மகா பெரியவா: அருளே ஆனந்தம் - 41


மகா பெரியவா

மவுனம் ஒரு உலக மொழி!

ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மொழி பேசப்படுகிறது. ஒரு இடத்தில் பேசப்படுகின்ற மொழி இன்னொரு இடத்தில் வசிக்கின்றவர்களுக்குப் பெரும்பாலும் புரியாது.

ஆனால், ‘மவுனம்’ என்பது இந்த உலகம் முழுமைக்குமான பொது மொழி. சத்தம் என்பதே இல்லாத மொழி.

மவுனம் பல வகைப்படும்.

முக்கியமாக, மூன்று வகை.

முதலாவது ... சாதா மவுனம். எதுவும் பேசாமல் அமைதி காப்பது மவுனத்தில் முதல் வகை. நாவசைவு இருக்காது. பேசக் கூடாத இடத்திலும், பேசுவதற்குத் தேவை இல்லாத இடத்திலும் மவுனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இப்படி இருந்தால், பேசாதவர் காப்பாற்றப்பட்டு விடுவார். பேசுவதற்கு நாக்கு அசைய வேண்டும். நாக்கு அசையாமல் இருந்தால் அதுவே சாதா மவுனம்.

விரதம் இருப்பவர்கள் வீட்டில் ‘மவுனம் கடைப்பிடிக்கிறேன்’ என்று சொல்கிறார்கள் அல்லவா? அதுவே இந்த மவுனம்.
இந்த மவுனத்தில் நாக்கு எக்காரணம் கொண்டு அசையக் கூடாது. அதே வேளையில் தலையசைத்து உத்தரவு பிறப்பிக்கலாம். விரலசைவின் மூலம் பிறருக்குப் புரிய வைக்கலாம். கண்ணசைவின் மூலம் காரியத்தை சாதிக்கலாம்.

இரண்டாவது ... பூரண மவுனம். இதற்கு வாய் மட்டுமல்ல. மனமும் ஓய்வெடுக்க வேண்டும். சிந்தனைகள் அலைபாய்ந்து கொண்டிருக்கக் கூடாது. பூரண மவுனம் என்பது ஒரு வகை தியானம் தான். யோகா மற்றும் தியானம் பயில்பவர்களுக்கு குருமார்கள் இதைக் கற்றுக் கொடுப்பார்கள்.

மூன்றாவது... பரிபூரண மவுனம்.

இதுதான் காஷ்ட மவுனம்.

சென்ற அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்ட மகா பெரியவா மேற்கொண்டிருந்த மவுனம் இதுதான்.

நாக்கு மட்டுமல்ல. உடலின் எந்த ஒரு பகுதியும் அசையக் கூடாது. உடல், கைகள், கண்கள் உட்பட எதையும் அசைத்து எந்த ஒரு சைகையும் செய்யக் கூடாது. உடல் ஒரு மரக் கட்டை போல் இருக்க வேண்டும். இதுதான் காஷ்ட மவுனம். ரொம்பவும் சிரமமானது. மனிதர்களுக்கு அத்தனை சுலபத்தில் இது வசப்படாது. புலன்கள் அனைத்தும் அடங்கி ஒடுங்கினால் மட்டுமே இந்த மவுனம் சாத்தியம்.

மகா பெரியவா மவுனம் இருந்த நாட்கள் அதிகம்.

பெரிய பெரிய அரசியல் தலைவர்கள் தன்னை தரிசிக்க வந்தபோதும் தான் கொண்டிருந்த மவுனத்தை அவர்களுக்காக விலக்கிக் கொள்ளவில்லை!

மவுனத்தினால் வாக்கில் ஒரு தெளிவும், புத்தியில் ஒரு சாத்விகமும் ஏற்படும். மகான்களின் தீர்க்கமான முடிவுகளுக்கும், அவர்கள் வழங்குகிற வாக்குக்கும் மவுனம் ஒரு காரணம். மனித உள்ளத்தைப் பண்படுத்தக் கூடியது மவுனம்.

‘பேச்சு என்பது சில்வர் என்றால், மவுனம் என்பது தங்கம்’ என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.
பிரதோஷம் மாமாவிடம் வருவோம்.

தனக்கு அலுவலகத்தில் விடுப்பு கிடைக்காத காரணத்தால், கடந்த பிரதோஷத்தின்போது பெரியவாளை நேரில் தரிசிக்க முடியவில்லை என்று அங்கு இருந்தோரிடம் பிரதோஷம் மாமா ரொம்பவே குறைப்பட்டுக் கொண்டார் அல்லவா?
இவற்றை எல்லாம் கேட்கக் கூடிய இடத்தில்தான் மகா பெரியவா இருந்தார். ஆனால், அன்றைக்கு காஷ்ட மவுனம்.
பிரதோஷம் மாமாவின் ஆதங்கமும், அந்த வேளையில் மகான் இருந்த காஷ்ட மவுனத்தின் சக்தியும் அடுத்த பிரதோஷத்துக்குள் வெளிப்பட்டு விட்டது.

எப்படி வெளிப்பட்டது?

பிரதோஷம் மாமாவுக்கு விடுப்பு கொடுக்க மறுத்து, தன்னுடன் ‘இன்ஸ்பெக்ஷனு’க்கு அழைத்துச் சென்றார் அல்லவா ஒரு மேலதிகாரி... அவருக்கு இடமாற்றம் கிடைத்து விட்டது! கறாரான அந்த மேலதிகாரியால் இனி பிரதோஷம் மாமாவுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லை.

இந்த வேளையில் உங்களுக்கு ஒன்று தோன்றலாம்.

‘என்ன இது... தன்னோட பக்தன் ஒவ்வொரு பிரதோஷத்தின்போதும் தடை இல்லாமல் தன்னை தரிசிக்க வர வேண்டும் என்பதற்காக ஒரு நல்ல அதிகாரியை பெரியவா இடம் மாற்றி விட்டாரா?’ என்று!

வாஸ்தவம்தானே! இதைப் படிக்கின்ற நமக்கு அப்படித்தானே தோன்றுகிறது. பெரியவாளுடைய பக்தனாக இருந்தால் வேண்டாத ‘ஆபீஸர்’களை தன் தவ வலிமையால் அந்த மகானே இடமாற்றம் செய்து விடுவார் என்று எல்லோரும் பேசத் துவங்கி விடுவார்கள்தானே!

ஆனால், ஒரு மகானுக்குத் தன் பக்தன் மட்டும் முக்கியமல்ல. எல்லோருமே முக்கியம். பக்தனுக்கு அனுக்ரஹத்தை எவ்வளவு வேண்டுமானாலும் வழங்கலாம். ஆனால், பக்தன் அல்லாதவனுக்கு அனுக்ரஹம் வழங்க மாட்டார் என்று அர்த்தமல்ல.
பிரதோஷம் மாமாவின் இந்தச் சம்பவத்தை ஆழ்ந்து கவனித்தால், அதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

ஆம்! பிரதோஷம் மாமாவுக்கு விடுப்பு தராத அந்த உத்தமமான மேலதிகாரிக்கு எங்கே இடமாற்றம் கிடைத்தது, தெரியுமா? பல மாதங்களாக அவர் ‘டிரான்ஸ்ஃபர்’ கேட்டுப் போராடிக் கொண்டிருந்த திருவனந்தபுரத்துக்கு!

காரணம்... அதுதான் அவரது சொந்த ஊர்!

மகா பெரியவா

‘திருவனந்தபுரத்துக்கு எனக்கு ‘டிரான்ஸ்ஃபர்’ வேண்டும்’ என்று எத்தனையோ முறை தான் சார்ந்திருக்கிற ரயில்வே உயர் அதிகாரிகளிடம் சொல்லிப் பார்த்திருக்கிறார். மன்றாடிப் பார்த்திருக்கிறார். எல்லோரும் ‘ஆகட்டும்... ஆகட்டும்’ என்று தற்காலிகமாகப் பதில் சொன்னார்களே தவிர, எவருமே அதற்கு உண்டான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. எனவே, பிரதோஷம் மாமாவின் மேலதிகாரி எதிர்பார்த்த ‘டிரான்ஸ்ஃபர்’ கிடைக்கவில்லை.

பெரியவா மேல் பிரதோஷம் மாமா கொண்டிருக்கிற பக்தியால் மாமாவுக்கு மட்டுமல்ல... அவரது மேலதிகாரிக்கும் உரிய பலன் கிடைத்துவிட்டது!

தன் பக்தனுக்குத் தடை ஏற்படுத்தியவருக்கும் மகா பெரியவாளால் மட்டுமே நல்லது செய்ய முடியும்.

மகா பெரியவா மேற்கொண்டிருந்த காஷ்ட மவுனம், அவரது அத்யந்த பக்தனான பிரதோஷம் மாமாவுக்கும் பலன் கொடுத்தது. விடுப்பு தராமல் இருந்த மேலதிகாரிக்கும் பலன் கொடுத்தது!

மவுனம் எல்லோருக்கும் எல்லா காலத்திலும் அளவற்ற பலன்களை வழங்க வல்லது. ஆனால், பலராலும் அதை மேற்கொள்ள முடியவில்லை.

‘மவுனம் சர்வார்த்த சாதகம்’ என்ற சம்ஸ்கிருத சொலவடை உண்டு. அதாவது, மவுனத்தால் எல்லாவற்றையும் சாதிக்கலாம் என்பது பொருள்.

ரமண மகரிஷியிடம் எண்ணற்ற கேள்விகளைக் கேட்பதற்காக பிரபல ஆங்கில எழுத்தாளர் சாமர்செட் மாம் ஒரு முறை திருவண்ணாமலைக்கு வந்திருந்தார். மகரிஷியிடம் கேள்விகள் கேட்பதற்காக அவருக்கு முன்னால் பவ்யமாக அமர்ந்தார் எழுத்தாளர். அடுத்த கணம் பகவானிடம் என்னென்ன கேள்விகள் கேட்க வேண்டுமோ, அவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக மனதில் எழும்பிக் கொண்டே இருந்தன.

இது ஆச்சரியம் அல்ல. அதைத் தொடர்ந்து நடந்ததுதான் ஆச்சரியம்.

இவர் மனதில் கேள்வி தோன்றிய மறுகணம், அதற்கு உண்டான பதிலும் தடை இல்லாமல் வந்து கொண்டே இருந்தது. இப்படி அடுக்கடுக்கான கேள்விகள். அதற்கு உண்டான பதில்கள். இரண்டும் ஒன்றன் பின் ஒன்றாக தங்குதடை இல்லாமல் வந்து கொண்டிருந்தது எழுத்தாளருக்கு!

சாமர்செட் மாம் ஒரு கேள்விகூட வாயைத் திறந்து கேட்கவில்லை. அவருக்கு வேண்டிய பதில்களை பகவான் ரமணரும் வாயைத் திறந்து சொல்லவில்லை.

சில மணிப் பொழுதுகள் கழித்து எழுத்தாளர் எழுந்து, அங்கிருந்து விடைபெற்றார்.

அப்போது ஆசிரமத்தில் இருந்த ஒருவர், ‘‘நிறைய கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று இங்கே வந்தீர்கள். தாங்கள் ஒரு கேள்விகூடக் கேட்கவில்லை. பகவானும் தன் திருவாய் மலர்ந்து எந்த ஒரு பதிலும் சொல்லவில்லை... புறப்பட்டு விட்டீர்களே?’’ என்று கேட்டார்.

ஆங்கில எழுத்தாளர் புன்னகை புரிந்துவிட்டு, ‘‘பெரிய பேட்டியே முடிந்து விட்டது. நான் திருப்தியுடன் இங்கிருந்து செல்கிறேன்’’ என்று நகர்ந்தாராம்!

இதற்கு என்ன அர்த்தம் என்றால், பகவான் ரமணருக்கு முன்னால் அமர்ந்த மாத்திரத்தில் எழுத்தாளரால் எந்த ஒரு கேள்வியையும் வாயைத் திறந்து கேட்க முடியவில்லை. இருவரது மனமும் பேசிக் கொண்டன. உதடுகள் அசையவில்லை.

ரமண மகரிஷிக்கு முன்னால் ஒருவர் அமர்ந்தால், மகானிடம் பேசுவதற்கு வார்த்தைகள் வராது. ஒளி பெருகும் அவரது விழிகளைப் பார்த்த பின்னர், பேச்சு வராது. தன் மவுனத்தாலேயே பலருக்கும் உபதேசம் செய்திருக்கிறார் ரமணர்!

‘‘பகவானே... தாங்கள் பெரும்பாலான நேரங்களில் மவுனமாக, எதுவும் பேசாமல் இருக்கின்றீர்களே?’’ என்று சிலர் கேட்டபோது, புன்னகைத்தவர், ‘‘நான் மவுன நிலையில் இருக்கிறேன் என்று யார் சொன்னது? பேசிக் கொண்டுதான் இருக்கிறேன்’’ என்பாராம்.
இதுதான் மவுன மொழி.

திருவண்ணாமலைக்கு வந்த காஞ்சி மகா பெரியவாளும் ரமண மகரிஷியும் ஒருவரை ஒருவர் நேரில் பார்க்காமலேயே இருவரும் பேசிக் கொண்டார்களாம்!

மகான்கள் நமக்கு அருளிச் சென்ற வாக்குகளுள் முக்கியமானது…

‘உங்கள் பேச்சு மவுனத்தைவிட அழகாக இருக்குமானால் மட்டும் பேசுங்கள்.’

(ஆனந்தம் தொடரும்...)

சென்ற அத்தியாயத்தை வாசிக்க:

மகா பெரியவா: அருளே ஆனந்தம் - 40

x