சிற்ப சாஸ்திரத்தில் உலோக சிற்பம், மண் சிற்பம், மரச்சிற்பம், கல் சிற்பம் ஆகிய உட்கலைகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான கணித விதிகளை நம் முன்னோர்கள் படைத்திருக்கிறார்கள்.
சிற்ப சாஸ்திர விதிப்படி எந்தவொரு சிற்பமும் 100 சதவீதம் முழுமையுடன் அமைக்கக் கூடாது. அப்படி 100 சதவீதம் முழுமைபெற்ற சிற்பம் இந்த மண்ணில் தங்காது. உயிர்பெற்று விண்ணுக்கு சென்றுவிடும் என்பதும் விதி. இதற்கு ஓர் உதாரணத்தைப் பார்க்கலாம்.
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில், அத்திரி மகரிஷிக்கு மேற்கு நோக்கி சிவபெருமான் காட்சி தந்த சிவசைலம் என்ற திருத்தலம் அமைந்துள்ளது. அங்கு பரமகல்யாணி அம்பாள் சமேத ஸ்ரீசைலப்பர் (சிவசைல நாதர்) கோவில் கொண்டுள்ளார்.
சிற்ப வேலைப்பாடுகளுக்கு புகழ்பெற்றது இக்கோயில். இங்கு அமைந்துள்ள நந்தியின் சிலை பாதி எழுந்தாற்போல் இருக்கும்.
இச்சிலையை வடித்த சிற்பிக்கு, சிற்ப சாஸ்திரப்படி பரிசோதனை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. அதன்படி அந்த நந்தி சிலையை முழு வடிவழகுடன் வடிவமைத்தார். 99 சதவீதம் பணி முடிந்து 100-வது சதவீதம் பூர்த்தியானதும் அந்த சிலை உயிர்பெற்று நந்தி தனது முன்னங்கால்களை நிலத்தில் ஊன்றி, பின்னங்கால்களைத் தூக்கி எழத் தொடங்கியது.
இதைப் பார்த்துவிட்ட தலைமைச் சிற்பி தனது கையில் இருந்த உழியைத் தூக்கி நந்தியின் மீது வீசினார். அது நந்தியின் பிட்டத்தில் பட்டு பின்னம் ஏற்பட்டது. உடனே உயிர்பெற்று எழுந்த நந்தி, மீண்டும் சிலையாகி அது பாதி எழுந்த அதே கோலத்தில் அப்படியே சமைந்து நின்றது. இதனை இப்போதும் இக்கோயிலில் பார்க்கலாம்.
சிற்ப சாஸ்திரத்தின் இந்த விதி தேர்களுக்கும் பொருந்தும். 100 சதவீதம் முழுமையான தேர்கள் இறக்கை விரித்து விண்ணில் பறந்து விடும் என்றே கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பெரிய தேராக விளங்குவது திருவாரூர் அழகேச பெருமான் கோயில் தேர். இது முக்காலே அரைக்கால் வீசம் அளவுள்ளது. அதாவது, ஒன்றில் அரைக்கால் விகிதம் குறைவுபட்டது. அதாவது 87.5 சதவீதம் நிறைவுபெற்றது. 12.5 சதவீதம் குறைவுபெற்றது.
இந்தக் கணக்கில் பார்த்தால் தமிழகத்தின் இரண்டாவது பெரிய தேரான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் கோயில் தேரும், மூன்றாவது பெரிய தேரான திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் தேரும் அடுத்தடுத்து குறிப்பிட்ட விகிதங்கள் குறைவுபட்டவை.
நெல்லையப்பர் ஆனித்தேர்
திருநெல்வேலியில் மிகவும் பிரசித்திபெற்ற நெல்லையப்பர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் நெல்லையப்பர், அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் என ஐந்து தேர்கள் உள்ளன. இதில் நெல்லையப்பர் தேர் தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய தேர் என்னும் பெருமையைக் கொண்டதாகும். 82 அடி உயரமும், 450 டன் எடையுடன் மிகவும் கம்பீரமாக இந்தத் தேர் காணப்படும்.
முற்காலத்தில் 13 அடுக்குகளைத் தாங்கிய படி இந்தத் தேர் உலா வந்திருக்கிறது. பிற்காலத்தில் 9 அடுக்குகளாகவும், அதன் பின் 7 அடுக்குகளாகவும் தேரின் உயரம் குறைக்கப்பட்டது. தற்போது ஐந்து அடுக்குகள் மட்டுமே அலங்காரம் செய்யப்படுகிறது.
வெளிப்புறம் நான்கு சக்கரங்களும், உள்புறம் நான்கு சக்கரங்களும் கொண்டது. இவை இரும்பு சக்கரங்களாக மாற்றப்பட்டதால் தேர் எளிதாக உருண்டோடுகிறது. 10 ஆண்டுகளுக்கு முன் வரை தேரோட்டம் மூன்று முதல் ஒரு வாரம் வரை நடைபெறும். குறிப்பிட்ட தூரம் வரை இழுக்கப்பட்டு, மீண்டும் மறுநாள் இழுக்கப்படும். தேர் நிலையம் வந்து சேரும் வரை தேரிலேயே சுவாமிக்கும், அம்பாளுக்கும் நிவேதனங்கள், பூஜைகள் நடைபெறும்.
திருவாரூர், ஸ்ரீவில்லிபுத்தூர் தேர்கள் இயந்திரங்கள் உதவியுடன் இழுக்கப்படுகின்றன. ஆனால் நெல்லையப்பர் கோயில் தேர் முழுக்க முழுக்க மனித சக்தியால் மட்டுமே இழுக்கப்படுகிறது. சமீப காலமாக பக்தர்களின் பெருமுயற்சியால் காலையில் தேர் வடம்பிடிக்கப்பட்டு, மாலைக்குள் நிலையத்தில் சேர்த்துவிடுகின்றனர்.
தேரை சுத்தம் செய்வது, அலங்கார கூடுகள் கட்டி, தேருக்கு மேல் அடுக்குவது, பொம்மைகளை பொருத்துவது, சக்கரங்களுக்கு வர்ணம் பூசுவது, அச்சுக்களில் எண்ணெய் பூசுவது, தேரின் மீது தோரணங்கள் கட்டுவது போன்ற பணிகள் 15 நாட்களுக்கும் மேலாக நடந்து கொண்டே இருக்கும்.
அடுத்து தேரோட்டத்தின் போது தேரை வழிநடத்தும் பணி முக்கியமானது. தேரினை இழுப்பதை விட, அதன் பின்னால் இருந்து தடிகொண்டு தேரினை முன்னே தள்ளுவது முக்கியமானது. தடி போடுவதும், வடத்தை இழுப்பதும் சமகாலத்தில் நடக்கும் போதுதான் தேர் நகர்ந்து செல்லும்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் உற்சாகத்தில் மிக வேகமாக தேரினை இழுத்துச் செல்வார்கள்.
450 டன் எடை கொண்ட தேர் மிக வேகமாக ஓடினால் என்னவாகும்? எனவே அத்தனை எடை கொண்ட தேரின் வேகத்தைக் கட்டுப்படுத்துவது எளிதான காரியமல்ல. இதற்கான கலைஞர்கள் இப்பணியைத் திறம்படச் செய்கின்றார்கள்.
மற்ற கோயில்களில் தேருக்கு முன் சக்கரங்களின் தான் சறுக்கு கட்டை போடுவார்கள். ஆனால் எடைமிகுந்த நெல்லையப்பர் தேருக்கு உள்ளே இருக்கும் சக்கரங்களுக்கும் சறுக்கு போடுவார்கள். இது மிகவும் ஆபத்தான, கவனமாகச் செய்ய வேண்டிய பணியாகும்.
திருநெல்வேலி ரதவீதிகளின் அகலம் 32 அடி. ஆனால் தேரின் அகலமோ 28 அடி. எனவே தேரின் இருபுறமும் 2 அடி இடைவெளிதான் உள்ளது. ரதவீதிகளின் இருபுறமும் உள்ள கடைகளின் வாசல்களில் மக்கள் கூட்டம் நிறைந்திருக்கும். இந்த இடைவெளிக்குள் தேரினை எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் வழிநடத்திச் செல்வதற்கு மிகவும் திறமை வேண்டும்.
குறிப்பாக திருநெல்வேலியில் அதிக நீளமுள்ள மேலரதவீதியை நிறைத்தபடி, நெல்லையப்பர் தேரில் பவனி வருவதைக் காண கண்கோடி வேண்டும்.
லட்சக்கணக்கானோர் திரளும் இவ்விழாவை அவசியம் காண வாருங்கள்.
*நெல்லையப்பர் ஆனி தேரோட்டம் - 2.7.2023.