அழகன் கூத்தாடும் செப்பறை


செப்பறையில் அருளும் அழகிய கூத்தருக்கு தீப ஆராதனை

சிவபெருமானின் ஐந்து ஆடல் சபைகளில் (அம்பலங்கள்) தாமிரசபை திருநெல்வேலியில் அமைந்துள்ளது. திருநெல்வேலிக்கு அருகிலுள்ள செப்பறையிலும் காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் வீற்றிருக்கிறார். இங்கும் தாமிரசபை அமைந்துள்ளது. இதனாலேயே இந்த ஊருக்கு செப்பு+அறை = செப்பறை என்று பெயர் வந்தது. தாமிரபரணி நதியின் இடது கரையில் அமைந்துள்ள பழமையான தலம் இது.

திருநெல்வேலி - செப்பறை அழகிய கூத்தர் கோயில்

மேற்குத் தொடர்ச்சி மலையில் பொதிகைமலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆறு மலைகளில் பயணித்து, பாபநாசத்தில் தான் தரை தொடுகிறது. அங்கிருந்து கிழக்கு நோக்கி பாயும் இந்த நதி வீரவநல்லூர் அருகே அத்தாளநல்லூர் ஸ்ரீ ஆதிமூலப் பெருமாள் கோவிலுக்கு பின்புறம் வடக்கு நோக்கி திரும்புகிறது. திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலைத் தாண்டியதும் மீண்டும் கிழக்கே திரும்புகிறது.

தொடர்ந்து இந்த நதி கிழக்கே பயணித்து திருநெல்வேலிக்கு முன்னதாக கருப்பந்துறையில் மீண்டும் வடக்கு நோக்கி திரும்புகிறது. அங்கிருந்து குறுக்குத்துறை, திருநெல்வேலி, சிந்துபூந்துறை, மணிமூர்த்தீஸ்வரம், செப்பறை அழகிய கூத்தபிரான் கோயில் வரை வடக்கு நோக்கியே பயணித்து, மீண்டும் கிழக்கு நோக்கி திரும்புகிறது.

கோயிலின் ஒருபுறம் தாமிரபரணி நதியும், பிற மூன்று பகுதிகளிலும் வயல்வெளியுமாக ரம்மியமான இடத்தில் செப்பறை அழகிய கூத்தர் கோயில் கொண்டுள்ளார். மிகப்பழமையான சன்னதி. மூலவர் நெல்லையப்பர். தனிச் சன்னதியில் காந்திமதி அம்பாள் வீற்றிருக்கிறார். இதுதவிர தாமிரசபையில் உள்ள அழகியகூத்தர் எனப்படும் நடராஜ சுவாமி பேரழகு வாயந்தவர். மார்கழி திருவாதிரையிலும், ஆனி உத்திரம் நாளிலும் இங்கு 10 நாள் திருவிழா நடைபெறுகிறது.

ஆனி உத்திரத்துக்கு ஒன்பது நாட்களுக்கு முன்பாக செப்பறையில் கொடியேறுகிறது. விழா நாட்களில் காலை, மாலை இரு வேளைகளிலும் சுவாமி நெல்லையப்பரும், காந்திமதி அம்பாளும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருவர்.

திருநெல்வேலி - செப்பறை அழகிய கூத்தர் (நடராஜர்) சிவகாமி அம்மையுடன்...

அழகிய கூத்தர் சந்நிதி

விழாவின் 7-ம் நாளன்று ஸ்ரீநடராஜ பெருமான் தாமிர சபையில் இருந்து திருவிழா மண்டபத்துக்கு எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு வெள்ளை சார்த்தியும், பின்னர் சிவப்பு சார்த்தியும், கடைசியாக பச்சை சார்த்தியும் தீபாராதனை நடைபெறும்.

9-ம் திருநாளன்று தேரோட்டம் நடைபெறும். 10-ம் திருநாளான ஆனித் திருமஞ்சனம் நாளன்று பகல் 2 மணிக்கு அழகிய கூத்தருக்கு ஆனித்திருமஞ்சனம் மற்றும் நடன தீபாராதனை விமரிசையாக நடைபெறும். மாலையில் சுவாமி வீதி உலா வருவார்.

திருநெல்வேலியில் இருந்து மதுரை நெடுஞ்சாலையில், தாழையூத்தில் இருந்து ராஜவல்லிபுரத்துக்கு பிரியும் கிளைச் சாலையில் செப்பறை அமைந்துள்ளது.

நடப்பாண்டு ஆனி திருமஞ்சனத் திருவிழா நிகழ்வுகள்:

17.06.2023 - திருவிழா கொடியேற்றம்.

22.06.2023 - வெள்ளை, சிவப்பு, பச்சை சார்த்தி திருக்கோலம்.

24.06.2023 - திருத்தேரோட்டம்.

25.6.2023- ஆனி திருமஞ்சனம்.

செப்பறை அழகிய கூத்தபிரான் கோயில் திருத்தேரோட்டம்

x