ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் கொண்டிருக்கும் வடபத்ரசாயி பெருமாளுக்கு தினசரி புஷ்ப கைங்கர்யம் செய்வதையே பணியாக ஈடுபட்டிருந்தார் பெரியாழ்வார்.
அதேகாலத்தில் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஸ்ரீ வல்லபதேவன் என்ற மன்னன் ஆட்சிசெய்து வந்தார். மேரு மலையில் மீன் கொடி பறக்கச் செய்தவர் என்று இவரை சங்க இலக்கியங்கள் புகழ்கின்றன. ஒருமுறை இவர் நகர சோதனை செய்வதற்காக மாறு வேடத்தில் சென்றார். அப்போது மதுரை வீதியில் இருவர் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டார்.
‘ஓராண்டில் நான்கு மாதம் வரும் மழைக்காலத்துக்கு தேவையான பொருட்களை மக்கள் மற்ற எட்டு மாதங்களாக உழைத்து சேமிக்கின்றனர். இரவில் நிம்மதியாக தூங்குவதற்கு பகல் முழுக்க மக்கள் உழைக்கின்றனர். முதுமையில் சிரமப்படாமல் இருக்க இளமைக்காலம் முழுக்க பொருள் சேமிக்கின்றனர். அதுபோல் மறுமை எனப்படும் இறப்புக்கு பின்னர் மக்கள் நிம்மதியாக இருக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? யாரை அடைய வேண்டும்?’ என்று பேசிக்கொண்டிருந்தனர். அவர்களுக்கும் அதற்கான விடை தெரியவில்லை.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த மன்னனும் குழப்பம் அடைந்தான். அரண்மனைக்குத் திரும்பிய ஸ்ரீவல்லபதேவன், தமது அமைச்சரும், குருவுமான செல்வநம்பி சுவாமியை அழைத்தார்.
‘ஒருவன் இறந்த பின் நிம்மதியாக இருக்க அடைய வேண்டிய பரம்பொருள் யார்? அவரை அடைவதற்கு அவன் இப்போது உயிரோடு இருக்கும் போது என்ன செய்ய வேண்டும்? என்ற
தனது சந்தேகத்தை மன்னர் கேட்டார்.
தற்போதைய சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருக்கோஷ்டியூரைச் சேர்ந்தவர் சுவாமி செல்வநம்பி. ஸ்ரீவைஷ்ணவரான இவர் மகாவிஷ்ணு மீது அபார பக்தி கொண்டவர். வேதங்கள், இதிகாசங்கள், புராணங்களில் தேர்ச்சி பெற்றவர். ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் மீது மிகுந்த மரியாதை கொண்டவர். மன்னரின் சந்தேகத்துக்குரிய விளக்கம் செல்வ நம்பிக்கு தெரியும். ஆனால், பெரியாழ்வார் மூலம் அதனை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக செல்வநம்பி அமைதி காத்தார்.
அத்துடன், மன்னரின் சந்தேகத்தை தீர்க்க செல்வ நம்பி ஒரு யோசனை கூறினார். புலவர்கள் கூடிய அவையில் இச்சந்தேகத்துக்கு விளக்கம் கேட்கலாம். அந்த அவையில் ஒரு கல் தூணை நட்டுவைத்து, அதன் உச்சியில் ஆயிரம் பொற்காசுகள் கொண்ட பொற்கிழி மூட்டையைத் தொங்க விட வேண்டும். மன்னரின் சந்தேகத்துக்கு ஒருவர் அளிக்கும் விளக்கம் சரியானது தான் என்றால், அந்த கல் தூண் தானாக வளைந்து, பொற்கிழி கீழே தாழ்ந்து வரவேண்டும். அப்போது அதனை விளக்கம் சொன்னவர் எடுத்துக் கொள்ளலாம் என்று நிபந்தனையும் விதித்தார்.
புலவர்கள் பலரும் பல்வேறு விளக்கங்களைச் சொன்னார்கள். ஆனால் கல்தூண் வளையவும் இல்லை. பொற்கிழி கீழே தாழ்ந்து வரவும் இல்லை. நாட்கள் கடந்தன. விளக்கம் தெரியாமல் மன்னர் தவிப்புக்கு ஆளானார்.
உடனே, ஸ்ரீவில்லிபுத்தூரில் வசிக்கும் பெரியாழ்வாருக்கு இதற்கான விளக்கம் தெரிய வாய்ப்புள்ளது. அவரை சகல மரியாதைகளுடன் பல்லக்கில் அமர வைத்து மதுரைக்கு அழைத்து வர வேண்டும் என மன்னரிடம் செல்வநம்பி தெரிவித்தார். மன்னரும் இசைந்தார்.
அரசசபை அதிகாரிகள் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தனர். பெரியாழ்வாரிடன் தகவலைக் கூறினர். வேதங்களை எல்லாம் மறந்து, புஷ்ப கைங்கர்யத்தில் ஈடுபட்டிருக்கும் தான் எப்படி மன்னரின் சந்தேகத்தைப் போக்குவது என கலங்கினார். ஸ்ரீ வடபத்ரசாயி சன்னதிக்கு சென்று கண் கலங்கினார். அன்றைக்கு இரவு அவரது கனவில் பெருமாள் எழுந்தருளி, ‘தைரியமாக மதுரைக்கு செல்வீராக. வேதாந்தம் உமது வாக்கில் வரும்’ என அருளினார்.
அதன்படியே மதுரை வந்தார் பெரியாழ்வார். வேதங்களில் இருந்தும், ஸ்மிருதிகளில் இருந்தும் பல்வேறு உதாரணங்களை எடுத்துக் கூறி,
‘ஸ்ரீமந் நாராயணனே பரம்பொருள். ஸ்ரீமந் நாராயணனை சரணடைந்து கைங்கர்யம் செய்வதே ஓர் ஆத்மா மறுமையிலும் உஜ்ஜீவனம் அடைய ஒரே வழி’ என்பதை நிரூபித்தார்.
அவர் கூறி முடிக்கவும், அங்கிருந்த கல் தூண் தானாக வளைந்தது. பொற்கிழி அவரது கைக்கு அருகே வந்தது. அதனை அவர் எடுத்துக் கொண்டார்.
இதனைக் கண்டு கொண்டிருந்த அத்தனை பேரும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர். அரச சபை ஆர்ப்பரித்தது. வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிழி அறுத்த பெரியாழ்வாரைப் பார்த்து,
‘வந்தார் விஷ்ணு சித்தர்! வந்தார் பெரியாழ்வார்!, வந்தார் பட்டர் பிரான்’ என்று மன்னரும் கொண்டாடினான்.
பெரியாழ்வார் அளித்த விளக்கம் நம் எல்லோருக்கும் தான்.
பெரியாழ்வார் போற்றி-2