பெருமாளுக்கு கிடைத்தது பல்லாண்டு வாழ்த்து


பெரியாழ்வார்

பாண்டிய மன்னன் வல்லப தேவன் தனது படைகள் அனைவரையும் அணிவகுக்கச் செய்தான். பட்டத்து யானை முழு அலங்காரத்தோடு வரவழைக்கப்பட்டது. அதன்மீது சுவாமி பெரியாழ்வாரை அமர வைத்தான். யானையை மன்னன் ஓட்டிச் செல்ல, பெரியாழ்வார் கூப்பிய கரங்களுடன் அதன் மீது அமர்ந்திருந்தார்.

மதுரை மாசி வீதிகள் வழியாக வலம் வந்த ஊர்வலம் மதுரை கூடலழகர் கோயில் அருகே வந்தது. தன்னுடைய பரத்துவத்தையும், ஆத்மாக்கள் தன்னை அடைய வேண்டிய சரணாகதி மார்க்கத்தையும் எடுத்துரைத்த பெரியாழ்வாரைப் பார்க்க ஸ்ரீ மந் நாராயணனுக்கு ஆசை பிறந்தது. யானை மீது அமர வைத்து அவர் பவனிவரும் அழகைக் காண, கருடன்மீது அமர்ந்தபடி பறந்து வந்தார் ஸ்ரீ மந் நாராயணன்.

யானை மீது பெரியாழ்வார் தரிசனம் - ஸ்ரீவில்லிபுத்தூர்

ஊர்மக்கள் அத்தனை பேருக்கும் பெருமாளின் நேரடி தரிசனம் கிடைத்தது. யானை மீது அமர்ந்திருந்த பெரியாழ்வாரும் பெருமாளைக் கண்டார். பெருமாளிடம் ஏதாவது வரம் கேட்கலாம் என்ற எண்ணம் பெரியாழ்வாருக்கு ஏற்படவில்லை. ஓடிவரும் குழந்தையைப் பார்த்து தாய்க்கு ஏற்படும் பதைபதைப்புதான் பெரியாழ்வாருக்கும் ஏற்பட்டது.

‘நித்ய சூரிகள் புடைசூழ திருமாமணி மண்டபத்தில் வீற்றிருக்க வேண்டிய ஸ்ரீ மந் நாராயணன், திடீரென இப்படி பூமிக்கு வந்து விட்டாரே! அவரது திருமேனிக்கு ஏதும் பங்கம் வந்துவிடக் கூடாதே’ என்று கவலை கொண்டார் பெரியாழ்வார்.

யானையின் முதுகில் கிடந்த இரண்டு மணிகளையும் கையில் எடுத்துக்கொண்டு தாளம் இசைத்தபடி,

‘பல்லாண்டு பல்லாண்டு

பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரம்;

மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா!

உன் சேவடிச் செவ்வித் திருக்காப்பு’

- என்று தொடங்கி 12 பாடல்களை பாடினார்.

இறைவனை வணங்குவதில் பல நிலைகள் உள்ளன. இறைவனை தந்தையாகவும், தன்னை மகனாகவும் எண்ணி வணங்குதல். தன்னைக் காதலியாகவும், இறைவனைக் காதலனாகவும் எண்ணி வணங்குதல். தன்னைச் சீடனாகவும், இறைவனை குருவாகவும் எண்ணி வணங்குதல்... என ஒன்பது விதமான சம்பந்தங்கள் உள்ளன. இதற்கு நவவித சம்பந்தம் என பெயர்.

இந்த ஒன்பது நிலைகளில் மிக உயர்ந்தது தன்னைத் தாயாகவும், இறைவனை சேயாகவும் எண்ணி வணங்குதல். ஏனெனில் மற்ற எட்டுநிலைகளிலும் இறைவனிடம் இருந்து எதையாவது எதிர்பார்த்து வணங்குகிறோம். ஆனால், இந்த ஒன்பதாவது நிலையில் தான், இறைவனுக்கு கொடுக்கும் நிலையில் நாம் இருக்கிறோம்.

அந்த உயர்ந்த நிலையில்தான் பெரியாழ்வார் இருந்தார். அதனால்தான் ஸ்ரீ மந் நாராயணனை குழந்தையாகவும், தன்னை யசோதையாகவும் எண்ணியே, ‘திருப்பல்லாண்டு’ 12 பாடல்களையும், ‘பெரியாழ்வார் திருமொழி’ எனப்படும் 542 பாடல்களையும் அவர் பாடியிருக்கிறார்.

“பாண்டியன் கொண்டாட பட்டர்பிரான் வந்தானென்று

ஈண்டிய சங்கம் எடுத்தூத; வேண்டிய வேதங்கள் ஓதி

விரைந்து கிழியறுத்தான் பாதங்கள் யாமுடையப் பற்று”

‘உலக மாந்தர்கள் உய்வடைவதற்கான மார்க்கத்தை உரைத்த பட்டர்பிரானாகிய பெரியாழ்வார் வந்துவிட்டார் என்று வல்லப பாண்டியன் கொண்டாடினான். சங்குகள் முழங்க அவரை பவனி அழைத்து வந்தான். தேவையான வேதங்களைச் சொல்லி ஸ்ரீ மந் நாராயணனின் பரத்வத்தை நிரூபித்து, கல்தூணில் இருந்த பொற்கிழியை அடைந்தார் பெரியாழ்வார். அவரது திருப்பாதங்களே நாம் பற்ற வேண்டிய ஒன்றாகும்’ என்பது இப்பாடலின் பொருள்.

பெரியாழ்வார் போற்றி -3

x