“கோதை பிறந்தவூர், கோவிந்தன் வாழும் ஊர்
சோதி மணிமாடம் தோன்றும் ஊர்,
நீதியால் நல்ல பத்தர் வாழும் ஊர்
நான்மறைகள் ஓதும் ஊர்
வில்லிபுத்தூர் வேதக்கோனூர்”.
- ஸ்ரீவில்லிபுத்தூரின் பெருமைகளைக் கூறும் பாடல் இது.
பாண்டிய நாட்டுத் திருப்பதிகளில் முக்கிய இடம்பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர். இங்கு ஸ்ரீவடபத்ரசாயி பெருமாள் கோயில் கொண்டுள்ளார். பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண்ணாகிய ஆண்டாள் நாச்சியாரும், அவரது தந்தை சுவாமி பெரியாழ்வாரும் அவதரித்த தலம் இது.
ஸ்ரீ ரங்கநாத பெருமாளையே மணந்த ஆண்டாள் நாச்சியார் அருகிலுள்ள மற்றொரு சன்னதியில் ஸ்ரீரங்கமன்னாருடன் எழுந்தருளியுள்ளார். இவர்கள் இருவருடன் கருடாழ்வாரும் மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ளார். இது வேறு எந்த தலத்திலும் இல்லாத சிறப்பாகும்.
வேதமே ஸ்வரூபமாகக் கொண்டவர் கருட பகவான். இவர் தமது இறக்கைகளை வீசினால் சாம வேதம் ஒலிக்குமாம். பெரிய திருவடி என அழைக்கப்படும் கருடபகவான், ஸ்ரீமந் நாராயணருக்கு வாகனமாகத் திகழ்கிறார். ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்கநாத பெருமாளை மணம் முடிக்கச் சென்ற ஆண்டாள் நாச்சியார் நீண்ட நேரம்காத்திருந்தார். ஆனால் பெருமாள் வரவில்லை. உடனே அவள், ‘பெருமாளை சீக்கிரம் அழைத்து வாரும்’ என்று, கருட பகவானைத்தான் வேண்டினாளாம். அவளது வேண்டுகோளை ஏற்று கருட பகவானும் பெருமாளை அழைத்து வந்தார். திருமணம் கைகூடிற்று.
கருடன் செய்த உதவிக்கு கைமாறாக, தான் பிறந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் மாப்பிள்ளையும், பெண்ணுமாக ஸ்ரீரங்கமன்னாருடன் தான் எழுந்தருளியிருக்கும் மூலஸ்தானத்தில் கருடபகவானுக்கும் இடமளித்தாள் ஆண்டாள் நாச்சியார்.
ஆண்டாள் நாச்சியாரின் தந்தையார் சுவாமி பெரியாழ்வார். வேதம் வல்லார் பலர் வாழ்ந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் வேயர் குலத்தில் ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் பெரியாழ்வார் அவதரித்தார். இவருக்கு விஷ்ணுசித்தன் என்று பெற்றோர் பெயரிட்டனர்.
வேதமே ஸ்வரூபமாகக் கொண்ட கருடாழ்வரைப் போல் இவரும், பிறந்தது முதல் மகாவிஷ்ணு மீதான நினைவிலேயே ஊன்றி இருந்தார். இதனால் கருடனின் அம்சமாகவே இவர் கருதப்படுகிறார்.
எம்பெருமானுக்குச் சிறுபணிவிடையாவது செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் இந்த ஆத்மா பிறவி எடுத்து பயனில்லை என்பது பெரியோர் வாக்கு. இதை உணர்ந்த ஆழ்வார், தானும் எம்பெருமானுடைய ஆனந்தத்துக்குரிய கைங்கர்யம் செய்ய விரும்பினார். என்ன விதமான கைங்கர்யம் செய்தால் நல்லது என்று புராண இதிகாஸங்களில் ஆராய்ந்தார். அதில் புஷ்ப கைங்கர்யம் சிறந்தது என கூறப்பட்டிருந்ததைக் கண்டார்.
வேதம் ஓதும் குலத்தில் பிறந்த பெரியாழ்வார் வேதம் ஓதுதலைக் கைவிட்டு, ஸ்ரீ வில்லிபுத்தூரில் நந்தவனம் அமைத்தார். விதவிதமான மலர்ச்செடிகளை வளர்த்தார். அந்த மலர்களைக் கொண்டு, மாலை தொடுத்து, ஸ்ரீ வடபத்ரசாயி பெருமானுக்கு அணிவிப்பதையே தினசரி பணியாகச் செய்தார்.
-பெரியாழ்வார் போற்றி -1