புரி ஜெகந்நாதருக்கு புதிதாக தயாராகும் 3 தேர்கள்


புரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம்

ஸ்ரீ மந் நாராயணன் தனது 9-வது அவதாரமாக ஸ்ரீ கிருஷ்ணராக, உத்தரபிரதேசத்தில் யமுனை நதிக்கரையில் உள்ள மதுராவில் அவதரித்தார். பின்னர் யமுனையின் வடகரையில் உள்ள ஆயர்பாடியில் வளர்ந்தார். அதன்பின் குஜராத் மாநிலத்தில் அரபிக் கடலோரம் உள்ள துவாரகையில் புதிய பேரரசை ஏற்படுத்தி தனது 125-வது வயது வரை அரசாட்சி செய்தார்.

புரி ஜெகந்நாதர் கோவில்

புரி ஜெகந்நாதர்

துவாரகை மன்னர் ஸ்ரீ கிருஷ்ணர் அக்கால மன்னர்களின் வழக்கப்படி வெவ்வேறு குலங்களைச் சேர்ந்த 8 தேவியரை மணந்தார். இவர்களில் ஜாம்பவான் குலத்தைச் சேர்ந்த ஜாம்பவிதேவி முதல் மனைவி ஆவார். இவருக்குப் பிறந்த முதல் மகன் சாம்பன், தமது தந்தை ஸ்ரீ கிருஷ்ணருக்குப் பிறகு துவாரகையின் இளவரசனாக முடிசூட்டப்பட்டார்.

அஸ்தினாபுரி மன்னன் துரியோதனன் மகள் கிருஷ்ணையை, சாம்பன் மணந்தார். 125 வருடங்கள் இப்பூமியில் வாழ்ந்த ஸ்ரீ கிருஷ்ண பகவான், தனது திவ்ய திருமேனியைத் துறந்து விண்ணுலகம் எய்தினார்.

ஸ்ரீ கிருஷ்ண பகவானின் மூத்த சகோதரர் ஸ்ரீ பலராமர். இவர்களின் தங்கை ஸ்ரீ சுபத்திரா தேவி. ஒடிசா மாநிலத்தில் வங்கக் கடலோரத்தில் அமைந்துள்ள புரி என்ற தலத்தில் தனது தந்தை, பெரியப்பா மற்றும் அத்தை ஆகியோருக்காக மன்னர் சாம்பன் கட்டிய திருக்கோவிலே புரி ஜெகந்நாதர் கோவில்.

புரி ஜெகந்நாதர் கோவில்

அதன்பிறகு இக்கோவிலில் பல்வேறு மன்னர்களால் கட்டுமானப் பணி நடைபெற்றது. 1-ம் நூற்றாண்டில் மாளவ மன்னன் இந்திரத்யும்னன் இக்கோவிலை புனரமைத்தான். தற்போதைய கோயிலின் வடிவமைப்பை, 12-ம் நூற்றாண்டில் கங்க வம்சத்தைச் சேர்ந்த மன்னன் அனந்தவர்மன் சோடகங்க தேவா கட்டத் தொடங்கினார். அவரது மகன் அனங்காபிம தேவா முடித்து வைத்தார். அதன்பிறகும் பல்வேறு காலக்கட்டங்களில் இக்கோயில் புனரமைக்கப்பட்டது. எனினும், இயற்கை சீற்றத்தாலும், அந்நியர் படையெடுப்பாலும் 18 முறை இக்கோயில் சீர்குலைக்கப்பட்டது.

இன்றைக்கு புரி ஜெகந்நாதர் திருக்கோவில் தனது கட்டிடக்கலைக்காகவும், ஆன்மிக அனுபவத்துக்காகவும் மட்டுமின்றி, இதில் பொதிந்துள்ள விடைகாண முடியாத ஏராளமான அதிசயங்களாலும் உலகம் முழுக்கவிருந்து பக்தர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் கவர்ந்து கொண்டிருக்கிறது.

புரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம்

இக்கோவிலின் முக்கிய திருவிழா ஜூன் அல்லது ஜூலையில் நடைபெறும் தேரோட்டத் திருவிழாவே. ஒவ்வொரு ஆண்டும், ஜெகந்நாதர், பாலபத்ரா மற்றும் சுபத்ரா ஆகியோருக்கு புதிதாக 3 தேர்கள் செய்யப்படுகின்றன. ஜெகந்நாதருக்கு 45 அடி உயர நந்திகோஷம் என்ற தேரும், பாலபத்ராவுக்கு (பலராமர்) 44 அடி உயர தலத்வாஜா என்ற தேரும், சுபத்ராவுக்கு 43 அடி உயர தேபாதலனா என்ற தேரும் உருவாக்கப்படுகின்றன. ஜெகந்நாதரின் தேரில் 16 சக்கரங்களும், பாலபத்ரரின் தேரில் 14 சக்கரங்களும், சுபத்திரை தேரில் 12 சக்கரங்களும் வடிவமைக்கப்படும்.

இதற்கு தலா எட்டு அடி நீளம் கொண்ட 865 மரத்தடிகள் தேவைப்படுகின்றன. இவை தேர்களை அமைப்பதற்காக சுமார் 4,000 வடிவங்கள் மற்றும் அளவுகளில் செதுக்கப்படுகின்றன. மரங்களை ஒடிசா அரசு இலவசமாக கோயிலுக்கு வழங்குகிறது.

புரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம்

திருவிழாவுக்குப் பிறகு தேரிலிருந்து அகற்றப்பட்ட மரத்தடிகள் கோயில் சமையலறைக்கு கொண்டு செல்லப்பட்டு, நித்ய பிரசாதம் சமைக்க விறகாகப் பயன்படுத்தப்படுகின்றன, இந்தப் பிரசாதம் தினமும் குறைந்தது 30,000 பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

தேர்கள் தயாரிக்க மரங்களின் தேவைக்காக மகாநதி ஆற்றின் கரையிலுள்ள நாயகர், பௌத் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் 2,800 ஹெக்டேர் பரப்பளவில் 13 வகையான, 45 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதுதவிர பொதுமக்களும் தங்கள் நிலங்களில் மரங்களை வளர்த்து, தேரோட்டத்துக்கு காணிக்கையாக வழங்குகின்றனர்.

புரி ஜெகந்நாதர் கோவில் தேர்களுக்கான மரச் சக்கரங்கள் தயாராகும் பணி

x