தமிழ்க் கடவுளுக்கு பழநியில் மாநாடு - முத்தமிழ் முருகன் மாநாட்டில் என்னென்ன சிறப்புகள்?!


தமிழ் கடவுள் முருகனின் பெருமையை உலகெங்கும் உள்ள முருக பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழநியில் இன்றும் (ஆக. 24), நாளையும் (ஆக. 25) அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் உள்ள சமயப் பெரியோர்கள், ஆன்மிக அன்பர்கள், முருக பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இந்தியா, இலங்கை, மலேசியா, மியான்மர், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மொரீசியஸ், இங்கிலாந்து அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, கனடா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் தனித்துவம் பெற்றதாக விளங்குகிறது முருகன் வழிபாடு. ஆகவே, உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்களையும் சிந்தனையாளர்களையும் ஒருங்கிணைப்பதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம்.

முருக வழிபாட்டின் உள்ளுறை நெறிகளை உலகம் முழுவதும் பரப்புதல், முருகனை அடையும் தத்துவக் கோட்பாடுகளை யாவரும் எளிமையாக அறிந்து அருளேற்றம் பெற உதவுதல். முருகனடியார்களை உலகளாவிய அளவில் ஒருங்கிணைத்தல், முருக வழிபாட்டு நெறியை புராணங்கள், இலக்கியங்கள், திருமுறைகள், திருப்புகழ், சைவ சித்தாந்த சாத்திரங்கள் ஆகியவற்றில் இருந்து ஆழ்ந்தெடுத்து உலகறியப் பரப்புதலே இந்த மாநாட்டின் குறிக்கோள் ஆகும்.

‘சித்தர்களின் குரு’ தண்டாயுதபாணி சுவாமி: பழநி மலை மீது வீற்றிருக்கும் தண்டாயுதபாணி சுவாமிக்கு சித்தநாதன் என்ற பெயரும் உண்டு. மனிதரும், தேவரும், முனிவரும், சித்தரும், முத்தரும் தண்டாயுதபாணி சுவாமியை வழிபட்டு அருள்பெற்று வருகின்றனர். சித்தர்களுக்கு எல்லாம் குருவாக பழநி தண்டாயுதபாணி சுவாமி விளங்கி வருகின்றார்.

பழநியாண்டவரை மனமுருகி வேண்டினால் வேண்டும் வரங்களையும், ஞானத்தையும் வழங்குவார். அகத்திய முனிவருக்கு மூலமந்திரங்களையும் உபதேசங்களையும், அட்டமாசித்தியையும் அளித்தவர். அருளாளர் அருணகிரிநாத சுவாமிகளுக்கு அவரது நாவில் முருகன், வேல் கொண்டு ஓம் எனும் பிரணவ மந்திரத்தை எழுதியவர். நயன தீட்ஷை அளித்தவர். திருப்புகழ் பாட, அடி எடுத்துக் கொடுத்தவர்.

கல்பம் வென்ற சித்தர்களும், எட்டுத்திக்கில் உள்ள சித்தர்களும், நிஷ்டையில் ஈடுபட்டுள்ள சித்தர்களும், தேவர்களும், நெடுந்தொலைவில் இருந்து மணம் வீசும் மலர்களால் தண்டாயுதபாணி சுவாமிக்கு மலர் அர்ச்சனை செய்து வழிபட்டதாக, அருணகிரிநாதர் திருப்புகழில் குறிப்பிட்டுள்ளார். பழநி மலைக்கோயில் உட்பிரகாரத்தில் போகர் சித்தர் சந்நிதியும், வெளிப்பிரகாரத்தில் ஆனந்த விநாயகர் சந்நிதி அருகே 18 சித்தர்களுக்கும் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

கோபமாக பழநிக்கு வந்த முருகன்: முருகனின் அறுபடை வீடுகளில் பழநி முருகன் கோயில் மூன்றாவது படை வீடாகும். நாரதர் ஒரு நாள் அரிதாகக் கிடைத்த ஞானப் பழத்தை சிவனுக்குச் சாப்பிடக் கொடுத்தார். அப்போது அருகில் இருந்த பார்வதி, தன்னுடைய மகன்கள் விநாயகர், முருகனுக்கு பகிர்ந்து கொடுக்க விரும்பினார்.

மாநாட்டையொட்டி அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கண்காட்சி

ஆனால், சிவபெருமானோ பழத்தை பகிர்ந்தால் அதன் தனித்தன்மை போய்விடும் எனக்கூறி, பழத்தைப் பெற மகன்களுக்கு ஒரு போட்டி வைத்தார். உலகத்தை முதலில் யார் சுற்றி வருகிறாரோ அவர்களுக்கு இந்த ஞனாப் பழத்தை வழங்க முடிவு செய்தார். முருகனோ, தன்னுடைய மயில் வாகனத்தில் உலகத்தைச் சுற்றி வரச் சென்றார். விநாயகரோ, பெற்றோரை உலகமாக நினைத்து அவர்களை சுற்றி வந்து ஞானப் பழத்தை பரிசாகப் பெற்றார்.

அதிர்ச்சியடைந்த முருகன் ஏமாற்றத்தைத் தாங்க முடியாமல் பெற்றோரை விட்டுப் பிரிந்து பழநிக்கு குடிபெயர்ந்தார். அப்போது இருந்து (பழம் + நீ ) பழநி என்று அழைக்கப்படுகிறது. முருகன் பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வந்து நின்ற தலம் என்பதால் பழநி மலையடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி தலமே மூன்றாம் படை வீடாகும். மலைக்கோயிலில் உள்ள மூலவர் நவபாஷாணத்தால் ஆனவர்.

போகர் என்ற சித்தர், இந்த மூலவரை பிரதிஷ்டை செய்துள்ளார். பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில் தரைமட்டத்தில் இருந்து 450 அடி உயரத்தில் உள்ளது. பக்தர்கள் 697 படிகள் ஏறிச்சென்று முருகனை தரிசித்தால் தீராத வினைகள் எல்லாம் தீர்ந்து போகும் என்று நம்புகின்றனர்.

முருகனுக்கு வியர்க்கும் அதிசயம்: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தினமும் ஆறு கால பூஜையின்போது 6 விதமான அலங்காரங்களில் முருகன் அருள்பாலிக்கிறார். அதிகாலை 4 மணிக்கு நடை திறந்ததும் முதலில் நடைபெறும் நிகழ்ச்சி விஸ்வரூப தரிசனம் ஆகும். முருகனுடைய விஸ்வரூபம் என்பது புராண அடிப்படையில் சூரபத்மன் வதையின்போது அவன் முன் காட்டிய பெருந்தோற்றமாகும்.

பழநி முருகனின் ஆண்டி கோலத்தை காண்பதை முக்கியமானதாக பக்தர்கள் கருதுகிறார்கள். அதிகாலை நேரத்தில் மலையேறிச் சென்று பழநியாண்டவரை வழிபடுவது உடலுக்கும் உள்ளத்துக்கும் மிகவும் நன்மை. மலைக்கோயிலில் உள்ள மூலவர் சிலை நவபாஷாணத்தால் ஆனது.

அதனால், சுவாமி விக்ரகம் மிகவும் சூடாக இருக்கும். அதனால் இரவு முழுவதும் அந்த விக்ரகத்தில் இருந்து வியர்வை போன்று நீர் வெளிப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நீரை அபிஷேக தீர்த்தத்துடன் கலந்து, காலை அபிஷேகம் நடக்கும்போது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகின்றனர். இதேபோல், சுவாமியின் மீது பூசி எடுக்கப்படும் ராக்கால சந்தனமும், கவுபீக தீர்த்தமும் மருத்துவக்குணம் கொண்டவை.

முப்பரிமாணத்தில் முருகனின் பெருமைகள்: அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முன்னிட்டு பழனியாண்டவர் கல்லூரியில் 3டி திரையரங்கில் பா.விஜய் இயக்கிய ‘முருகனின் பெருமைகள்’ கூறும் பாடல் ஒளிபரப்பப்படுகிறது, அறுபடை வீடுகளுக்கு நேரில் சென்று சுற்றிப் பார்க்கும் உணர்வை ஏற்படுத்தும் விதமாக விஆர் (விர்ச்சுவல் ரியாலிட்டி) அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அரங்கிலும் தலா 200 பேர் அமருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர, பழநி முருகன் கோயிலுக்கு வர முடியாத பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே muthamizhmuruganmaanadu2024.com என்ற இணையதளம் வாயிலாக பார்த்து ரசிக்கவும், தரிசிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

x