பழநி: இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பழநியில் நாளை (ஆக. 24) தொடங்க உள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கு ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. 2,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநியில் நாளையும் (ஆக. 24), நாளை மறுநாளும் (ஆக. 25) இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டு நிகழ்ச்சிகள் காலை 8.30 முதல் இரவு 8 மணி வரை நடைபெறும்.
நாளை (ஆக. 24) காலை 8.30 மணிக்கு திருவிளக்கு ஏற்றுதல், காலை 8.55 மணிக்கு 100 அடி கம்பத்தில் மாநாடு கொடி ஏற்றுதல் நடைபெறும். காலை 9.30 மணிக்கு தொடங்கும் மாநாட்டு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி, பி.கே.சேகர்பாபு, சச்சிதானந்தம் எம்.பி., செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஆதீனங்கள், நீதிபதிகள் பங்கேற்க உள்ளனர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்கின்றனர்.
மாநாட்டில் ஆன்மிகச் சொற்பொழிவு, கருத்தரங்கம், நாடகம், நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மாநாட்டு விழா மலர் மற்றும் ஆய்வு மலர் வெளியிடப்பட உள்ளன. மேலும், தமிழ்க்கடவுள் முருகனின் பெருமைகளை உலகறியும் வகையில் பறைசாற்றியவர்களுக்கு 15 முருகனடியார்களின் பெயர்களில் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
மாநாடு நடைபெறும் பழனியாண்டவர் கல்லூரி வளாகத்தில் 2,000 பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட அரங்கம், 500 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் உணவுக் கூடம், 200 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் விஆர் (விர்ச்சுவல் ரியாலிட்டி) மற்றும் 3டி திரையரங்கம், அறுபடை வீடு கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளன.
மாநாட்டு அரங்கம் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. ஒரு லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட உள்ளது. மாநாட்டு நிகழ்ச்சிகளை 22 இடங்களில் எல்இடி திரைகள் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன.
திண்டுக்கல், பழநி, சிவகிரிப்பட்டி சாலை உட்பட 6 இடங்களில் வாகனங்களை நிறுத்தும் வசதி செய்யப் பட்டுள்ளது. 2,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மதுரை, கோவை, திருப்பூர், திருச்சி உள்ளிட்ட ஊர்களிலிருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.