சிவபெருமான் தனது இடது பாகத்தை அம்பாளுக்கு அளித்து, சிவமும், சக்தியும் ஒன்றே என்ற தத்துவத்தை நிலைநாட்டும் விதமாக உமையொரு பாகனாக, அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்த திருக்கோலத்தை தமிழகத்தில் இரண்டு இடங்களில் மட்டுமே தரிசிக்க முடியும்.
அவற்றில் ஒன்று நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், மற்றொன்று தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் உள்ள சிந்தாமணி நாதர் எனப்படும் அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்.
இவற்றில் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் சைவ சமயக்குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றது. கொங்கு ஏழு திருத்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.
நகருக்கு மத்தியில் குன்று
நாமக்கல்லில் இருந்து ஈரோடு செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மிகப்பெரிய நகரம் திருச்செங்கோடு. இந்நகரின் மையப்பகுதியில் மிக உயர்ந்த குன்று வானுயர வீற்றிருக்கிறது. இதன் உச்சியில் அர்த்தநாரீஸ்வரர் கோயில் கொண்டுள்ளார். செந்நிறமான இந்த மலைக்கு சோணகிரி, இரத்தினகிரி, சேடன்மலை, வாயுமலை, மேரு மலை என்று பெயர்கள் உண்டு. இந்த மலையில் 15 கி.மீ. சுற்றளவில் எங்கிருந்து பார்த்தாலும் இதனை எளிதாகக் காண முடியும்.
மலையின் அடிவாரத்தில் இருந்து தேவஸ்தானம் சார்பில் மினி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுமார் 3 கி.மீ. தூரத்துக்கு மலைச்சாலையில் பேருந்தில் பயணித்து மேலே உள்ள கோயிலை அடையலாம். கோயிலுக்கு சுமார் 1,200 படிகள் வழியாகவும் ஏறிச்செல்ல முடியும்.
சுயம்புத் திருமேனி
மலையின் மீது சுயம்பு மூர்த்தியாக அர்த்தநாரீஸ்வரர் கோயில் கொண்டுள்ளார். இவரது திருமேனி மரத்தினால் ஆனதாகும். மூலவருடனேயே சேர்ந்திருக்கும் அம்பாளுக்கு பாகம்பிரியாள் என்பது பெயர். மூலவர் திருமேனி சுமார் 6 அடி உயரம் உள்ள உளி படாத சுயம்புத் திருமேனியாகும். பாதி ஆணாகவும், பாதி பெண்ணாகவும் மேற்கு நோக்கி அர்த்தநாரீஸ்வரர் காட்சி அளிக்கிறார். தலையில் ஜடாமகுடம் தரித்து, பூரணச்சந்திரனைச் சூடி, கழுத்தில் ருத்ராட்சமும், திருமாங்கல்யமும் அணிந்து இருக்கிறார். சிவனுக்கான பாகத்தில் வலது கையில் சுமார் 7 அடி உயர தண்டாயுதம் வைத்திருக்கிறார். அம்பிகையின் அம்சமாக உள்ள இடது பாக காலில் கொலுசு உள்ளது.
சிவன், சக்தி சேர்ந்த வடிவம் என்பதால் வலதுபுறம் வேட்டியும், இடப்புறம் சேலையும் தரித்திருக்கிறார்.
அதிசய தீர்த்தம்
மூலவரின் காலடியில் இருந்து சுரந்து கொண்டே இருக்கும் தேவதீர்த்தம் நீரை பக்தர்களுக்கு தீர்த்தமாக வழங்குகின்றனர். அவ்வளவு உயரமான மலையின் மீதிருந்து வெளியேறும் இந்த தீர்த்தம் எந்தக் கோடையிலும் வற்றுவதே இல்லை.
வைகாசி விசாகத்தன்று இவருக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கும். அப்போது அர்த்தநாரீஸ்வரராக சிவனும், சக்தியும் சேர்ந்துள்ள ரூபத்துக்குத்தான் மாங்கல்யம் அணிவிக்கப்படுகிறது.
தேவாரம், திருவாசகம், பெரியபுராணம், கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம், திருப்புகழ் என பல்வேறு நூல்களில் அர்த்தநாரீஸ்வரர் குறித்த பதிகங்கள் இடம்பெற்றுள்ளன.
நாக தோஷ நிவர்த்தி தலம்
மலைக் கோயிலில் ஆதிகேசவ பெருமாள், செங்கோட்டு வேலர் (முருகப்பெருமான்) ஆகிய இரு சன்னதிகள் தனியாக அமைந்துள்ளன. அடுத்துள்ள நடராஜர் சன்னதிக்கு அருகே தலவிருட்சமான இலுப்பை மரம் உள்ளது. மலைக்கோயிலுக்கு வடபுறம் உள்ள சிகரத்தில் சுமார் 60 அடி நீளத்திற்கு ஆதிசேடனின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அதில் மஞ்சளும், குங்குமமும் கலந்து அலங்காரம் செய்துள்ளனர்.
நாக தோஷ நிவர்த்திக்காகவும், தம்பதியர் ஒற்றுமைக்காகவும் பக்தர்கள் இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர்.
வைகாசி 14 நாள் திருவிழா
வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று நடைபெறும் திருக்கல்யாணத்தை முன்னிட்டு, இக்கோயிலில் 14 நாள் திருவிழா நடைபெறுகிறது. அப்போது மலைக்கோயிலில் இருந்து உற்சவரைக் அடிவாரக் கோயிலுக்கு கொண்டு வருவர். அங்கிருந்தபடியே பல்வேறு வாகனங்களில் சுவாமி வலம் வருவார். தேரோட்டம் மூன்று நாட்கள் நடைபெறும்.
காலை முதல் இரவு வரை இக்கோயில் திறந்தே இருக்கும். மதியம் நடை சாத்துவதில்லை. மலைக்கோயிலின் மேலேயே தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. முடிகாணிக்கை, காது குத்துதல் போன்ற பல்வேறு சடங்குகளை மலைக்கோயிலில் பக்தர்கள் நிறைவேற்றுகின்றனர்.