பழநியில் 3 கோலங்களில் தமிழ்க் கடவுள் - முத்தமிழ் முருகன் மாநாடு சிறப்பு பகிர்வு


முருகன் கோபித்து கொண்டு வந்து நின்ற தலம் என்பதால் பழநி மலை அடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி கோயிலே மூன்றாம் படை வீடு. இங்கு முருகன் குழந்தை வடிவில் அருள்பாலிக்கிறார். குழந்தை முருகனை மகாலட்சுமி (திரு), கோமாதா (ஆ), சூரியன் (இனன்), பூமாதேவி (கு), அக்னி (டி) ஆகியோர் வழிபட்டதால் ‘திருஆவின்குடி’ என்று பெயர் பெற்றது. இவர்களுக்கு இந்தக் கோயில் பிரகாரத்தில் சிலை உள்ளது. இங்கு முருகன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார்.

முருகன் குழந்தை வடிவில் இருப்பதால் இவருடன் வள்ளி, தெய்வானை இல்லை. பழநி மலைக்கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் 6 கி.மீ. தொலைவில் உள்ள பெரியாவுடையார், 2.5 கி.மீ. தொலைவில் உள்ள பெரியநாயகியம்மனை வணங்கி விட்டு, பின்பு திருஆவினன்குடி குழந்தை வேலாயுதரையும் வணங்கி விட்டுத்தான் செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.

அருணகிரியார் திருஆவினன்குடி முருகனை வணங்கி திருப்புகழ் பாடவே முருகன் காட்சி தந்ததோடு, ஜபமாலையும் கொடுத்தார். இதை அருணகிரியார் திருப்புகழில் குறிப்பிட்டு பாடியுள்ளார்.

இதனை விளக்கும் புராண ஓவியங்கள் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. பழநி மலைக்கோயிலில் தண்டாயுதபாணி சுவாமிக்கு நடப்பதைபோல், இக்கோயிலிலும் ஆறு கால சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. ஆனி மூல நட்சத்திரத்தில் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதருக்கு அன்னாபிஷேகம் செய்யப்படும்.

பழநி திருஆவினன்குடி கோயில்.

முகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் திருஆவினன்குடி கோயிலில் நடக்கும். இங்கிருந்து புதுமணத் தம்பதிகளாக மணமக்கள் மலையேறி தண்டாயுதபாணியை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மூன்று கோலத்தில் தரிசனம் வேறு எங்கும் காணக் கிடைக்காத அதிசயம் பழநி வந்தால் கிடைக்கும்.

பழநியில் முருகப் பெருமானை மூன்று கோலங்களில் தரிசிக்கலாம். திருஆவினன்குடி கோயிலில் மயில் மீது அமர்ந்த குழந்தை வடிவிலும், மலைக்கோயிலில் கையில் தண்டத்துடனும், பெரியநாயகியம்மன் கோயிலில் மயில் வாகனம் இல்லாமல் வள்ளி, தெய்வானையுடன் திருமணக் கோலத்திலும் காட்சி தருகிறார். ஒரே தலத்தில் மூன்று கோலங்களில் முருகனை தரிசிப்பது வரம்.

1008 போற்றி தமிழ் அர்ச்சனை: பழநி கோயிலில் தமிழில் அர்ச்சனை இறைவனின் திருவருட் குணநலன்களையும், அரும்பெரும் பண்பு நலன்களையும், திருநாம சிறப்புகளையும், அருளாளர்கள் அருளிச் செய்த பாடல்களில் இருந்து பாமரரும் புரிந்து கொள்ளும் வகையில் மந்திரச் சொற்களைக் கொண்டு 108 போற்றி எனவும், 1008 போற்றி எனவும் தமிழில் படைத்து, இறைவனைத் தமிழில் அர்ச்சனை செய்யும் வழிபாட்டு முறை தமிழக கோயில்களில் உள்ளன.
தமிழ்க் கடவுள் எனும் சிறப்பிற்குரியவர் முருகன்.

பழநி கிரிவீதியில் உள்ள பிரம்ம தீர்த்தம்

முருகன் கோயில்களில் பழநி கோயில் தமிழகத்திலேயே முதன்மையான கோயிலாக விளங்குகிறது. இத்தகைய சிறப்புக்குரிய பழநி தண்டாயுதபாணி சுவாமிக்கு 1008 போற்றி தமிழ் அர்ச்சனை முறை 1997 அக்.19-ம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பக்தர்கள் பழநி முருகனின் அருளியல் தன்மைகளை உணர்ந்து வழிபாடு செய்யும் வகையில், தமிழ் அர்ச்சனை நூலை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் ‘அன்னைத் தமிழில் அர்ச்சனை’ திட்டத்தின் கீழ் தமிழில் அர்ச்சனை செய்யப்படுகிறது.

புண்ணிய தீர்த்தங்கள்: புண்ணிய தீர்த்தங்களுக்கு பஞ்சமில்லாத பழநி காலங்காலமாக மக்கள் தாங்கள் செய்த பாவங்களைத் தீர்த்துக் கொள்ளவும், புண்ணியத்தைத் தேடிக் கொள்ளவும் புண்ணிய ஆறுகளில், தீர்த்தங்களில் நீராடச் செல்கின்றனர். புண்ணியத் தீர்த்தங்களுக்கு பழநியில் பஞ்சமே இல்லை.

காரணம், பழநி மலை மீதும், பழநி மலையைச் சுற்றிலும் சூசிமுக தீர்த்தம், தேவ தீர்த்தம், அமுத தீர்த்தம், ஞான தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் இருக்கின்றன. இதில் பிரம்ம தீர்த்தம் பழநி தேவஸ்தான அலுவலகத்துக்கு எதிர்புறம் உள்ள இடும்பன் குடில்கள் வளாகத்தில் உள்ளது. மற்ற தீர்த்தங்கள் பழநி மலைப்பகுதியில் உள்ளன.

இது தவிர, சரவணப் பொய்கை, இடும்பன் குளம், வையாபுரி குளம், சண்முக நதியும் உள்ளன. பழநி மலைக்கோயிலுக்குச் செல்லும் வழியில் திருஆவினன்குடி கோயில் அருகே அமைந்துள்ளது சரவணப் பொய்கை. இங்கு நீராடி, குழந்தை வேலாயுதசுவாமியை வழிபட்டால் நன்மைகள் வந்து சேரும் என்று கூறப்படுகிறது.

சரவணப் பொய்கையின் முன்புறச் சுவரில் உள்ள சிற்ப வேலைப்பாடுகள், அடியார்கள் சரவணப் பொய்கையில் நீராடி விட்டு காவடிகளைத் தோளில் சுமந்து கொண்டு நாகஸ்வர முழக்கத்துடன் கோயில் வழிபாட்டுக்குச் செல்லும் காட்சியை விளக்குகின்றது. சரவணப் பொய்கை புண்ணிய தீர்த்தம் மாசுபடாமல் இருப்பதற்காக கம்பி வேலிகளால் மூடி வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் நீராட வசதியாக மோட்டார் மூலம் புனித நீர் தொட்டியில் நிரப்பப்படுகிறது.

பழநியில் உள்ள சண்முக நதி.

பழநி சிவகிரிப்பட்டியில் இடும்பன் குளம், பழநி நகரில் வையாபுரி குளம் உள்ளது. இதில் இடும்பன் குளத்தில் மட்டுமே பக்தர்கள் புனித நீராடும் நிலை உள்ளது. கழிவு நீர் கலப்பதால் வையாபுரிகுளம் மாசுபட்டுள்ளது.

இது தவிர, பழநி பேருந்து நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவு சென்றால் சண்முக நதியை அடையலாம். இந்த நதி பழநியின் புண்ணிய நதியாகவும், தீர்த்தமாகவும் கருதப்படுகிறது. பக்தர்கள் விழாக் காலங்களில், விழா அல்லாத நாட்களிலும் இந்த நதியில் நீராடிவிட்டு பழநியாண்டவரை தரிசிக்கின்றனர். பழநியைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருக்கும் தெய்வ வழிபாடுகளின்போது இந்த நதியில் இருந்து தீர்த்தம் எடுத்துக்கொண்டு போய் அத்தெய்வங்களுக்கு நீராட்டி வழிபடுவது குறிப்பிடத்தக்கது.

பழநி மலைத் தொடரில் உற்பத்தியாகின்ற கல்லாறு, கானாறு, பொருந்தலாறு, பச்சையாறு, பாலாறு, வறட்டாறு ஆகிய சிற்றாறுகள் பழநி நகரின் மேற்கு எல்லையில் ஒன்றாக இணைந்து சண்முகநதியாக ஓடுகின்றன. புண்ணிய நதியாகவும், நோய் தீர்க்கும் ஆற்றல் பெற்றதாகவும் இருப்பதால் சண்முக நதியில் நீராடினால் தங்களுடைய பாவம் நீங்கும், தீராத நோய்களும் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

x