மனிதர்களுக்கு 24 மணி நேரம் என்பது ஒரு நாளாகவும், 365 நாட்களைக் கொண்டது ஓராண்டாகவும் கணக்கிடப்படுகிறது. இந்த ஓராண்டு என்பதே விண்ணவர்களாகிய தேவர்களுக்கு ஒரு நாளாகும். பொதுவாக, கோயில்களில் தினமும் ஆறுகால பூஜை நடைபெற வேண்டும் என ஆகம விதி கூறுகிறது. அதாவது, அதிகாலை 4 மணிக்கு திருவனந்தல் பூஜை, 6 மணிக்கு காலசந்தி பூஜை, பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 7 மணிக்கு ராக்கால பூஜை, இரவு 9 மணிக்கு அர்த்தஜாமம் எனப்படும் பள்ளியறை பூஜை என ஆறுகால பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
இதுபோல், அபிஷேகப் பிரியரான சிவபெருமானை, தேவர்களும் தினமும் 6 வேளை அபிஷேகம் செய்து பூஜிக்கிறார்கள். அதாவது மனிதக் கணக்கில், ஓராண்டில் ஆறு அபிஷேகங்கள். தேவர்களின் கணக்கில் ஒருநாளில் ஆறுகால அபிஷேகங்கள் என அவை கணக்கிடப்படுகின்றன.
இதன் அடிப்படையில், மூன்று முறை நட்சத்திர நாளிலும், மூன்று முறை திதியிலும், அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.
அதன்படி மார்கழி திருவாதிரை, சித்திரை திருவோணம் மற்றும் ஆனி உத்திரம் ஆகிய மூன்று நட்சத்திர நாட்களிலும், ஆவணி, புரட்டாசி, மாசி ஆகிய 3 மாதங்களில் வளர்பிறை சதுர்த்தசி அன்றும் நடராஜருக்கு நடைபெறும் அபிஷேகங்கள் சிறப்பு வாய்ந்தவை. அனைத்து சிவாலயங்களிலும் ஆண்டுக்கு இவை ஆறு முறையும் நடராஜருக்கு விமரிசையாக அபிஷேகம் நடக்கிறது.
தேவர்களுக்கு அதிகாலைப் பொழுது என்பது மார்கழி மாதமாகும். இதனால்தான், மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று நடராஜருக்கு அதிகாலை வேளையில் ஆருத்ரா அபிஷேகம் நடைபெறுகிறது. அடுத்து, தேவர்களின் பின்காலைப் பொழுதான மாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசியன்று காலை 6 மணிக்கும், தேவர்களுக்கு உச்சிக்காலமாகிய சித்திரை மாதத்தில் திருவோண நட்சத்திரத்தன்று மதியம் 12 மணிக்கும் அபிஷேகம் செய்யப்படுகிறது.
இதையடுத்து, தேவர்களின் மாலைப் பொழுதான ஆனி மாதத்தில் உத்திரத்தன்று மாலை 4 மணிக்கும், தேவர்களின் இரவுப் பொழுதான ஆவணி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தசியன்று இரவு 7 மணிக்கும், தேவர்களின் பின்னிரவான புரட்டாசி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தசியன்று இரவு 9 மணிக்கும் சிவாலயங்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.
இன்னும் சொல்லப்போனால், இவை ஆறு அபிஷேகங்களிலும், மார்கழி திருவாதிரை, ஆனி உத்திரம் நாட்களில் நடைபெறும் அபிஷேகங்கள் சிறப்பு வாய்ந்தவை.
சிதம்பரம் தொடங்கி பெரும்பாலான சிவாலயங்களில் இவ்விரு நாட்களும் 10 நாள் திருவிழா நடைபெறுவது வழக்கம். மார்கழி திருவாதிரைக்கு முந்தைய நாளிலும், ஆனி உத்திரத்துக்கு முந்தைய நாளிலும் தேரோட்டம் நடைபெறும்.
சிதம்பரம், மதுரை, திருநெல்வேலி, திருவானைக்கோவில் போன்ற பெரிய கோயில்களில் ஆயிரங்கால் மண்டபம் அமைந்திருக்கும். ஆனி உத்திரம் நாளில் சுவாமியையும், அம்பாளையும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளச் செய்து சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும்.
இந்நாட்களில் அருகிலிருக்கும் தலத்துக்கு சென்று மனம் குளிர தரிசிக்கலாம்.
சிதம்பரம் சிவகாம சுந்தரி அம்பாள் சமேத நடராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா நிகழ்வுகள்:
ஆனி உத்திர திருமஞ்சன திருவிழா கொடியேற்றம் 17.6.2023.
ஆனி உத்திர தேரோட்டம் - 25.6.2023.
ஆனி உத்திர திருமஞ்சனம் - 26.6.2023.