காக்கும் கார்த்திகைச் செல்வன் - 31


மருதமலை முருகன்

கோவை மாவட்டம், மருதமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகப் பெருமானின் ஏழாம் படைவீடாகப் போற்றப்படுகிறது. இத்தலத்தில் முருகப் பெருமானும், விநாயகப் பெருமானும் சுயம்பு மூர்த்திகளாக எழுந்தருளியுள்ளனர்.

சுமார் 800 ஆண்டு காலம் பழமைவாய்ந்த இத்தலத்தின் சிறப்புகளை அருணகிரிநாதர் தனது திருப்புகழ் பாடல்களில் எடுத்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தல வரலாறு

பாம்பாட்டி சித்தர் தனது இளம் வயது முதலே பாம்புகளைப் பிடித்து விஷத்தை முறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தார். மேலும், பாம்புக்கடிக்கு மருந்து தயாரிக்கும் பணியையும் இவர் செய்து வந்ததால், மக்கள் இவரை ’பாம்பு வைத்தியர்’ என்று அழைத்தனர். ஒருசமயம் பாம்பாட்டி சித்தர், நாகரத்தின பாம்பைத் தேடி மருதமலைக்கு வந்தார். அப்போது பாம்பாட்டி சித்தருக்கு சட்டை முனிவர் காட்சியளித்தார். அப்போது, “பிறப்பின் பயன் யாதெனில் நம் உடலுக்குள் இருக்கும் பாம்பை (குண்டலினி சக்தி) கண்டறிவதுதான். அதை விட்டுவிட்டு காட்டில் திரியும் பாம்புகளைத் தேடி அலைவது வீண் வேலையே” என்றார் முனிவர்.

சட்டைநாதரின் உபதேசத்தால் ஞானம் பெற்ற பாம்பாட்டி சித்தர், பாம்பு பிடிப்பதை நிறுத்தினார். மேலும், எந்த உயிரையும் துன்புறுத்துவதில்லை என்று முடிவெடுத்து, இறைசக்தியைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டார். முருகப் பெருமானை வணங்கி தியானத்தில் ஈடுபட்டார். முருகப் பெருமான், பாம்பாட்டி சித்தருக்கு அருட்காட்சி வழங்க திருவுள்ளம் கொண்டார். அதன்படி மருதமலையில் வள்ளி, தெய்வானையுடன் பாம்பாட்டி சித்தருக்கு காட்சியளித்து ஞான உபதேசம் செய்தார். பக்தர்களும், ‘மருதமலை மாமணியே’ என்று முருகப் பெருமானைப் போற்றி புகழ்ந்தனர்.

கோயில் அமைப்பும் சிறப்பும்

837 படிகள் கொண்ட மலைப்பகுதியில் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 741 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் வரதராஜப் பெருமாளுக்கும் சந்நிதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மலை அடிவாரத்தில் இருந்து நடைபயணம் மேற்கொள்பவர்கள் தொடக்கத்தில் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கும் விநாயகப் பெருமானையும், இடும்பனையும் தரிசிக்கலாம். மலைமீது சென்றதும் கோயிலுக்குச் செல்லும் இறுதிப் படிக்கட்டுகள் ஆதிமூலஸ்தானத்துக்கு நேர் எதிராக உள்ளன. ஆதிமூலஸ்தானத்தில் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கும் சுப்பிரமணியர், வள்ளி மற்றும் தெய்வானையை தரிசிக்கலாம். வள்ளியின் சுயம்பு உருவம், தெய்வானையை விட சற்று உயரமாகக் காணப்படுகிறது. ஆதி மூலஸ்தான கருவறை விமானமும், முன்புறம் உள்ள தைப்பூச கல்யாண உற்சவ மண்டபமும் புதிதாகக் கட்டப்பட்டுள்ளன. பஞ்சமுக விநாயகரையும் தரிசித்தபின் தண்டாயுதபாணி சந்நிதிக்குச் செல்லலாம்.

தண்டாயுதபாணி சந்நிதிக்கு நேராக புதிய ஏழு நிலை ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. ராஜ கோபுர கல்ஹாரம், ஏழுநிலை கோபுரம், தங்க முலாம் பூசிய ஏழு கலசங்கள், மேல் மண்டபம், ராஜ கோபுரத்துக்குச் செல்லும் படிக்கட்டுகள், ராஜ கோபுரத்தில் இருந்து மேல் மண்டபத்துக்குச் செல்லும் படிக்கட்டுகள் ஆகியன புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.

ராஜ கோபுர நுழைவாயிலைக் கடந்து சென்றால் கல்லால் ஆன கொடிமரத்தை அடையலாம். அங்கு வலம்புரி விநாயகர், பெரிய மயில் முக குத்துவிளக்கு, உலோகக் கொடிமரம், மயில் வாகனம், முன் மண்டபத்தில் வரதராஜப் பெருமாள் சந்நிதி ஆகியவற்றைக் காணலாம். மயில் முக விளக்கின் அடிப்புற ஆமை வடிவமும், அதைத் தொடர்ந்து மேல் தண்டில் உள்ள பாம்பு உருவங்களும் குறிப்பிடத்தக்கவை.

அர்த்தமண்டபத்தில் கருவறை நுழைவாயிலின் இருபுறத்திலும் விநாயகரும் (இடப்புறம்), வீரபத்திரரும் (வலப்புறம்) உள்ளனர். கருவறையில் தண்டத்துடன் தண்டாயுதபாணி அருள்பாலிக்கிறார்.

சோமாஸ்கந்த மூர்த்தியாக, வெளி மண்டபத்தில் வலப்புறம் பட்டீஸ்வரர், இடப்புறம் மரகதாம்பிகை சந்நிதிகளுடன் முருகப் பெருமான் அருள்பாலிப்பது தனிச்சிறப்பு. அம்பாள் சந்நிதிக்கு எதிராக வெளி மண்டபத்தில் நவக்கிரக சந்நிதி உள்ளது. வெளி மண்டபச் சுற்றில் தட்சிணா மூர்த்தி, லிங்கோத்பவர், துர்கை, சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன.

மருதமலையில் முருகப் பெருமானின் அருள்பெற்ற பாம்பாட்டி சித்தர், அவருக்கு புதிய விக்கிரகம் செய்து வழிபட்டார். இந்த விக்கிரகமே மூலஸ்தானத்தை அலங்கரிக்கிறது. இரண்டு கரங்களுடன், பழநி முருகனைப் போலவே கையில் தண்டத்துடன், இடது கையை இடுப்பில் வைத்தபடியே தண்டபாணியாக காட்சி அருள்கிறார் கந்தன். தலையில் குடுமி, காலில் தண்டை காணப்படுகிறது, தினமும் ராஜ அலங்காரம், விபூதிக் காப்பு, சந்தனக் காப்பு என்று மூன்று வித அலங்காரங்களுடன் அருள்பாலிக்கும் முருகப் பெருமான், அர்த்தஜாம பூஜை சமயத்தில் சுயரூபத்தில் தண்டாயுதபாணியாக காட்சி அருள்கிறார். அப்போது ஆபரணம், கிரீடம் என்று எதுவும் இல்லாமல் வேட்டி மட்டும் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விசேஷ நாட்களில் வெள்ளிக்காப்பு, கிருத்திகை, தைப்பூச தினங்களில் தங்கக் கவசம் அணிகிறார்.

பாம்பாட்டி சித்தர் சந்நிதி

மலைப்பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் குகையில் பாம்பாட்டி சித்தர் சந்நிதி உள்ளது. இவரது வலது கையில் மகுடி, இடது கையில் தடி காணப்படுகிறது. அருகில் சிவலிங்கம், நாகர் உள்ளன. இந்த நாகத்தின் வடிவிலேயே முருகப் பெருமான், பாம்பாட்டி சித்தருக்கு காட்சி அருளினார். தினமும் இவரது சந்நிதியில் ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி வைக்கப்படுகிறது. மறுநாள் இந்தப் பால் குறைந்திருப்பதை வைத்து, தினமும், பாம்பாட்டி சித்தர் முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்வதாக கூறப்படுகிறது.

தினமும் முருகப் பெருமானுக்கு பூஜை நிறைவு பெற்றதும், பாம்பாட்டி சித்தருக்கும் பூஜை செய்யப்படுகிறது. பாம்பாட்டி சித்தருக்கு விபூதிக் காப்பு செய்து, காவியுடை அணிவித்து அலங்காரம் செய்யப்படுகிறது. எவ்வித ஆடம்பரமும் இல்லாமல், எளிய வாழ்க்கை வாழ வேண்டும் என்று மனிதர்களுக்கு உணர்த்துவதற்காகவே இவ்வாறு செய்யப்படுகிறது.

இங்கு காணப்படும் நாகரை, பக்தர்கள் முருகப் பெருமானாக பாவித்து வழிபடுகின்றனர். நாகருக்கு பின்புறம் பீடம் போன்ற அமைப்பில் சிவபெருமான், கணபதி, அம்பிகை அருள்பாலிக்கின்றனர். இங்கு விநாயகர், சிவபெருமானுக்கும் அம்பிகைக்கும் நடுவில் காட்சியருள்வது குறிப்பிடத்தக்கது.

பாம்பாட்டி சித்தர் சந்நிதிக்கு செல்லும் வழியில் சப்த கன்னியர் சந்நிதி உள்ளது. கோயிலுக்குச் செல்லும் வழியில் இடும்பன் சந்நிதி அமைந்துள்ளது. இந்த சந்திப்புக்கு எதிரில் புலி வாகனச் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. சப்த கன்னியர் சந்நிதியில் ஆடிப் பெருக்கு (ஆடி 18) விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

மருதாச்சல மூர்த்தி

மருத மரங்கள் நிறைந்து காணப்படும் மலையில் அருள்பவர் என்பதால் முருகப் பெருமான் ‘மருதாச்சல மூர்த்தி’ என்று அழைக்கப்படுகிறார். இந்த மலையில் நோய் நீக்கும் மருத்துவ குணங்களை உள்ளடக்கிய மூலிகைகள் காணப்படுகின்றன. இத்தலத்தின் தல விருட்சம் மருத மரம். மருதமலையில் உள்ள ஒரு மருதமரத்தின் அடியில் இருந்து தீர்த்தம் உற்பத்தியாகி வருவதால், இத்தீர்த்தம் ‘மருத சுனை’ என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தீர்த்தமே சுவாமிக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்தப்படுகிறது.

அரசு, அத்தி, வேம்பு, வன்னி, கொரக்கட்டை ஆகிய 5 மரங்கள் இணைந்து வளர்ந்துள்ள நிலையில் அதன் அடியில் உள்ள விநாயகர் ‘பஞ்ச விருட்ச விநாயகர்’ என்று அழைக்கப்படுகிறார். அவர் அருகில் முருகப் பெருமான் மயில் மீது அமர்ந்து கையில் வேலுடன் அருள்பாலிக்கிறார்.

தான்தோன்றி விநாயகர்

மருதமலை கோயிலுக்குச் செல்லும் வழியில் அடிவாரத்தில் ‘தான் தோன்றி விநாயகர்’ சந்நிதி உள்ளது. இவர் சுயம்புவாகத் தோன்றியவர். யானைத் தலை மட்டுமே இவருக்கு உண்டு. உடல் கிடையாது. முருகப் பெருமான் சந்நிதியை நோக்கியபடி தும்பிக்கையை நீட்டி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இவருக்கு அருகில் மற்றொரு விநாயகர் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

சுயம்பு விநாயகருக்கு பூஜை செய்த பிறகே பிரதான விநாயகருக்கு பூஜைகள் நடைபெறும். முருகப் பெருமானுக்கு உகந்த நாட்களில் அவருக்கு நடைபெறும் சிறப்பு பூஜைகள் அனைத்தும் இந்த விநாயகப் பெருமானுக்கும் நடைபெறுவதால், இவரை பக்தர்கள், ‘தம்பிக்கு உகந்த விநாயகர்’ என்று போற்றுகின்றனர்.

குதிரை வாகனத்தில் முருகப் பெருமான்

பொதுவாக மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா செல்லும் முருகப் பெருமான், ஒரு சில ஊர்களில் குதிரை வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா செல்வார். இது தொடர்பாக ஒரு சம்பவம் குறிப்பிடப்படுகிறது.

ஒருசமயம் மருதமலை கோயிலில் உள்ள பல பொருட்களை, திருடர்கள் திருடிச் சென்றனர். அப்போது முருகப் பெருமான் குதிரை மீது ஏறிச் சென்று, அவர்களை மறித்து, பொருட்களை மீண்டும் கோயிலில் சேர்த்தார். மேலும், திருடர்களை பாறைகளாக மாறச் செய்தார். இவ்வாறு முருகப் பெருமான் குதிரைப் பயணம் மேற்கொண்டபோது, குதிரை மிதித்த இடங்களில் பள்ளம் உண்டானது. மலைப்பாதையில் உள்ள ஒரு பாறையில் இந்தத் தடம் காணப்படுகிறது. இந்தப்பாறை ‘குதிரைக் குளம்பு கல்’ என்று அழைக்கப்படுகிறது. கோயில் மண்டபத்தில் முருகப் பெருமான் குதிரை மீது எழுந்தருளி பயணிக்கும் சிற்பம் உள்ளது.

பதினெட்டாம் படி (முதல் பதினெட்டு படிகள்), காவடி வடிவில் உள்ள இடும்பன் கோயில், குதிரைக் குளம்புச் சுவடு காணப்படும் பாறை ஆகியன கோயிலில் காணப்பட வேண்டிய இடங்களாக குறிப்பிடப்படுகின்றன.

திருவிழாக்கள்

வைகாசி விசாகத் திருவிழா, தைப்பூசத் திருவிழா மருதமலையில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. வைகாசி திருவிழாவில் முருகப் பெருமானுக்கு 108 பால் குட அபிஷேகம் நடைபெறும். தைப்பூசத்தை முன்னிட்டு 10 நாள் பிரம்மோற்சவம் நடைபெறும். அதுசமயம் தினமும் மாலையில் சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருள்வார், தைப்பூச தினத்தில் காலையில் திருக்கல்யாணம், மாலையில் தேர்த் திருவிழா நடைபெறும். அன்றைய தினத்தில் சுவாமி யானை வாகனத்தில் எழுந்தருள்வது வழக்கம்.

திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள், இங்குள்ள தல விருட்சத்தில் மாங்கல்யக் கயிறு மற்றும் தொட்டில் கட்டி வேண்டிக் கொள்வர். பாம்பாட்டி சித்தர் சந்நிதியில் தரப்படும் விபூதி பிரசாதத்தை நீரில் கரைத்து உட்கொண்டால், நாக தோஷம் உள்ளவர்கள் தோஷம் நீங்கப் பெறுவர். விஷப்பூச்சி கடிபட்டவர்கள் குணமடைவர் என்பது நம்பிக்கை. தோல் நோய் உள்ளவர்கள் விபூதியை உடலில் பூசிக் கொள்வர். பாம்பாட்டி சித்தர் சந்நிதியில் நெய் தீபம் ஏற்றி, வெண்ணிற மலரால் அர்ச்சித்து, இனிப்பு படைத்தும் வழிபடுகின்றனர்.

அருணகிரிநாதர் திருப்புகழ்

திரிபுரம் அதனை ஒரு நொடியதனில்

எரிசெய் தருளிய சிவன் வாழ்வே!

சினமுடைஅசுரர் மனமது வெருவ

மயிலது முடுகி விடுவோனே!

பருவரை யதனை உருவிட எறியும்

அறுமுகமுடைய வடிவேலா!

பசலையொ டணையும் இளமுலை மகளை

மதன்விடு பகழி தொடலாமோ!

கரிதிரு முகமும் இடமுடை வயிறும்

உடையவர் பிறகு வருவானே!

கனதனமுடைய குறவர்தம் மகளை

கருணையொ டணையும் மணிமார்பா!

அரவணை துயிலும் அரிதிரு மருக

அணிசெயு மருதமலையோனே!

அடியவர்வினையும் அமரர்கள் துயரும்

அற அருள் உதவு பெருமாளே!

x