ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் முருகன் கோயில்களில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு பக்தர்கள் அலகு குத்தி, காவடி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
வைகாசி விசாகத்தை முன்னிட்டு இன்று ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் மேற்கு வாசலில் அமைந்துள்ள ஸ்ரீ பாலசுப்பிரமணியம் கோயில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபராதனை நடைபெற்றது. கோயிலில் அதிகாலையிலிருந்தே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்ததுடுன், மயில் காவடி, பால்குடம் எடுத்து நான்கு ரத வீதிகளில் வலம் வந்தனர்.
ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில், குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயில், குமரையா கோயில்களில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொண்டு வந்த பால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம், தீபராதனை நடைபெற்றது. பக்தர்கள் பால்குடம் மற்றும் அலகு குத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதனை போன்று பெருவயல் ரணபலி முருகன் கோயிலில் வள்ளி, பிரப்பன்வலசை பாம்பன் சுவாமிகள் கோயில், குயவன்குடி குமரகுருபர சுப்ரமணியர் கோயில், மேதலோடையில் பால தண்டாயுதபாணி கோயிலில், மறவர் கரிசல்குளத்தில் வில்வநாதர் கோயில், மேலக்கொடுமலூர் குமரன் கோயில், மாரியூர் பூவேந்தியநாதர் கோயியில், கடலாடி தண்ணீர் பந்தல் முருகன், முதுகுளத்தூர் சுப்ரமணியர் கோயில், சாயல்குடி வழிவிடுமுருகன் கோயில் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள், தீபராதனை நடந்தது. மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.