பக்தைக்காக திருத்தலையை சாய்த்த திருப்பனந்தாள் அருணஜடேஸ்வரர்


தாடகை மாலை அணிவிக்க தலை சாய்த்து ஏற்றுக்கொண்ட சிவலிங்கம் (தலவரலாறு சொல்லும் ஓவியம்)

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் தாலுகாவில் அமைந்துள்ள பாடல்பெற்ற சிவத்தலம் திருப்பனந்தாள்.

இங்கு சுயம்புவாக எழுந்தருளி இருக்கும் அருணஜடேஸ்வரர் கோயில் கொண்டுள்ளார். இவருக்கு செஞ்சடையப்பர், தாலவனேஸ்வரர், ஜடாதரர் என்ற பெயர்களும் உண்டு. அம்பாளுக்கு பெரிய நாயகிக்கு பிருகந்நாயகி, தாலவனேஸ்வரி எனவும் பெயர்கள் உண்டு.

திருப்பனந்தாள் அருணஜடேஸ்வரர் கோயில்

திருப்பனந்தாள் அருணஜடேஸ்வரர் கோயில் தலமரம் பனை

பனை மரமே இங்கு தலமரமாகும். பனந்தாளில் அடியில், பனையோலை ஓசையைக் கேட்டபடி இறைவன் இங்கு வீற்றிருக்கிறார். இதனாலேயே இந்த ஊருக்கு திரு+பனை+தாள் = திருப்பனந்தாள் என பெயராயிற்று. கோயில் பிரகாரத்தில் இரண்டு ஆண் பனை மரங்கள் உள்ளன. “தண்பொழில் சூழ் பனந்தாள்” என்று ஞானசம்பந்தர் பாடியிருக்கிறார். இதன்மூலம் இந்த ஊர் முழுக்கவே முற்காலத்தில் பனைமரங்களால் சூழப்பட்டிருந்தது தெரியவருகிறது.

இப்பகுதியில் வாழ்ந்த தாடகை என்ற பெண்மணி புத்திரப்பேறு வேண்டி இத்தலத்து இறைவனுக்கு தினமும் மாலை அணிவித்து வழிபட்டு வந்தாள். ஒருமுறை இருகைகளாலும் மாலை சாற்றும்போது ஆடை நெகிழ்ந்தது. நெகிழ்ந்த ஆடையைத் தன் இரு முழங்கைகளாலும் பற்றிக் கொண்டாள். இதனால், கைகளை நீட்டி மாலையை சாற்ற முடியாமல் தவித்தாள்.

தனது பக்தையின் தவிப்பை உணர்ந்து, இறைவன் தனது திருமுடியை அவள் பக்கமாக சற்று சாய்த்துக் கொள்ள, அவளும் எளிதாக மாலை அணிவித்தாள் என்பது இத்தலப்புராணம். இவ்வாறு சாய்ந்து இருந்த மூலவரின் திருமுடியை பிற்காலத்தில் குங்கிலிய நாயனார் நிமிர்த்தி மாற்றி அமைத்ததாகவும் கூறப்படுகிறது.

மன்னன் சிவலிங்கத்தை நேராக நிமிர்த்த முயன்ற காட்சி...

குங்கிலிய நாயனார் சிவலிங்கத்தை நேராக நிறுவும் காட்சி சிற்பமாக...

இவ்விரு வைபவங்களையும் விளக்கும் வகையில் இக்கோயிலில் 16 கால் மண்டபத்தில் இரு சிற்பங்கள் உள்ளன. தாடகை எனப்படும் இந்த பக்தை ராமாயணத்தில் வரும் தாடகை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. தாடகை வணங்கியதால் தாடகையீச்சுவரம் என்றும் இத்தலத்துக்கு பெயர் உண்டு.

திருப்பனந்தாளின் தலவிருட்சமான பனைமரத்துக்கு அருகில் உள்ள கிணற்றுக்கு நாககன்னிகை பிலம் எனப் பெயர். பிலம் என்றால் நாகலோகத்துக்கு செல்லும் குகைப்பாதை என்று அர்த்தம். இந்த வழியாக நாக கன்னியர் பூலோகத்துக்கு வந்து, அருணஜடேஸ்வரரை தரிசித்து விட்டு, மீண்டும் தங்கள் இருப்பிடம் திரும்புவார்களாம்.

திருப்பனந்தாள் அருணஜடேஸ்வரர் கோயில் சந்நிதி...

சம்பந்தர், அப்பர், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார் ஆகியோர் இத்தலத்து இறைவனைப் பாடியுள்ளனர். தருமை ஆதின தேவஸ்தானத்துக்குரிய 27 கோயில்களில் இதுவும் ஒன்று. புகழ்பெற்ற திருப்பனந்தாள் காசிமடம் இக்கோயிலுக்கு அருகிலேயே அமைந்திருக்கிறது. சித்திரை மாதம் நடைபெறும் 10 நாள் திருவிழா புகழ்பெற்றது. இக்கோயிலில் 7.7.2023 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருப்பனந்தாள் அருணஜடேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

x