சங்கர நாராயண சுவாமி கோயில் குடமுழுக்கு விழா: ஏராளமான பக்தர்கள் தரிசனம்


தென்காசி: சங்கரன்கோவில் சங்கர நாராயணசுவாமி கோயிலில் நேற்று நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கர நாராயண சுவாமி கோயிலில் 2008-ல் குடமுழுக்கு விழா நடைபெற்றது. 16 ஆண்டுகளுக்கு பின்னர் திருப்பணிகள் செய்யப்பட்டு, குடமுழுக்கு விழா நடைபெற்றது.

இதற்காக கோயிலில் 66 யாககுண்டங்கள் அமைக்கப்பட்டன. கடந்த 16-ம் தேதி வேதபாராயணம், திருமுறை பாராயணத்துடன் குடமுழுக்கு விழா தொடங்கியது. தினமும் காலை, மாலையில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.கடந்த 19-ம் தேதி அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும் அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடைபெற்றது.

கடந்த 20-ம் தேதி முதல் யாக சாலை பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றன. நேற்று காலை ஆறாம்கால யாகசாலை பூஜை, தீபாராதனை, யாத்ராதானம், கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. காலை 9.20 மணிக்கு கோமதி அம்பாள் சமேத சங்கரலிங்க சுவாமி, சங்கர நாராயண சுவாமி, கோயில் விமானம் மற்றும் ராஜகோபுரத்துக்கு புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது.

விழாவில், அமைச்சர் பி.மூர்த்தி, தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர், எம்.பி. ராணிஸ்ரீ குமார், எம்எல்ஏ-க்கள் ஈ.ராஜா, சதன் திருமலைக்குமார், நயினார் நாகேந்திரன், முன்னாள் அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி, தென்காசிஎஸ்.பி. வி.ஆர்.ஸ்ரீனிவாசன் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

x