சமயக் குரவர்களால் பாடல் பெற்ற கொங்கு நாட்டின் சிவத்தலங்கள்


பவானி கூடுதுறையில் சுவாமி சங்கமேஸ்வரர் கோயில்

கொங்கு நாடு என்பது இன்றைய கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைக் குறிக்கும். ஒவ்வொரு மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் இதன் எல்லைகள் விரிந்து சுருங்கின. சேரர்களும், சோழர்களும் தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக கொங்கு நாட்டை ஆட்சி செய்ததும் உண்டு. கொங்கு நாடு தன்னாட்சியுடன் விளங்கியதும் உண்டு.

சுவாமி சங்கமேஸ்வரர் கோயில்

கொங்கு நாட்டில் ஏராளமான சிவத்தலங்கள் புகழ்பெற்று விளங்குகின்றன. இவற்றில் சமயக் குரவர்களால் பாடல்பெற்ற கொங்கு ஏழு சிவத்தலங்கள் சிறப்பு வாய்ந்தவை. அவை விவரம்:

1. திருநணா (பவானி),

2. திருச்செங்கோடு,

3. கருவூர் (கரூர்),

4. திருமுருகன் பூண்டி,

5. திருப்பாண்டிக் கொடுமுடி,

6. திருப்புக்கொளியூர் (அவிநாசி),

7. வெஞ்சமாக்கூடல்.

இவை ஏழு தலங்களும் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் அமைந்துள்ளன. இவற்றின் சிறப்புக்களை அடுத்தடுத்து ஒவ்வொரு நாளும் காண்போம்.

காவிரியும், பவானியும், அமிர்த நதியும் சங்கமிக்கும் பவானி கூடுதுறை (தென் திரிவேணி)

1. திருநணா (பவானி)

குடகுமலையில் உற்பத்தியாகி சிவசமுத்திரம் (ஒகேனக்கல்) நீர்வீழ்ச்சியைத் தாண்டியதும் அன்னை காவிரி தமிழகத்துக்குள் கால் பதிக்கிறாள். அங்கிருந்து மேட்டூர் அணையில் தேங்கியிருந்து, மீண்டும் அவளது பயணம் ஈரோடு மாவட்டத்துக்குள் தொடங்குகிறது.

அதுபோல், நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் அன்னை பவானி நதியும் மலையைவிட்டு இறங்கியதும் ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர் நீர்த்தேக்கத்தில் கால் பதிக்கிறாள். அங்கிருந்து சத்தியமங்கலம் வழியாக பவானியை அடைகிறாள். அங்கு அன்னை காவிரியுடன், பவானி நதி சங்கமிக்கிறாள். அத்துடன் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதியும் அங்கு சங்கமிக்கிறாள்.

காவிரியும், பவானியும், அமிர்த நதியும் சங்கமிக்கும் இடத்துக்கு பவானி என்றே பெயர். கங்கையும், யமுனையும், சரஸ்வதியும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமமாகிய வடகாசிக்கு ஒப்பாக, இங்கும் மூன்று நதிகள் சங்கமிப்பதால் பவானிக்கு தென் திரிவேணி என்று பெயர் ஏற்பட்டது.

மிகப்பெரிய நகராட்சியான பவானியில், மூன்று நதிகள் சங்கமிக்கும் கூடுதுறையில் சுவாமி சங்கமேஸ்வரர் கோயில் கொண்டிருக்கிறார். இவர் சுயம்பு லிங்கமாக உருவெடுத்தவர். சன்னதியில் எங்கிருந்து பார்த்தாலும் தரிசிக்கும் அளவுக்கு பெரிய திருமேனியைக் கொண்டவர்.

சங்கமேஸ்வரர் சன்னதி (இடது புறம்) வேதநாயகி அம்பாள் சன்னதி (வலது புறம்)

அம்பாள் பெயர் வேதநாயகி. அம்பாள் சன்னதிக்கும், சுவாமி சன்னதிக்கும் நடுவே சுப்பிரமணியர் சன்னதி அமைந்துள்ளது. இவர் அருணகிரி நாதரால் பாடல்பெற்றவர் என்பது சிறப்பு.

மிகப்பெரிய வளாகத்தில் கோயில் அமைந்துள்ளது. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலம் இது. பவானி கூடுதுறை சங்கமேஸ்வர குறித்து சுவாமி திருஞான சம்பந்தர் பாடிய 11 பாடல்களும் இரண்டாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளன.

கோயிலின் தென்மேற்கு பகுதியில் தலவிருட்சமான இலந்தை மரம் அமைந்துள்ளது. இதன் அடியில் தான் குபேரனுக்கு சுவாமி காட்சி தந்ததாக தலபுராணம் கூறுகிறது.

ஆதிகேசவ பெருமாள் சன்னதி

ஆதிகேசவ பெருமாள்

சங்கமேஸ்வரர் கோயில் கிழக்கு நோக்கி அமைந்திருந்தாலும், இக்கோயிலின் ராஜகோபுரம் வடக்கு பார்த்து அமைந்துள்ளது. ராஜகோபுரத்துக்குள் நுழைந்ததுமே ஆதிகேசவ பெருமாளையும், செளந்தரவல்லித் தாயாரையும் தான் முதலில் தரிசிக்க முடியும். தேவியருடன் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, சுவாமி நம்மாழ்வார், பகவத் ராமானுஜர் ஆகியோருக்கும் சன்னதிகள் இங்கு அமைந்துள்ளன.

நோய் தீர்த்த சுரகரேஸ்வரர்

திருஞான சம்பந்தர் பவானிக்கு வந்தபோது அவரது சீடர்களுக்கு உடல் உபாதை ஏற்பட்டது. உடனே இங்குள்ள சுரகரேஸ்வரர் சன்னதியில் மிளகை அரைத்து பூசி வழிபட அவர்களின் உடல் உபாதை நீங்கீயது. இந்த சுரகரேஸ்வரரை இப்போதும் இங்கு தரிசிக்கலாம். இவருக்கு அருகிலுள்ள சனீஸ்வர பகவான் சன்னதியும் பிரசித்தி பெற்றது.

தந்தத்தால் ஆன கட்டில்

18-ம் நூற்றாண்டில் ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தின் பிரிட்டிஷ் ஆட்சியராக இருந்தவர் வில்லியம் கேரோ. பவானியில் உள்ள மாளிகையில் அவர் தங்கியிருந்த போது ஏற்பட்ட ஆபத்தில் இருந்து காத்தவள் இத்தலத்தின் அம்பிகையான வேதநாயகி. அதற்கு நன்றிக்கடனாக யானைத் தந்தத்தினால் ஆன கட்டிலை வில்லியம் கேரோ காணிக்கையாக அளித்தார். வேதநாயகி அம்பாள் சன்னதியில் உள்ள திருப்பள்ளியறையில் அவரது கையொப்பமுடன் கூடிய அந்தக் கட்டிலை இப்போதும் காணலாம். அதுபோல், சன்னதிக்குள் அவர் வர முடியாததால் அம்பாளை தரிசிப்பதற்காக அம்பாள் சன்னதியின் நேர் எதிரேயுள்ள மதில் சுவரில் மூன்று துவாரங்கள் இடப்பட்டன. அங்கிருந்து அவர் அம்பாளை தரிசித்தார். இந்த மூன்று துவாரங்களையும் இப்போது காணலாம்.

மகப்பேறு வரம் தருபவர்

கோவிலின் மூலவர் சன்னதிக்கு பின்புறம் அமிர்தலிங்கேஸ்வரர் சன்னதி அமைந்துள்ளது. குழந்தைப் பேறு வேண்டும் தம்பதிகள் இவருக்கு வேண்டிய வழிபாடுகள் செய்ததும், லிங்கத்தின் பாணப் பகுதியை எடுத்து தருகின்றனர். அதனை இடுப்பில் வைத்துக் கொண்டு ஆவுடையாரை வலம் வர குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. இவ்வாறு தம்பதிகள் பலர் வலம் வருவதை நாம் காணலாம்.

பித்ரு கடன் செலுத்த குவிந்த மக்கள்

பித்ரு கடன் செலுத்தும் மக்கள்

பித்ரு கடன்

மூன்று நதிகளும் சங்கமிக்கும் கூடுதுறையில் பித்ரு கடன் செலுத்துவது சிறப்பாக கருதப்படுகிறது. அமாவாசை, பவுர்ணமி நாட்கள் மட்டுமின்றி தினமுமே இங்கு ஆயிரக்கணக்கானோர் இங்கு பித்ரு கடன் செலுத்துவதற்காக குவிகின்றனர். அதிலும், ஆடி, தை மற்றும் புரட்டாசி மஹாளய அமாவாசை நாட்களில் லட்சக்கணக்கானோர் பவானியில் குவிந்து விடுவார்கள். கோயிலின் கிழக்கு பகுதியில் இதற்காக மண்டபங்களும், மிகப்பெரிய படித்துறைகளும் காவிரிக்கரையில் முற்காலத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளன. ஆயினும் முறையான வேதம் தெரிந்தவர்களைத் தேர்ந்தெடுத்து பரிகார பூஜைகளைச் செய்வது அவரவர் பொறுப்பு.

x