கிருஷ்ணாவதாரத்தில் லயித்த பெரியாழ்வார்


பெரியாழ்வார், கண்ணபிரான்

ஆழ்வார்களில் பலரும் கிருஷ்ணாவதாரத்தின் மகிமையை அதிகமாகப் பாடியுள்ளனர். அவர்களில் ஸ்ரீ பெரியாழ்வார், தன்னை யசோதை பிராட்டியாகவும், ஸ்ரீ கிருஷ்ணனைத் தனது குழந்தையாகவும் எண்ணி ஏராளமான பாசுரங்களைப் பாடியுள்ளார். இவை நாலாயிர திவ்ய பிரபந்தத்தில், முதலாயிரத்தில், பெரியாழ்வார் திருமொழி என்ற தொகுப்பின் கீழ் இடம்பெற்றுள்ளன.

கண்ணனின் குழந்தைப் பருவம், அவனது சேஷ்டிதங்கள் போன்றவற்றை சிலாகித்து, கண்ணனுக்கு தாலாட்டுப் பாடுதல், நிலவைக்காட்டி சோறூட்டுதல், இரண்டு கைககளைச் சேர்த்து சப்பாணி கொட்டச் செய்தல், முதுகில் அமரும் குழந்தையை வைத்து விளையாடுதல், அப்பூச்சி காடுதல், காது குத்துதல், நீராட்டுதல், பூச்சூட்டுதல் என கண்ணனின் குழந்தைப் பருவ நிகழ்வுகளை முதலில் விவரித்துள்ளார்.

அடுத்து கண்ணன் வெண்ணெய் திருடுதல், ஆயர்பாடியில் அவன் நிகழ்த்திய சேஷ்டைகள், அவை குறித்து கோகுலத்துப் பெண்கள் புகார் கூறுதல், பூதனை, அகாசுரன், பகாசுரன் போன்றவர்களை வதம் செய்தல், தன் திருவாயில் அண்டசராசரங்களையும் யசோதைக்கு காட்டுதல் ஆகியவற்றை பாடியுள்ளார்.

முதல் ஓவியம்: கண்ணன் வெண்ணெய் திருடுதல், அடுத்த ஓவியம்: தாய் யசோதையுடன்...

அதன்பின் கண்ணன் ஆநிரை மேய்க்கச் செல்லுதல், மாலையில் ஆநிரைகளுடன் திரும்பி வரும்போது, கோபாலர்களின் ஆட்டம்பாட்டத்துக்கு மத்தியில் வியர்வையும், புழுதியும் நிரம்பிய கண்ணனின் முகத்தாமரையின் அழகு, அதனைக் கண்டு கோபியர்கள் மையல் கொள்ளும் பாங்கு போன்றவை தத்ரூபமாக விவரிக்கிறார். இப்பாடல்கள் நம்மை ஆய்ப்பாடிக்கு அழைத்துச் செல்லக் கூடியவை.

இவற்றுக்கெல்லாம் உதாரணமாக கண்ணன் அவதரித்ததால் ஆயர்பாடி அடைந்த ஆனந்தத்தை விளக்கும் பெரியாழ்வார் திருமொழியின் முதல் பத்து பாடல்களில், முதல் பாடலை மட்டும் பார்ப்போம்.

“வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்

கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்

வண்ணம், சுண்ணம் எதிரெதிர் தூவிட

கண்ணன் முற்றம் கலந்தளராயிற்றே”

- திருக்கல்யாண குணங்கள் அத்தனையும் நிரம்பியவனான கண்ணன், அழகிய மாடங்கள் சூழ்ந்த திருக்கோஷ்டியூரில் அவதரித்தான். உண்மையில் கண்ணன் பிறந்தது வட மதுரையில், ஒளித்து வளர்ந்தது ஆயர்பாடியில். ஆனால் இப்பாடலில் திருக்கோஷ்டியூரை சிறப்பிப்பதற்காக அதனையே கண்ணன் பிறந்த தலமாக ஆழ்வார் பாடுகிறார். கண்ணன் பிறந்ததை அறிந்த ஆயர்கள் நந்தகோபன் மாளிகை வாயிலில் கூடினார்கள். தங்கள் வீடுகளில் இருந்த எண்ணெய், நெய், தயிர் போன்றவற்றை எடுத்து வந்து ஒருவர் மீது ஒருவர் தெளித்து தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். நந்தகோபன் மாளிகை முற்றத்தில் அவை சேறாக மாறின என்று விவரிக்கிறார்.

கிருஷ்ணாவதாரத்திலேயே ஈடுபட்டு தமது வாழ்நாளைக் கழித்தார் சுவாமி பெரியாழ்வார். தமது இறுதிக் காலத்தில் அவர் ஸ்ரீ வில்லிபுத்தூரில் இருந்து அழகர்கோவிலுக்கு சென்று, அங்கேயே வைகுந்தப் பதவி அடைந்தார்.

பெரியாழ்வார் போற்றி -7

x