மகாலட்சுமி தாயார் தவமிருந்த திருத்தங்கல்


திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் (மூலவர்)

எம்பெருமான் ஸ்ரீ மந் நாராயணனை நோக்கி, தங்காலமலை என்ற திருத்தலத்தில் ஸ்ரீ மகாலட்சுமி தாயார் தவமியற்றினார். தாயாரின் கடுந்தவத்தை மெச்சியும், பிரிவாற்றாமையைத் தீர்க்கும் வகையிலும், பெருமாள் காட்சியளித்தார். திருமகள் தங்கி தவமியற்றியதால் திருத்தங்கல் என்ற பெயர் இத்தலத்துக்கு பெயர் ஏற்பட்டது.

திருத்தங்கல் நின்ற நாராயணனப் பெருமாள் கோயில்

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசியில் இருந்து 15 கி.மீ. தொலைவில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. பாண்டிய நாட்டு திவ்யதேசங்களில் இதுவும் ஒன்று.

ஸ்ரீ மந் நாராயணன் பிரளய காலத்தில் ஈரேழு உலகங்களையும் தன்னுள் அடக்கி, ஆல் இலையில் யோகத்துயில் கொள்வார். அந்த ஆல் இலையும், இந்த திருத்தலமும் ஒன்றுதான் என்று நம்பப்படுகிறது.

இதனாலேயே, எம்பெருமான் தங்கும் + ஆல் + இலை = தங்காலமலை என்ற பெயர் இத்திருத்தலத்துக்கு பெயர் ஏற்பட்டது.

மூலவர் நின்ற நாராயணப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில், கிழக்க்கு நோக்கி சேவை சாதிக்கிறார். திருத்தண்கால் அப்பன் என்பது உற்சவர் திருப்பெயர்.

மூலவருடன் அன்னநாயகி (ஸ்ரீதேவி), அனந்தநாயகி (நீளாதேவி), அம்ருதநாயகி (பூமாதேவி), ஜாம்பவி தேவி என்ற நான்கு தாயார்கள் நின்ற திருக்கோலமாக சேவை சாதிக்கின்றனர். செங்கமலத்தாயார் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார்.

அன்னநாயகி (ஸ்ரீதேவி), அனந்தநாயகி (நீளாதேவி), அம்ருதநாயகி (பூமாதேவி), ஜாம்பவி தேவி என்ற நான்கு தாயார்களுடன் நின்ற நாராயணப் பெருமாள்

கோவிலின் முகப்பு

கருவறை விமானம்

பூதத்தாழ்வார் ஒரு பாசுரத்தாலும், திருமங்கையாழ்வார் நான்கு பாசுரங்களாலும் இப்பெருமானை மங்களாசாசனம் செய்துள்ளனர்.

திருத்தங்கல் நகரம் பாண்டிய மன்னர்களுடனும், நாயக்க மன்னர்களுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டது. இவர்கள் குறித்த கல்வெட்டுக்களும், செப்பேடுகளும் இங்கு கிடைத்துள்ளன. சிலப்பதிகாரம் காப்பியத்தில் வரும் ‘வார்த்திகன் கதை’ என்ற சம்பவம் திருத்தங்கலில் நடைபெற்றதாகும். இளங்கோவடிகளும் இத்தலத்தை தமது காப்பியத்தில் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

திருத்தங்கலில் ஆனி மாதம் பிரம்மோற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இவ்விழாவின் ஐந்தாம் நாள் இரண்டு கருட சேவை நடைபெறுகிறது. அப்போது செங்கமலத் தாயார் அன்ன வாகனத்தில் எழுந்தருள்வார். ஒன்பதாம் நாள் விழாவில் தேரோட்டம் நடைபெறுகிறது.

திருத்தேரோட்டம்: 5.7.2023.

திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோவில் தேரோட்டம்

x