ஆந்திர மாநிலம் காளஹஸ்தி திருத் தலத்தில் மகா பெரியவா முகாமிட்டிருந்தார்.
அப்போது தன் சிப்பந்தி ஒருவரை அழைத்து, ‘ஜெமினி ஸ்டூடியோ அதிபர் வாசனை என்னை வந்து பாக்கச் சொல்லு’ என்று உத்தரவிட்டார்.
பெரியவா உத்தரவை செவிமடுத்த அடுத்த கணமே சென்னையில் எஸ்.எஸ். வாசன் அலுவலகத்துக்குத் தகவல் அனுப்பி விட்டார் அந்த சிப்பந்தி.
விஷயம் எஸ்.எஸ். வாசனுக்குத் தெரிவிக்கப் பட்டது. தன்னை வரச் சொன்னார் என்கிற மகானின் உத்தரவில் பெரிதும் நெகிழ்ந்து போனார் வாசன். மகானிடம் இருந்து தனக்குக் கிடைத்த மிகப் பெரிய அனுக்கிரஹம் என்று பூரித்தார். பிறகு தன் நிறுவனத்தில் பணிபுரியும் ராமமூர்த்தி என்பவரை அழைத்து விஷயம் சொல்லி, முதல் கட்டமாக காளஹஸ்திக்குப் பயணப்படச் சொன்னார். மகா பெரியவாளை தரிசிப்பதற்கு அவருக்குத் தோதான நேரம் போன்ற தகவல்களைப் பெற்று வருமாறு கூறினார்.
தனியாக செல்வதாகத்தான் இருந்தார் ராமமூர்த்தி. ஆனால், புறப்படுவதற்கு சில மணித்துளிகள் முன் தற்செயலாக எழுத்தாளர் மணியன் வந்தார். விகடன் இதழில் பணிபுரிந்து வந்த பிரபல பத்திரிகையாளர். பின்னர், படத் தயாரிப்பாளராகவும் ‘இதயம் பேசுகிறது’ வார இதழ் அதிபராகவும் ஆசிரியராகவும் இருந்தவர்.
காளஹஸ்தி செல்வதற்காகத் தயாராகிக் கொண்டிருந்த ராமமூர்த்தியிடம், ‘‘எங்கே புறப்படறேள்?’’ என்று கேட்டார் மணியன்.
விஷயத்தை ரத்தினச்சுருக்கமாகச் சொன்னார் ராமமூர்த்தி.
மணியன் முகத்தில் ஒரு பிரகாசம். ‘‘மகா பெரியவாளைத் தரிசனம் பண்ணப் போறேளா... நானும் உங்ககூட வரலாமா?’’
‘‘தாராளமா வரலாமே... கார்ல நான் மட்டும்தான் போறேன். அதுல இன்னும் இடம் இருக்கு. உங்களுக்கு ‘ஓகே’ன்னா தாராளமா வாங்களேன்’’ என்றார் ராமமூர்த்தி.
மணியனுக்கு மட்டற்ற சந்தோஷம்.
காளஹஸ்தி செல்வதற்கு இப்போதைக்கு இரண்டு பேர் தயார்.
இருவரும் அந்த அறையில் பேசிக் கொண்டிருந்தபோது பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் உள்ளே நுழைந்தார்!
மூவரும் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக் கொண்டனர்.
பிறகு, ராமமூர்த்தியும் மணியனும் காளஹஸ்தி செல்லத் தயாராக இருப்பதைப் பற்றிப் பேச்சுவாக்கில் தெரிந்து கொண்டார் ஜெயகாந்தன்.
‘‘என்ன விஷயமா காளஹஸ்தி போறீங்க?’... ஜெயகாந்தன் இயல்பாகக் கேட்டார் .
விஷயத்தைச் சொன்னார் ராமமூர்த்தி.
‘‘ஓ... அந்த மகானைப் பாக்கப் போறீங்களா?’’ என்று உற்சாகமானவர், ‘‘கார்ல எனக்கும் இடம் இருக்குமா?’’ என்று அதே பரவசத்தோடு கேட்டார்.
‘‘தாராளமா... நானும் மணியனும்தான் போகப் போறோம். மூணு பேர் வசதியா உட்கார்ந்துண்டு போகலாம். நீங்களும் வாங்களேன்’’ என்றார் ராமமூர்த்தி. சொல்லி முடித்தபின் அவருக்கு ஒரு சந்தேகம்... ‘முற்போக்குச் சிந்தனை கொண்ட ஒரு எழுத்தாளருக்கு மகா பெரியவாளை ஏன் பார்க்க வேண்டும்? இவர் பெரிய ஆன்மிகவாதியும் கிடையாதே’ என்று.
ஆம்! எழுத்தாளர் ஜெயகாந்தனைப் பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது.
தீவிரமான நாத்திகக் கொள்கை கொண்டவர். ஆனால், முழு நாத்திகவாதி அல்ல. தமிழ் இலக்கிய ஆர்வலர்களைத் தன் படைப்புகளால் கவர்ந்தவர்.
தன்னையே சந்தேகக் கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்த ராமமூர்த்தியைப் பார்த்து விட்டு, ‘‘என்ன சார்... இரும்பு அடிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலைன்னு யோசிக்கிறீங்களா?’’ என்று சமயோசிதமாகக் கேட்டார் ஜெயகாந்தன்.
ஒரு புன்னகையுடன், ‘‘ஆமாம்... மகா பெரியவா ஒரு பெரிய மகான். முற்றும் துறந்த துறவி. உங்களோட கொள்கையைப் பற்றி நான் நன்றாக அறிவேன். நீங்க எதுக்கு அவரைப் பார்க்கணும்னுதான்...’’ என்று இழுத்தார் ராமமூர்த்தி.
‘‘உங்க சந்தேகம் புரியுது சார்... ரொம்ப நாளா என்கிட்ட சில கேள்விகள் ஓடிட்டே இருக்கு. அதுக்கு அவர்கிட்ட கேட்டால்தான் பதில் கிடைக்கும்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. கிடைச்ச இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கலாமேனுதான் சொன்னேன்.’’
‘‘சரி... எது நடக்க வேண்டுமோ அதுதான் நடக்கும். நடப்பனவற்றை எல்லாம் அந்த மகானே அறிவார்’’ என்று ராமமூர்த்தி ஒரு புன்னகையுடன் சொல்லி விட்டு, எழுந்தார்.
மூவரும் அறையை விட்டு வெளியே வந்தார்கள். காரில் ஏறினார்கள்.
காளஹஸ்தியை நோக்கி பயணத்தைத் துவங்கியது கார்!
ஏறத்தாழ 3 மணி நேரப் பயணத்துக்குப் பிறகு காளஹஸ் தியை அடைந்தார்கள். ஊருக்குள் மகான் முகாம் இருக்கிற இடத்தை விசாரித்துப் போய்ச் சேர்ந்தனர். மூவரும் மகா பெரியவா திருச்சந்நிதி முன்னால் நின்று கொண்டிருந்தார்கள். தன் அருட்பார்வையால் மூவரையும் பார்த்தார் மகான்.
மகா பெரியவாளைப் பார்த்து வணங்கிய மணியன், தான் நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்து ஒரு சில அடிகள் முன்னுக்கு வந்தார். மகானின் திருமுகம் பார்த்து, ‘‘பெரியவா... இவர் பேரு ராமமூர்த்தி. ஜெமினில வேலை பண்றார். வழுத்தூர் ராஜகோபால சாஸ்திரிகளோட புள்ளை’’ என்றார்.
எஸ்.எஸ். வாசன் உத்தரவுப்படி காளஹஸ்திக்கு ராமமூர்த்தி மட்டும்தான் வருவதாக இருந்தது. ஆனால் மணியனும் ஜெயகாந்தனும் சேர்ந்து கொள்ள... அவர்களையும் இங்கு அழைத்து வந்திருக்கிறார்.
வாசன் சொல்லித்தான் மகா பெரியவாளிடம் வந்திருக்கிறார் ராமமூர்த்தி. சொல்லப்போனால் அவர்தான் சற்று முன்னுக்கு வந்து தன்னை அறிமுகம் செய்து கொண்டு மற்ற இருவரையும் அறிமுகப்படுத்த வேண்டும். அதுதான் மரபு.
அதேசமயம், மணியன் வலிய முன்னுக்கு வந்து அறிமுகப்படுத்தியதைப் பற்றி எதுவும் தவறாக எண்ணவில்லை ராமமூர்த்தி. காரணம், மணியன் பிரபல எழுத்தாளர் என்பதால், அங்கு இருக்கும் பலரும் அவரை நன்றாகவே அறிவார்கள். ராமமூர்த்திக்கும் இது தெரியும்.
தன்னைப் பற்றி மகா பெரியவாளுக்கு அறிமுகம் செய்து வைத்ததும், அவருக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து விட்டு, பவ்யமாக இரண்டடி பின்னுக்கு வந்தார் ராமமூர்த்தி. ஒரு வார்த்தையும் பேசவில்லை.
அடுத்து ஜெயகாந்தனையும் அறிமுகப்படுத்தி வைத்தார் மணியன். எழுத்துலகில் பிரபலமாக இருக்கும் அவரைப் பற்றி ஓரிரு வார்த்தைகளும் சொன்னார்.
‘‘இவரோட பேரு என்ன சொன்னே?’’ என்று ஜெயகாந்த னைக் காட்டி மணியனிடம் கேட்டார் பெரியவா.
‘‘ஜெயகாந்தன்’’ என்றார் மணியன்.
தன் வலது உள்ளங்கையை வலக்காதுக்குப் பின்னால் வைத்துக் கொண்டு, ‘‘என்னது... முனுசாமியா?’’ என்று கேட்டார் மகான்.
‘ஜெயகாந்தன்’ என்று பெயர் சொல்லி அறிமுகப்படுத்தி வைத்தது, மகா பெரியவா காதுகளில் விழவில்லை போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டு, அவர் பெயரை மீண்டும் உரக்கச் சொன்னார் மணியன்.
‘மகா பெரியவாளுக்குக் காது கேட்கவில்லை’ என்று மணியன் மட்டுமல்ல... மற்றவர்களும் அப்படித்தான் நினைத்தார்கள்.
ஆனால் மீண்டும், ‘‘முனுசாமியா..?’’ என்று கேட்டார் மகான்.
‘‘இல்லை பெரியவா... அவர் பேர்....’’ என்று திரும்பவும் உச்சரித்தார்.
மூன்றாவது முறையாக, ‘‘ஓ... முனுசாமியா?’’ என்று தங்குதடை இல்லாமல் கேட்டார் மகா ஸ்வாமிகள்.
மணியன் கொஞ்சம் களைப்பானார். அவர் மட்டுமல்ல... மகானுக்கு சேவை செய்யக் கூடியவர்களும், பக்தர்களும்கூட ‘பெரியவாளுக்குக் காது கேக்கலை போலிருக்கு’ என்று முணுமுணுத்துக் கொண்டார்கள்.
சரியாக அந்த நேரத்தில் யாரோ சில முக்கியஸ் தர்கள் வந்தார்கள். அவர்களைத் தன் எதிரே அமர வைத்துவிட்டு, மகா பெரியவா பேசிக் கொண்டிருந்தார்.
ராமமூர்த்தி, மணியன், ஜெயகாந்தன் ஆகிய மூவரும் அங்கேயே நின்று கொண்டிருந்தார்கள்.
‘புதிதாக வந்தவர்கள் மகா பெரியவாளிடம் பேசி முடித்து விட்டுப் போகட்டும். அதன் பின் எஸ்.எஸ். வாசன் தரிசனத்துக்கு வருவது பற்றி விரிவாகப் பேசலாம்’ என்று அமைதியாக இருந்தார் ராமமூர்த்தி.
சில நிமிடங்கள் கடந்தன. தாங்கள் வந்த காரியம் முடிந்து விட்டது என்பது போல், அதுவரை மகா பெரியவாளிடம் பேசிக் கொண்டிருந்தவர்கள் எழுந்தார்கள். அவர்களுக்குப் பிரசாதம் கொடுத்து ஆசிர்வதித்து அனுப்பினார் மகான்.
அவர்கள் புறப்பட்டுப் போன பின், மணியன் பக்கம் மகா பெரியவா திரும்பினார்.
மகான் தன்னிடம் ஏதோ கேட்கப் போகிறார் என்பது புரிந்து ஒரு சில அடிகள் முன்னுக்கு வந்தார்.
மணியனைப் பார்த்து மகா பெரியவா, ‘‘அவர் யாருங்கறதை சொன்னே... இவர் யாருன்னு சொன்னே...’’ என்று ராமமூர்த்தியையும், ஜெயகாந்தனையும் காண்பித்து விட்டு, ‘‘எல்லாம் சரி... நீ யாருன்னு இதுவரைக்கும் சொல்லலியே...’’ என்றாரே, பார்க்கணும்!
மணியன் மெள்ள சங்கடப்பட்டு, ‘‘பெரியவா... நான்தான் ஆனந்த விகடன் மணியன்... மணியன்...’’ என்றார்.
பரப்பிரம்மத்தின் முகத்தில் ஒரு புன்னகை.
அந்தப் புன்னகையின் அர்த்தத்தை அங்கு வந்த ஒரு சிலர் மட்டுமே அறிவர்!
எஸ்.எஸ். வாசன் வருகை குறித்து மகா பெரியவா சந்நிதானத்தில் தெரிவிக்கலாம் என்று ராமமூர்த்தி மெள்ள ஆரம்பிக்க இருந்தார்.
அந்த நேரம் பார்த்து மறுபடியும் வேறு சிலர் மகா பெரியவாளிடம் அழைத்து வரப்பட்டார்கள்.
மீண்டும் காத்திருக்க ஆரம்பித்தார்கள் மூவரும்!
(ஆனந்தம் தொடரும்...)
சென்ற அத்தியாயத்தை வாசிக்க:
மகா பெரியவா: அருளே ஆனந்தம் - 35