`நான் தான் மதுரை ஆதீனம்'- உயர்நீதிமன்றத்தில் நித்தியானந்தா திடீர் வழக்கு


நித்தியானந்தா

மதுரை ஆதீனமாக ஞானசம்பந்த தேசிகரை நியமித்தது செல்லாது எனவும், தானே அடுத்த மதுரை ஆதீனம் எனவும் கூறி, நித்தியானந்தா சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பிடதியில் தியான பீடம் என்ற பெயரில் ஆசிரமம் அமைத்திருந்த நித்தியானந்தா, திருவண்ணாமலையில் ஆசிரமம் ஒன்றை அமைத்திருந்தார். பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது தொடர்ந்து முன்வைக்கப்பட்ட நிலையில், நடிகையும், அவரது பக்தையுமான பெண் ஒருவருடன் அவர் அந்தரங்கமாக இருக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

நித்தியானந்தா

இதனிடையே, 292வது மதுரை ஆதீனம் அருணகிரிநாத தேசிகர், தனது இளைய ஆதீனமாக கடந்த 2012ம் ஆண்டு நித்தியானந்தாவை அறிவித்ததற்கு இந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து அவரை அப்பொறுப்பில் இருந்து நீக்கி, அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனிடையே தொடர் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நித்தியானந்தா, இந்தியாவில் இருந்து தப்பி, கைலாசா என்ற புதிய நாட்டை உருவாக்கியுள்ளதாக சமூக வலைதளங்களில் அறிவித்திருந்தார். தன் நாட்டிற்கு என தனிக்கொடி, நாணயம், பாஸ்போர்ட் ஆகியவற்றையும் அவர் வெளியிட்ட போதும், இந்திய அதிகாரிகளால் இதுவரை அவரது இருப்பிடத்தை உறுதி செய்ய முடியவில்லை.

மதுரை ஆதீனம் அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமியுடன் நித்தியானந்தா

இதனிடையே, தன்னை இளைய ஆதீனம் பட்டத்தில் இருந்து விடுவித்தது செல்லாது எனக்கூறி நித்தியானந்தா தாக்கல் செய்த மனு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நித்தியானந்தா சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், 293வது மதுரை ஆதீனமாக ஞானசம்பந்த தேசிகர் நியமிக்கப்பட்டது செல்லாது எனவும், தானே அடுத்த மதுரை ஆதீனம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுள்ள உயர்நீதிமன்றம், இது குறித்து விளக்கமளிக்க மதுரை ஆதீனம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

293வது மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்

இதையும் வாசிக்கலாமே...

x