ஆடல்வல்லானாகிய சிவபெருமானின் ஆனந்த நடனத்தைக் காண வியாக்ரபாதரும், பதஞ்சலி முனிவரும் சிதம்பரத்தில் தவம் மேற்கொண்டனர். அவர்களுக்கு நடனக்காட்சி தந்தருள சிவபெருமான் இசைந்தார். அந்த நாள் ஆனி உத்திரம். இதனை அறிந்த இந்திராதி தேவர்கள், திரிசகஸ்ர முனிவர்கள், உபமன்யு முனிவர் என்று அனைவரும் தில்லையில் கூடினார்கள்.
அங்கே பேரொளி ஒன்று தோன்றியதும், தேவதுந்துபி வேகமாக முழங்கியது. நந்தீகேஸ்வரர் தன் பொற்பிரம்புடன் வந்தருளினார். கருணையே வடிவான சிவன் நடராஜராகவும், தாய் பார்வதி சிவகாம சுந்தரியாகவும் காட்சியளித்தனர்.
நடராஜர் புலித்தோல் உடுத்தி, உடுக்கை, அனல், மான், மழு, நாகாபரணம் அணிந்து நின்றார். வலக்கையால் டமருகத்தை அடித்தும், இடக்கையில் அக்னி ஏந்தியும், ஒருகையால் அபயம் அளித்தும், மறுகையால் பாதத்தைக் காட்டியும் நடனமாடினார். அவரின் சிவந்த சடைகள் எட்டுத்திக்கும் அசைந்தாடின. அந்த நடன தரிசனத்தை இன்றும் சிதம்பரத்தில் நாம் தரிசிக்கிறோம்.
சிதம்பரத்தில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதத்தில் ஆனித் திருமஞ்சன ஆனந்த தரிசன விழாவும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த 2 விழாக்களின்போது மட்டும் மூலவர் நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாள் வீதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்கள். இதனால் இந்த இரு விழாக்களும் தனி சிறப்பு பெறுகின்றன.
ஆனி உத்திர விழாவில் கொடியேற்றம் தொடங்கி எட்டாம் திருநாள் வரை உற்சவ மூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், சோமாஸ்கந்தர், சிவானந்த நாயகி, சண்டேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் தனித்தனியாக வெள்ளி மற்றும் தங்க வாகனங்களில் வீதியுலா வருவார்கள். ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா நடைபெறும். அன்று பஞ்சமூர்த்திகளும் ஐந்து தேர்களில் எழுந்தருள்வார்கள்.
மேலும் அப்போது நடராஜ பெருமானே தேரில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளிலும் உலா வருவார்.
ஆனி உத்திரம் நாளன்று அதிகாலை 3 மணி முதல் 6 மணிவரை சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் மகா அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் 10 மணிக்கு சித் சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடக்கிறது. பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித் திருமஞ்சன ஆனந்த நடனம் புரியும் அற்புதக் காட்சி நடக்கிறது. ஆனந்த நடனம் புரிந்தவாறு ஞானாகாச சித்சபைக்கு சுவாமியும், அம்பாளும் எழுந்தருள்வார்கள். தொடர்ந்து தீபாராதனை நடைபெறும். அன்று இரவு அபிஷேகம் முடிந்து கொடியிறக்கப்படும்.
பஞ்ச சபைகளான திருவாலங்காடு ரத்தின சபை, சிதம்பரம் பொன்னம்பலம், மதுரை வெள்ளியம்பலம், திருநெல்வேலி தாமிர சபை, குற்றாலம் சித்திர சபை இவற்றில் இந்த அபிஷேகங்களைத் தரிசிப்பது சிறப்பு.