சேலம்: சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில், ஆடிப்பண்டிகை முடிவடைந்து, கோயிலின் உண்டியல்களில் இருந்த காணிக்கைகள் எண்ணப்பட்ட நிலையில், அதில் ரூ.26.58 லட்சம் ரொக்கம், 65 கிராம் தங்கம், 454 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தது.
சேலத்தின் பிரசித்தி பெற்ற கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில், புகழ்பெற்ற ஆடிப்பண்டிகை ஜூலை 23-ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி கடந்த 10-ம் தேதியுடன் நிறைவடைந்தது. சேலம் மாநகரின் மிகப்பெரிய ஆன்மிகத் திருவிழாவான ஆடிப்பண்டிகை நிறைவடைந்த நிலையில், கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் இருந்த உண்டியல்கள் வியாழக்கிழமை திறக்கப்பட்டு, அதில் பக்தர்களால் செலுத்தப்பட்டிருந்த காணிக்கைகள் எண்ணப்பட்டது.
இதில், கோயிலில் நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ள 10 உண்டியல்கள், திருவிழாவை ஒட்டி வைக்கப்பட்ட 8 தற்காலிக உண்டியல்கள் ஆகியவை இன்று திறக்கப்பட்டு, காணிக்கைகள் எண்ணப்பட்டன. இந்நிகழ்வில், இந்துசமய அறநிலையத்துறை சார்பில் சிறப்பு ஆய்வாளர்கள் கதிரேசன், கோவிந்தராஜன், உமா, கோயில் அறங்காவலர் சக்திவேல், கோயில் செயல் அலுவலர் அமுதசுரபி, கோயில் அறங்காவலர்கள், அறநிலையத்துறை ஊழியர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கோயில் உண்டியல்கள் கடந்த ஜூன் 24-ம் தேதிக்குப் பிறகு ஒரு மாதத்துக்கு பின்னர் தற்போது திறக்பப்பட்டது. கோயிலின் உண்டியல்களில், ரூ. 26.58 லட்சம் ரொக்கம், 65 கிராம் தங்கம், 454 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தது.