வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு


வேளாங்கண்ணி பேராலயத்தில் நேற்று மாலை நடைபெற்ற கொடியேற்றத்தை காணத் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள். படம்: ஆர்.வெங்கடேஷ்

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப்பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக, பேராலய முகப்பில் கொடி ஊர்வலம் தொடங்கி, ஆலயத்தைச் சுற்றிலும் குவிந்திருந்த பக்தர்களுக்கு மத்தியில் நடைபெற்றது. தொடர்ந்து, கடற்கரை சாலை, ஆரிய நாட்டுத் தெரு வழியாகச் சென்ற ஊர்வலம், மீண்டும் பேராலயத்தை அடைந்தது. தஞ்சை மறை மாவட்ட ஆயர்சகாயராஜ் கொடியை புனிதம் செய்துவைக்க, கொடியேற்றம் நடைபெற்றது.

இதில், தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ‘ஆவே மரியா’ என்றும், ‘மாதாவே’ என்றும் பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டபடி, சில்லறைக் காசுகளை கொடிக் கம்பத்தை நோக்கி வீசினர். தொடர்ந்து, வாணவேடிக்கை நடைபெற்றது.

பின்னர், பேராலய கலையரங்கில் மாதா மன்றாட்டு ஆராதனை, நற்கருணை ஆசிர்வாதம், திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதை முன்னிட்டு பேராலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

விழாவில், பேராலய அதிபர் இருதயராஜ் அடிகளார், பங்குத் தந்தை அற்புதராஜ் அடிகளார் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். பேராலயம், பேருந்துநிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

வரும் செப். 7-ம் தேதி வரையிலான நவ நாட்களில், பேராலயம்,விண்மீன் ஆலயம், மேல் கோயில் மற்றும்கீழ் கோயில் ஆகிய இடங்களில் தமிழ், தெலுங்கு, கொங்கனி, மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் திருப்பலி நடைபெற உள்ளது. அதேபோல, செப். 6-ம் தேதி சிலுவைப்பாதை நிகழ்ச்சிநடைபெற உள்ளது. முக்கியநிகழ்வான பெரிய தேர் பவனி செப். 7-ம் தேதி மாலை நடைபெறும். செப். 8-ம் தேதி மாலை கொடி இறக்கப்பட்டு, விழா நிறைவடையும்.

x