்டி, மாலை 5.30மணிக்கு நடைபெறும் திருப்பலியில் சென்னை-மயிலை உயர் மறைமாவட்ட முன்னாள் பேராயர் ஏ.எம்.சின்னப்பா தலைமை தாங்குகிறார்.
செப்.7-ம் தேதி, சென்னை-மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் தேர்த் திருவிழா நடக்க உள்ளது. தொடர்ந்து அன்னையின் பிறப்பு பெருவிழாவும், கொடி இறக்க நிகழ்ச்சியும் நடக்கிறது.
அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் கொடியேற்ற விழாவையொட்டி, ஆயிரக்கணக் கானோர் நேற்று ஒரே நேரத்தில் பெசன்ட் நகரில் கூடினர். இதனால், அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக தேவாலயத்தைச் சுற்றிபோக்குவரத்தில் மாற்றம் செய்யப் பட்டிருந்தது.
பக்தர்கள் பாதயாத்திரை: தென் சென்னை, வட சென்னை,மத்திய சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலம் நோக்கி ஏராளமான கிறிஸ்தவர்கள் பாத யாத்திரையாக அணிவகுத்து நடந்து சென்றனர்.
குறிப்பாக மெரினா கடற்கரை வழியாக பெசன்ட் நகர் நோக்கிசெல்லும் பாதைகளில் சாலையோரம் தடுப்புகள் வைத்து பக்தர்கள் சிரமமின்றி வேளாங்கண்ணி கோயில் செல்ல சிறப்பு ஏற்பாடுகளை போக்குவரத்து போலீஸார் செய்திருந்தனர்.
அடையாறு காவல் துணை ஆணையர் பொன் கார்த்திக் குமார் தலைமையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் நேற்று பெசன்ட் நகரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
கூடுதல் பேருந்துகள் இயக்கம்: இதுதொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளப் பக்கத்தில்கூறியிருப்பதாவது: பெசன்ட் நகர்அன்னை வேளாங்கண்ணி திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் 8-ம் தேதியுடன் விழா நிறைவடைகிறது.
இதையொட்டி, மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பாக பயணிகளின் வசதிக்காக சென்னையின் பல்வேறு இடங்களிலிருந்து அன்னை வேளாங்கண்ணி திருத் தலத்துக்கு, செப்.8-ம் தேதி வரை கூடுதல் பேருந்துகள் மாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.