அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நிறைவு: ஆக.30-ம் தேதி வரை கண்காட்சியை பார்க்க அனுமதி


பழநியில் நடைபெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டின் நிறைவு விழாவில் கவுரவிக்கப்பட்ட இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு. உடன், அமைச்சர் அர.சக்கரபாணி, உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் மற்றும் மடாதிபதிகள் உள்ளிட்டோர். படம்: நா.தங்கரத்தினம்

பழநி: இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பழநியில் இரண்டு நாட்கள் நடைபெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நேற்றுடன் நிறைவடைந்தது.

பழநியில் உள்ள பழனியாண்டவர் கல்லூரியில் நடைபெற்ற மாநாட்டை, முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சிவாயிலாக நேற்று முன்தினம் தொடங்கிவைத்துப் பேசினார்.முன்னதாக, ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், மாநாட்டு இலச்சினை பொறிக்கப்பட்ட கொடியை 100 அடி கம்பத்தில் ஏற்றிவைத்தார். தொடர்ந்து, மாநாட்டு ஆய்வு மலர் வெளியிடப்பட்டது.

மாநாட்டில் ஆன்மிக அன்பர்கள், ஆதீனங்கள், நீதிபதிகள், வெளிநாட்டைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் பேசினர். வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி, பல்வேறு நாடுகலில் இருந்தும் வந்திருந்த பக்தர்கள் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

மாநாட்டின் 2-வது நாளான நேற்று மாவட்ட ஆட்சியர் பூங்கொடி வரவேற்றார். அறநிலையத் துறைஅமைச்சர் பி.கே.சேகர்பாபு, முதன்மைச் செயலர் சந்திரமோகன், ஆணையர் தர் முன்னிலை வகித்தனர். உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி மாநாட்டை தொடங்கிவைத்துப் பேசினார்.

விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பேசும்போது, "முருகன் தமிழ்க் கடவுள். இதற்கு ஏராளமான இலக்கியச் சான்றுகள் உள்ளன. தமிழுக்கு மாநாடு நடத்தினாலே ,அது முருகனுக்கான மாநாடுதான். இதை உணர்ந்து அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை தமிழக அரசும், அறநிலையத் துறையும் நடத்துவது பாராட்டுக்குரியது. இந்த மாநாட்டின் மூலமாக தமிழ் வென்று இருக்கிறது" என்றார்.

மொரீஷியஸ் தமிழ்க் கோயில்கள் கூட்டிணைப்பு தலைவர் செங்கண் குமரா பேசும்போது, "மொரீஷியஸ் நாட்டில் ஆண்டுதோறும் முருகனுக்கு தைப்பூசத் திருவிழா, பங்குனி உத்திரத் திருவிழாவை விமரிசையாக நடத்துகிறோம். உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்களை ஒன்றிணைத்து, இங்கு மாநாடு நடத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.

மாநாட்டு மலரை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் வெளியிட, கோவை கவுமார மடம் ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில், திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம், செந்தில்குமார் எம்எல்ஏ உள்ளிட்டோர் பேசினர். தொடர்ந்து, இசை, நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாலையில் சென்னையில் இருந்தபடி காணொலி வாயிலாக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். நிறைவு விழாவில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், முருகனின் பெருமைகளை உலகறியச் செய்த 16 பேருக்கு போகர் சித்தர் விருது, நக்கீரர் விருது, முருகம்மையார் விருது என்று 16 முருகனடியார்களின் பெயர்களில் விருதுகள் வழங்கப்பட்டன. இவற்றை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன், திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோர் வழங்கினர். அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் ரா.சுகுமார் நன்றி கூறினார்.

தொடர் விடுமுறையால், மாநாட்டில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியைக் காண ஏராளமானோர் வந்திருந்தனர். மாநாட்டில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் இலவசமாக பிரசாதப் பைகள் மற்றும் 3 வேளை உணவு வழங்கப்பட்டது. நேற்றுடன் மாநாடு நிறைவடைந்த நிலையில், கண்காட்சி அரங்கை வரும் 30-ம் தேதி வரை, காலை 8.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநாடு மாபெரும் வெற்றி: அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறும்போது, "அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. 600-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் மூலம் இசை, கலை நிகழ்ச்சிகள், நடத்தப்பட்டன. மாநாட்டின் முதல் நாளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். முதல் நாளில் 50,000 பக்தர்களுக்கு இலவச பிரசாதப் பைகள், 1.25 லட்சம் பேருக்கு 3 வேளை உணவு வழங்கப்பட்டுள்ளது. இந்த மாநாடு முற்றிலும் அரசியல் சார்பற்றது" என்றார்.

x