வேதத்துக்கு ‘ஓம்’ என்பதுபோல் நாலாயிரத்துக்கு திருப்பல்லாண்டு


பெரியாழ்வார், சுவாமி ஸ்ரீரங்கமன்னாருடன் எழுந்தருளும் ஸ்ரீஆண்டாள் (ஸ்ரீவில்லிபுத்தூர்)

‘உபதேச ரத்தினமாலை’ என்பது 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்ரீ மணவாள மாமுநிகள் அருளிச்செய்த நூல். இதில் 74 பாசுரங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் முதல் 73 பாசுரங்களை மாமுநிகளும், கடைசி 74-வது பாசுரத்தை மாமுநிகளின் சீடர் எறும்பியப்பாவும் அருளிச் செய்தனர்.

ஆசார்யர் பிள்ளை லோகாசார்யர் அருளிய ‘ஸ்ரீ வசன பூஷணம்’ என்ற திவ்ய சாஸ்திரத்தின் அர்த்தங்களை ரத்தினச் சுருக்கமாக விளக்குகிறது இந்நூல்.

ஸ்ரீ பகவத் ராமானுஜர் மற்றும் ஸ்ரீ மணவாள மாமுநிகள்

இதில் ஆழ்வார்கள் அவதரித்த மாதம், நட்சத்திரம் மற்றும் தலங்கள், ஆழ்வார்களுக்குப் பின்னால் அவதரித்த ஆசார்யர்களின் பெருமை, வைணவத்துக்கு ஏற்றம் தந்த ஸ்ரீ பகவத் ராமானுஜரின் வைபவம், வைணவ சம்பிரதாயத்துக்கு ஆணி வேராக விளங்கும் திருவாய்மொழிக்கு அமைந்த வியாக்கியான நூல்களின் விவரம், ஸ்ரீ வசன பூஷணத்தின் மேன்மை ஆகியவற்றை மாமுநிகள் தமது உபதேச ரத்தின மாலையில் விவரிக்கிறார்.

இவற்றின்படி வாழ்பவர்கள், ஸ்ரீ பகவத் ராமாநுஜரின் திருவருளுக்கு பரிபூரணமாக இலக்காக மாறுவார்கள் என்றும் உறுதி கூறுகிறார்.

ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் சுவாமி பெரியாழ்வார் அவதரித்தார். மற்றைய ஆழ்வார்களை விட மிகுந்த பெருமையை உடையவரான பெரியாழ்வாரின் ஏற்றத்தை உபதேச ரத்தினமாலையில் 16-வது பாசுரம் முதல் ஐந்து பாசுரங்களில் மாமுநிகள் விளக்குகிறார். அதன் அழகைப் பார்ப்போம்:

பட்டர்பிரானாகிய சுவாமி பெரியாழ்வார்

(16) இன்றைப் பெருமை அறிந்திலையோ - ஏழை நெஞ்சே!

இன்றைகென்ன ஏற்றம் என்னில் உரைக்கேன் - நன்றி புனை

பல்லாண்டு பாடிய - நம் பட்டர் பிரான் வந்துதித்த

நல் ஆனியில் சோதி நாள்.

- திருப்பல்லாண்டு பாடிய பட்டர் பிரானாகிய சுவாமி பெரியாழ்வார் அவதரித்த நல்ல ஆனி மாதம் சுவாதி திருநாள் இன்று. இந்நாளின் பெருமையையும், அதன் ஏற்றத்தையும் உரைக்கிறேன் கேள் நெஞ்சமே.

(17) மாநிலத்தில் முன் நம் பெரியாழ்வார் வந்துதித்த

ஆனி தன்னில் சோதி என்றால் ஆதரிக்கும் - ஞானியர்க்கு

ஒப்பார் இல்லை - இவ்வுலகு தன்னில் என்று நெஞ்சே!

எப்பொழுதும் சிந்தித்திரு.

- பெரியாழ்வார் அவதரித்த ஆனி சுவாதி என்றால் நெஞ்சம் உருகக்கூடிய ஞானிகளுக்கு, ஒப்பானவர் இவ்வுலகிலே வேறு எவரும் இல்லை என்று தன் நெஞ்சுக்கு உரைக்கிறார்.

(18) மங்களாசாசனத்தில் - மற்றுள்ள ஆழ்வார்கள் -

தங்கள் ஆர்வத்தளவு தான் அன்றி - பொங்கும்

பரிவாலே - வில்லிபுத்தூர்ப் பட்டர் பிரான் பெற்றான் -

பெரியாழ்வார் என்னும் பெயர்.

மற்ற ஆழ்வார்களைக் காட்டிலும் எம்பெருமான் மீது அதிகம் பரிவு ஏற்பட்டு, ஒரு தாய்க்குரிய பரிவோடு எம்பெருமானை வாழ்த்தி மங்களாசாசனம் செய்ததால், ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த விஷ்ணுசித்தருக்கு, பெரியாழ்வார் என்ற பெயர் ஏற்பட்டது.

(19) கோதிலவாம் ஆழ்வார்கள் - கூறு கலைக்கெல்லாம்

ஆதி திருப்பல்லாண்டானதுவும் - வேதத்துக்கு

ஓம் என்னுமது போல் - உள்ளதுக்கெல்லாம் சுருக்காய் -

தான் மங்கலமாதலால்.

எம்பெருமானை மங்களாசாசனம் செய்து பெரியாழ்வார் பாடிய ‘திருப்பல்லாண்டு’ பாசுரத்துக்குரிய ஏற்றத்தை இப்போது மாமுநிகள் விளக்குகிறார்.

வேதத்தின் ஒட்டுமொத்த பொருளும் ‘ஓம்’ என்ற பிரணவத்தில் அடங்கி இருக்கிறது. அதுபோல பன்னிரு ஆழ்வார்கள் அருளிச் செய்த ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ என்ற நூலின் ஒட்டுமொத்த சுருக்கமாக திருப்பல்லாண்டு அமைந்துள்ளது. எம்பெருமானின் நன்மையையே நோக்கமாகக் கொண்டதால் மங்கலமாக அது விளங்குகிறது.

(20) உண்டோ திருப்பல்லாண்டுக்கு - ஒப்பதோர் கலை தான் -

உண்டோ பெரியாழ்வாருக்கு ஒப்பொருவர் - தண் தமிழ் நூல்

செய்தருளும் ஆழ்வார்கள் தம்மில் - அவர் செய் கலையில் -

பைதல் நெஞ்சே! நீ உணர்ந்து பார்.

நெஞ்சமே! எம்பெருமானைப் புகழ்ந்து ஆழ்வார்கள் செந்தமிழில் இயற்றிய 4,000 பாசுரங்களையும் ஆராந்து பார். மற்றைய ஆழ்வார்களின் பாசுரங்கள் எம்பெருமானின் திருக்கல்யாண குணங்களில் திளைத்துப் பாடுவதாக அமைந்துள்ளன. ஆனால், அந்த எம்பெருமானையே வாழ்த்துவதாக அமைந்துள்ள திருப்பல்லாண்டுக்கு ஒப்பான ஒரு பிரபந்தம் உள்ளதா? அல்லது அதனை இயற்றிய பெரியாழ்வாருக்கு ஒப்பான ஒருவர்தான் உள்ளாரா?

இப்படி ஐந்து பாசுரங்களில் பெரியாழ்வாரையும், அவர் இயற்றிய திருப்பல்லாண்டையும் சிறப்பித்து இருக்கிறார் சுவாமி மணவாள மாமுநிகள்.

ஆடிப்பூரம்: அவதார நாளில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆனி சுவாதி:

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் நாச்சியார் அவதரித்த நாளான ஆடி மாதம் பூரம் திருநாளில் நடைபெறும் தேரோட்டத்துக்கு என பெரிய தேர் உள்ளது. தமிழகத்தில் இரண்டாவது பெரிய தேர் இது. இதைத் தவிர செப்புத்தேர் ஒன்றும் உள்ளது. ஆண்டாள் நாச்சியாருக்கும், சுவாமி ரெங்கமன்னாருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்ற பங்குனி உத்திரம் நாளில் இத்தேரில் இருவரும் பவனி வருவர். அதுபோல், இதே செப்புத்தேரில் ஆனி சுவாதி திருநாளுக்கு முதல் நாள் சுவாமி பெரியாழ்வார் பவனி வருவார்.

ஆனி சுவாதி அன்று காலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் வாழைகுளத் தெருவில் உள்ள தீர்த்தவாரி மண்டபத்துக்கு பெரியாழ்வார் எழுந்தருளி அங்கு தீர்த்தவாரி நடைபெறும். அன்று இரவில் ஆசீர்வாதம் தீர்த்த கோஷ்டி நடைபெறும்.

அதற்கு அடுத்த நாள் காலையில் தொட்டாசார்யர் மண்டபத்தில் சப்தாவர்ணம் நடைபெறும். அன்று இரவில் வேதபிரான் பட்டர் புராணம் வாசிக்கப்படும். தொடர்ந்து ஸ்ரீபெரிய பெருமாளும், பெரியாழ்வாரும் பல்லக்கில் உலா வருவர். 12-ம் நாள் உற்சவ சாந்தியுடன் பெரியாழ்வார் அவதார திருவிழா நிறைவு பெறும்.

பெரியாழ்வார் போற்றி -8

x