திருப்பாதிரிபுலியூர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் ஆனி மாதம் பிரம்மோற்சவம்!


திருப்பாதிரிபுலியூர் ஸ்ரீ வரதராஜ பெருமாள்

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூரில் கெடிலம் நதிக்கரையில் ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேதராக ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் கொண்டுள்ளார். 108 திவ்யதேசங்களில் இத்தலம் இடம்பெறாவிட்டாலும், மிகவும் பழமையான இக்கோயில் அபிமான ஸ்தலமாக விளங்குகிறது.

பெருமாள் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். பெருந்தேவி தாயாரும், ஆண்டாள் நாச்சியாரும் தனி சன்னதிகளில் வீற்றிருக்கின்றனர். பெருமாள் சன்னதிக்கு நேர் எதிரேயுள்ள கருடன் சன்னதி விசேஷமானது. கருடன் அவதரித்த ஆனி சுவாதி அன்றும், மாதாந்திர சுவாதி நட்சத்திர நாட்களிலும் இங்குள்ள கருட பகவானுக்கு சிறப்பு ஹோமம், பூஜைகள் நடைபெறுகின்றன.

இக்கோயிலுக்கு அருகிலேயே திருப்பாதிரிபுலியூர் சிவன்பெருமான் கோயிலும் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு என தனியாக புஷ்கரணி உள்ளது. தல விருட்சம் பலா மரம் ஆகும்.

இங்கு ஆனி மாதம் பிரம்மோற்சவம் சிறப்புக்குரியது. இவ்விழாவில் 3-ம் நாள் ராஜகோபாலன் அலங்காரத்திலும், 4-ம் நாள் ஸ்ரீ வேணு கோபாலன் அலங்காரத்திலும் சுவாமி காட்சியளிப்பார். 4-ம் நாள் இரவு தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். பின்னர் 5-ம் நாள் நாச்சியார் திருக்கோலம் மற்றும் ஊஞ்சல் உற்சவமும், இரவு அனுமந்த் வாகனத்திலும், 6-ம் நாள் மாலை யானை வாகனத்திலும், 7-ம் நாள் காலை சூர்ணாபிஷேகம், 108 கலச திருமஞ்சனம், இரவு புண்ணியகோடி விமானத்திலும், 8-ம் நாள் காலை வெண்ணைத்தாழி உற்சவம் இரவு குதிரை வாகனத்திலும் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. 9-ம் நாள் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், 10-ம் நாளில் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது. அதற்கு மறுநாள் விடையாற்றி உற்சவத்துடன் பிரம்மோற்சவம் நிறைவடைகிறது

மாசி மகம் தீர்த்தவாரி:

மாசி மாதம் மகம் நட்சத்திர தீர்த்தவாரிக்காக திருக்கோவிலூரில் இருந்து உலகளந்த பெருமாள் இக்கோயிலுக்கு எழுந்தருள்வார். பின்னர் அங்கிருந்து, வரதராஜ பெருமாளும் இணைந்து தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு எழுந்தருள்வர்.

அங்கு கடலில் தீர்த்தவாரி கண்டருளிய பின்பு கருட வாகனத்தில் உலகளந்த பெருமாளும், சேஷ வாகனத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருள்வார்கள். இதனைத் தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள்.

x