தென் திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் பவித்ரோற்சவம் நிகழ்வு: மலையப்ப சுவாமி திருவீதி உலா @ கோவை


மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் பல்லக்கில் எழுந்தருளி, மாட வீதிகளில் வலம் வந்த காட்சி.

கோவை: தென்திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் பவித்ரோற்சவம் நிகழ்வில் மலையப்ப சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே, தென்திருப்பதி என்றழைக்கப்படும் ஸ்ரீவாரி மலையப்ப சுவாமி கோயில் உள்ளது. இங்கு மலையப்பசுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இக்கோயிலில் ஆவணி மாதத்தில் நடைபெறும் பவித்ரோற்சவம் நிகழ்ச்சி தொடங்கிய நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, புண்ணியாக வாஜனம், மேதினி பூஜை, பூர்ணாஹூதி, திருவாராதனம், மந்திர புஸ்பம், பிரபந்த சாற்று முறை, ஏகாந்த சேவை என தொடர் நிகழ்வுகள் நடைபெற்றன.

இதைத் தொடர்ந்து வாஜனம், பூர்ணாஹூதி, திருவாராதனம், ஸ்ரீமலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்நபன திருமஞ்சனமும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான உற்சவர் மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பவித்ர மாலையுடன் நான்கு மாட வீதிகளில் திருவீதி உலா வரும் வைபவம் சனிக்கிழமை (ஆக.24) மாலை நடந்தது.

அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி இசை வாத்தியங்கள் முழங்க, வேத விற்பனர்களின் மந்திரங்கள் முழங்க, நான்கு மாட வீதிகளின் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர், யாக சாலையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

x