ராமநாதபுரம் நகருக்குள் அமைந்துள்ள கோதண்டராமர் திருக்கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் ஆனித்திருவிழா விமரிசையானது.
ஸ்ரீ ராமபிரான் இலங்கையை அடைவதற்காக சேதுக்கரையில் இருந்து கடலில் பாலம் அமைக்க திட்டமிட்டார். வானர சேனைகளுடன் ஸ்ரீராமபிரான் தங்கியிருந்த இடம் திருப்புல்லாணி. இது ராமநாதபுரத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவில், சேதுக்கரையோரம் அமைந்துள்ளது. இங்கு தர்ப்பைப்புல் படுக்கையில் சயனத் திருக்கோலத்தில் ஸ்ரீ ராமபிரானை தரிசிக்கலாம். இது ராமநாதபுரம் சேதுபதி அரண்மனை தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ளது.
ராமநாதபுரத்திலேயே ஸ்ரீ ராமபிரானுக்கு சேதுபதி மன்னர் மற்றொரு கோயில் கட்டினார். அது கோதண்டராமர் கோயில் எனப்படுகிறது. அரண்மனைத் தெருவிலேயே இக்கோயில் அமைந்துள்ளது. இங்கு நின்ற கோலத்தில் கோதண்டபாணியாக வில்லேந்திய நிலையில் ஸ்ரீ ராமபிரான் அருள்பாலிக்கிறார். ஸ்ரீ நரசிம்மர், அனுமன், சக்கரத்தாழ்வார், ஆழ்வார்கள் ஆகியோருக்கும், சிவபெருமானுக்கும் தனி சன்னதிகள் அமைந்துள்ளன.
மூலஸ்தானத்துக்கு பின்புறம் ஸ்ரீராமர் பாதம் அமைந்துள்ளது. கோயில் சுவர்களில் புராணக்கதைகளை விளக்கும் சிற்பங்களும், ஓவியங்களும் வடிக்கப்பட்டுள்ளன. மூன்று நிலை ராஜகோபுரம் அமைந்துள்ளது. கோயில் வாயிலில் துவாரபாலகர்களாக கருடாழ்வாரும், ஆஞ்சநேயரும் வீற்றிருக்கின்றனர்.
இக்கோயிலில் ஆனி மாதத்தில் நடக்கும் 10 நாள் உற்சவம் சிறப்பு வாய்ந்தது. முதல் நாள் கொடியேற்றமாகி, ஐந்தாம் நாள் திருவிழாவில் கருட சேவை உற்சவம் நடைபெறுகிறது. காலை, மாலை இரு வேளைகளிலும் வெவ்வேறு வாகனத்தில் சுவாமிக்கு அலங்காரமாகி நகரின் முக்கிய வீதிகளில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு சுவாமி காட்சியளிக்கிறார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கோதண்டராமர், சீதாதேவி திருக்கல்யாணம் விழாவின் 8-ம் நாளன்று நடைபெறுகிறது. முன்னதாக மாப்பிள்ளை அழைப்பு, மாலை மாற்றும் வைபவம் மற்றும் தேங்காய் உருட்டல் ஆகியன சிறப்பாக நடைபெறும். 9-ம் நாள் விழாவில் தேரோட்டம் நடைபெறும். 10-ம் நாள் விழாவில் தீர்த்தவாரியுடன் விழா நிறைவுபெறும்.
நடப்பு 2023-ம் ஆண்டு ஆனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள்:
19.6.2023 - திருக்கொடியேற்றம்.
23.6.2023 - கருட சேவை.
26.6.2023 - திருக்கல்யாணம்.
27.6.2023 - திருத்தேரோட்டம்.
28.6.2023 - தீர்த்தவாரி.