சுவாமி நாதமுனிகளின் 1,200-வது அவதாரத் திருநாள்


சுவாமி நம்மாழ்வார் - சுவாமி நாதமுனிகள்

அஷ்டாங்க யோகக் கலையில் சிறந்து விளங்கியவர் சுவாமி நாதமுனிகள். ஆழ்வார்திருநகரியில் சுவாமி நம்மாழ்வாரின் நேரடி தரிசனத்தை இதன்மூலமாக நாதமுனிகள் பெற்றார்.

“உமக்கு என்ன வேண்டும்” என்று நம்மாழ்வார் கேட்டார்.

சுவாமியின் தரிசனத்தைப் பார்த்ததும் அளவில்லா ஆனந்தம் அடைந்தார் நாதமுனிகள். “சுவாமி, நீங்கள் அருளிச்செய்த திருவாய்மொழி என்ற ஞானச்செல்வம் வேண்டும் சுவாமி” என்று, தம் ஆசையை வெளிப்படுத்தினார்.

நாதமுனிகளுக்கு அருளும் நம்மாழ்வார்

“திருவாய்மொழி ஆயிரம் பாடல்கள் மட்டுமின்றி, ஆழ்வார்கள் அனைவரும் பாடிய நாலாயிர திவ்ய பிரபந்தத்தையும், அனைத்து ஆத்மாக்களையும் உஜ்ஜீவனப்படுத்தும் உன்னதமான ப்ரபத்தி மார்க்கத்தையும் அருள்கிறேன்” என்றார் சுவாமி நம்மாழ்வார்.

பின்னர், நாதமுனிகளுக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்து, த்வயம் மந்திரத்தை உபதேசித்து, நாலாயிரத்தையும் அருளிச்செய்தார் நம்மாழ்வார்.

“சுவாமி நாலாயிர திவ்ய பிரபந்தத்தை அருளிச் செய்தீர்கள். அவற்றுக்கான அர்த்தங்களையும் அருளிச்செய்ய வேண்டும்” என்று பிரார்த்தித்தார் நாதமுனிகள்.

மகிழ்ச்சியோடு அதனையும் நிறைவேற்றினார் சுவாமி நம்மாழ்வார்.

பொலிக பொலிக

அப்போது, திருவாய்மொழியில், ‘பொலிக பொலிக போயிற்று வல்லுயிர் சாபம்; கலியும் கெடும் கண்டுகொண்மின்’ என்ற பாசுரத்துக்கு, சுவாமி நம்மாழ்வார் விளக்கம் தந்தார். அந்த விளக்கத்தைக் கேட்டதும் நாதமுனிகள் ஆச்சர்யப்பட்டார்.

“சுவாமி இந்த லோகத்தை உய்வடையச் செய்ய ஒரு மகான் அவதரிக்கப் போகிறாரா?” என்று நாதமுனிகள் கேட்டார்.

“ஆம்! அப்படிப்பட்ட மகான் விரைவில் அவதரிக்கப் போகிறார். அவர்தான் பகவத் ராமானுஜர். அவரால் வையகம் வாழும். இந்த கலிகாலத்தின் கொடுமைகளில் இருந்து, பாவங்களில் இருந்து அனைத்து மக்களும் விடுபட்டு அவரால் பரமபதம் செல்வார்கள்” என்றார் சுவாமி நம்மாழ்வார்.

“அப்பேர்ப்பட்ட மகான் எப்போது வருவார் சுவாமி?” என்று ஆவலோடு கேட்டார் நாதமுனிகள்.

“ஸ்ரீராமபிரான் தாம் முடிசூட விரும்பிய சித்திரை மாதத்தில், பகவத்கீதையின் 18-வது அத்தியாயத்தில் பிரதம உபாயம் எனப்படும் சரம ஸ்லோகம் பிறந்தது போல, நான் அவதரித்த விசாக நட்சத்திரத்தில் இருந்து 18-வது நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரத்தில் அந்த மகான் அவதரிப்பார். எம்பெருமானின் திருவடிகளை மட்டுமல்ல, எம்பெருமானின் அடியார்களின் திருவடிகளை பற்றியவர்களுக்கெல்லாம், அடியார்களின் அபிமானத்தை பெற்றவர்களுக்கெல்லாம் பரமபதம் - என்ற முடிவான சரம உபாயத்தை அவர் உலகத்துக்கு பறைசாற்றுவார்” என்றார் நம்மாழ்வார்.

இதைக் கேட்டதும் ஆச்சர்யத்திலும், சந்தோஷத்திலும் பூரித்துப் போன நாதமுனிகள், “அந்த பகவத் ராமானுஜரைக் காணும் பாக்கியம் அடியேனுக்கு உண்டா சுவாமி?” என்று எதிர்பார்ப்போடு கேட்டார்.

“இல்லை. உமக்கு அந்த பாக்கியம் இல்லை. ஆனால், ஆளவந்தார் என்ற மகான் உமக்கு திருப்பேரனாக அவதரிக்கப் போகிறார். ராமானுஜரை அவர் காண்பார்” என்று, சுவாமி நம்மாழ்வார் அருளினார்.

“மகா பாக்கியம் சுவாமி... மகா பாக்கியம். அந்த பகவத் ராமானுஜரின் திருமேனி அழகையும், திருமுக மண்டலத்தின் அழகையும் அடியேன் சேவிக்க வேண்டும்” என வேண்டிக் கொண்டார் நாதமுனிகள்.

அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், அவரது கனவில் ராமானுஜரின் திருமேனி அழகை நம்மாழ்வார் காட்டினார்.

பகவத் ராமானுஜர்

நாதமுனி பேரானந்தம் அடைந்து, “உம்முடைய திருமேனியை விட அழகாக இருக்கிறது சுவாமி” என்றார்.

நம்மாழ்வாரும், “அழகாகத்தான் இருக்கும்” என்றார்.

“இன்னொரு கோரிக்கை சுவாமி” என்ற நாதமுனி, “ராமானுஜரின் திருமேனியை தினமும் அடியேன் பார்க்க வசதியாக, அவரது விக்ரகத்தை தந்தருள வேண்டும்” என்றார்.

நம்மாழ்வாரும், அதேபகுதியில் வாழ்ந்து வந்த ஒரு சிற்பியின் கனவில், ராமானுஜரின் திருமேனி உருவத்தைக் காட்டினார்.

“நாளை காலை எமது சந்நிதிக்கு வருக. திருப்புளியமரத்தின் கீழே அமர்ந்துகொண்டு, அந்த திருமேனியைப் போலவே ஒரு விக்ரக திருமேனியை செம்மை செய்து ஒப்படைக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

குறிப்பிட்ட அந்த சிற்பியும், நீர் கூட அருந்தாமல், உபவாசமாக இருந்து ராமானுஜரின் விக்ரகத்தை செய்தார். அந்த விக்ரகம் நாதமுனிகள் திருக்கைகளுக்குச் சென்றது.

“சுவாமி நாலாயிர திவ்யபிரபந்தத்தை அருளிச் செய்தீர்கள். த்வய மந்திரத்தை உபதேசம் செய்தீர்கள். தற்போது, பகவத் ராமானுஜரின் திருமேனி விக்ரகத்தையும் தந்தீர்கள். யாரும் பெற முடியாத, யாராலும் அடைய முடியாத பாக்கியத்தை பெற்றுவிட்டேன் சுவாமி” என்று, நன்றிப்பெருக்கோடு கூறினார் நாதமுனிகள்.

“நாதமுனிகளே உம் மூலமாக இந்த ப்ரபத்தி மார்க்கம் உலகில் பரவ இருக்கிறது. வையகத்தை வாழ வைக்கப்போகிறது. உலக ஆன்மாக்களை எல்லாம், எம்பெருமானை தஞ்சமாக பற்ற வைக்க வேண்டும்” என்று ஆசீர்வதித்தார் நம்மாழ்வார்.

காட்டுமன்னார்கோயில் வீரநாராயணப் பெருமாள் கோயில்

காட்டுமன்னார்கோயில் வீரநாராயணப் பெருமாள் கோயில்

சீடர்களுக்கு நாதமுனிகளின் அறிவுரை

காட்டுமன்னார்கோவிலுக்கு வந்த நாதமுனிகள், தனது சீடர்களுக்கெல்லாம் பஞ்ச சம்ஸ்காரம் செய்து, ப்ரபக்தி மார்க்கத்தை உபதேசித்து, அவர்கள் மூலமாக அதனை உலகில் பரவச் செய்தார்.

பரமபதிக்கும் காலத்தில், தனது திருமகன் ஈஸ்வரமுனியிடம், “உனக்கு ஒரு குமாரர் அவதரிக்கப் போகிறார். அவருக்கு ‘யமுனைத்துறைவன்’ என்று பெயரிட வேண்டும். அவனால், இந்த சரணாகதி மார்க்கம் தழைக்கப்போகிறது” என்றார்.

அதுபோல், தமது சீடர்களில் பிரதானமானவரான உய்யக்கொண்டாரை அழைத்து, “யாம் உமக்குச் சொன்ன ரகசியங்களை எல்லாம் என் பேரனாக வர இருக்கும் யமுனைத்துறைவன் என்ற ஆளவந்தாருக்கு சொல்ல வேண்டும். அவன் மூலமாக இந்த மார்க்கத்தை நாடறிய பரவச் செய்ய வேண்டும்” என்றார்.

அதுபோல், தமது மற்றொரு சீடரான குருகை காவலப்பனை அழைத்து, “எம்முடைய பேரனுக்கு, யோக ரகசியங்களை நீர் சொல்ல வேண்டும்” என்றார்.

இவ்வாறாக நியமனங்களைச் செய்து, நாதமுனிகள் திருநாடு அலங்கரித்தார். கடலூர் அருகே சொர்க்கப்பள்ளம் என்ற இடத்தில் நாதமுனிகள் திருவரசு இப்போதும் உள்ளது. அவர் அவதரித்த ஆனி மாதம் அஸ்தம் நட்சத்திரத்தை முன்னிட்டு அங்கு 10 நாள் திருவிழா நடைபெறுகிறது.

*சுவாமி நாதமுனிகள் 1200-வது அவதார திருநாள் - 1.7.2023.

x